போன்றும் - உம்மைகள் எண்ணுப்பொருளன. வேல் போலும் - போலும் என்பது செய்யுமென் வினைமுற்று. எனவே பழையவுரையிற் கண்ட, 'இவை,' என்பது பொருளின்றிக் காணப்படுகின்றது. (96) பாழிபோன் மாயவன்றன் பற்றார் களிற்றெறிந்த வாழிபோல் ஞாயிறு கல்சேரத் - தோழியோ! மான்மாலை தம்மு னிறம்போன் மதிமுளைப்ப யான்மாலை யாற்றே னினைந்து. [இதுவுமது] (பத.) தோழியோ - தோழியே! மாயவன் - கண்ணபிரான், பாழிபோல் - தனக்கு வன்மையுண்டாக்கிக் கொள்பவன்போல, தன்பற்றார் - தன்பகைவர்களது, களிறு - ஆண்யானையினது மத்தகத்தின்மீதே, எறிந்த - செலுத்தி நுழைந்த, ஆழிபோல் - சக்கரத்தினைப் போன்று, ஞாயிறு - பகலோன், கல்சேர - மேற்கு மலைத் தொடரின் கண்ணே சென்று, (மறைய வந்த) மால்மாலை - மயக்கத்தினைத்தரும் மாலைக்காலத்தின்கண்ணே, தம்முன் - அம்மாயவனுடைய முன்னோனாகிய பலராமனது, நிறம் போல் - வெண்மை நிறத்தைப்போல, மதி - நிலவானது, முளைப்ப - தோன்ற, (அதனால்) யான் - நான் (கொண்ட,) மாலை - மயக்கத்தினை, நினைந்து - எண்ணி வருந்தி, ஆற்றேன் - பொறுக்க வியலாதவளாயிருக்கின்றேன். (என்று தலைவி தோழியிடங் கூறினாள்.) (ப-ரை.) தனக்கு வலிபோலக் கருதி மாயோன் பற்றார் களிற்றின் முகத்தெறிந்த சக்கரம்போல ஞாயிறு குட மலையைச் சேரத் தோழி! மருண்மாலையின்கண் அம்மாயவன் முன்னோன் நிறம்போல மதி தோன்றுதலான் யான் கொண்ட மயலை ஆற்றமாட்டுகில்லேன் வருந்தி. (விரி.) கண்ணபிரான் இயல்பாகவே வலியுடையா ராகலான், "பாழிபோன் மாயவன்றன் பற்றார்களிற்றெறிந்த வாழி," என்றார். குடமலை - மேற்குமலைத் தொடர். மாலை - முன்னது சாயுங்காலம் எனவும், பின்னது மால் + ஐ -மயக்கத்தை எனவும் பொருள்படும். ஈண்டு மயக்கம் புணர்ச்சி விருப்பம். தோழியோ - ஓ - விளியுருபு. (97)
|