நெட்டெழுத்தின் மேற்புரிய,' எனக் கூட்டுக். நெட்டெழுத்துக்கள் - ரா, ரீ, ஈ, னா, னீ முதலியன. வற்புறுத்தல் - கூறுஞ் செய்தியை மனத்திற் பதியச் செய்தல். பழைய வுரையில், "மடவாய்," என்ற தொடர் பொருள் பெறாது போயிற்று. (95) இருள்பரந் தாழியான் றன்னிறம்போற் றம்மு னருள்பரந்த வாய்நிறம் போன்று - மருள்பரந்த பால்போலும் வெண்ணிலவும் பையர வல்குலாய்! வேல்போலும் வீழ்துணையி லார்க்கு. [மாலைப்பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது] (பத.) பை - படத்தோடு கூடிய, அரவு - பாம்பினையொத்த, அல்குலாய் - நிதம்பத்தினையுடய தோழியே! அழியான்தன் - சக்கரத்தையுடைய மாயவனது, நிறம் போல் - கரிய நிறத்தைப் போன்று, இருள் பரந்து - எங்கும் இருள் சூழப்பெற்று, தம்முன் - அம்மாயவனின் முன்னோனாகிய பலராமனது, அருள்பரந்த - பேரன்பு மிகுநத, ஆய் - (கண்டார்) நீள நினைந்து பார்க்கும்படியான, நிறம்போன்றும் - வெண்மை நிறத்தைப் போலவும், மருள் - (கண்டார்) மயங்கி வியக்கும்படியான தன்மை, பரந்த - நிரம்பிய, பால்போலும் - பாலின் நிறத்தைப் போன்றும், (தோன்றும்படியான,) வெண் நிலவும் - வெண்மையான மதியும், வீழ் - விரும்பப்படுகின்ற, துணையிலார்க்கு - காதலர்களைப் பக்கத்தே கொண்டிராத மங்கையர்க்கு, வேல் போலும் - வேலாயுதத்தைப் போன்று துன்பினை விளைவிக்கும். (என்று தலைவி தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) சக்கரத்தையுடைய மாயவனிறம் போல எங்கும் இருள்பரந்து, அம்மாயவன் முன்னோனுடைய நிறம் போன்று வியப்புமிக்க பானிறமும் போன்ற வெண்ணிலாவும், பையவரல்குலாய்! இவை விரும்பப்படுந் துணையில்லாதார்க்கு வேல் போலும். (விரி.) மாயவன் - கண்ணபிரான் வெண்ணிலவும் - உம்மை உயார்வு சிறப்புப்பொருளது. பால்போலும்,
|