பக்கம் எண் :


110காஞ்சிப் புராணம்


     நீவிர் பேரறிவினராய்க் கொள்கையில் நிலைபெற நின்று புனிதமாகிய
உண்மைத்தவ வலிமையினால் ஆணவ மல வலி கெடுத்து மங்கை பங்கனார்
திருவருளைப் பெற்றுளீர்; ஆதலின், பெரிதும் இப்பொருள் உங்களுக்கமைய
ஓதுவன்; நீவிர் யாவரும் ஒருங்கிய மனத்தராய்க் கேண்மின்கள் என்ற
அளவிலே.

அண்டர் நாயகன் நடம்புரி நாயகன் அடியவர் உளக்கோயில்
கொண்ட நாயகன் திருவடித் தரிசனங் கூடுதற் குபாயஞ்சீர்
மண்டு தீர்த்தமான் மியத்துநீ பெற்றதெவ் வாறெனக் கடாவுற்ற
பண்டை மெய்த்தவர்க் கிருமையும் புலப்படப் பகரலுற் றனன்சூதன்.
                                                  28

     தேவர் தலைவனும், திருக்கூத்தினை ஓவாதியற்றும் முதல்வனும்,
அடியவர் உள்ளத்துள் விளங்கி வீற்றிருத்தலின் அவற்றைக் கோயிலாக்
கொண்டவனும் ஆகிய பெருமான் திருவடி தரிசனப் பேறு வாய்த்தற்கு
உபாயமும், சிறப்பு மிகும் தீர்த்த மான்மியத்துள் நீ பெற்ற வரலாறும்
எங்ஙனம் என வினாவிய பழைய மெய்த்தவர்க்கு இருவகையும் விளங்கச்
சூதமுனிவர் விரித்துரைத்தனர்.

புராண வரலாற்றுப்படலம் முற்றுப் பெற்றது.

ஆகத் திருவிருத்தம்-357

சனற்குமாரப் படலம்

மகாமேருச் சிறப்பு

எழுசீரடி யாசிரிய விருத்தம்

     தொடுகடல் வரைப்பின், மன்பதைத் தொகைகள் சோழன்
மீனவனென ஈண்டிப், படர்பொலங் குவைகள் கவர்ந்துறா வண்ணம்
பரிந்துகாப் பவரென அசுரர், கடவுளர் இயக்கர் சித்தர்கந் தருவர்
கின்னரர் சாரணர் பிறரும், உடனுற நெருங்கிப் போற்றமூவுலகும்
உருவிமேல் நிவந்தது மேரு.                              1

     சகரரால் தோண்டப் பெற்ற கடல் சூழ்ந்த நிலவுலகில் மக்கள்
சோழபாண்டியரெனத் திரண்டிங்குப் போந்து பரவிய பொற்குவியல்களைக்
கைப்பற்றாதபடி வருந்தியும் காப்பவரை ஒப்ப அசுரரும், தேவரும், இயக்கரும்,
சித்தரும், கந்தருவரும் கின்னரரும், சாரணரும், பிறரும் ஒருங்கு நெருங்கிக்
காப்ப மேரு மூவுலகும் ஊடுருவி மேலும் உயர்ந்தது.

     கரிகாற் சோழரும், உக்கிரகுமார பாண்டியரும் மேருவைச்
செண்டாலடித்தமை: ‘‘செண்டுகொண்டுகரி காலனொரு காலின் இமயச்
சிமயமால்வரைதி ரித்தருளி” (கலிங்: 178). திருவிளையாடலுள் மேருவைச்
செண்டாலடித்த படலம் காண்க. சேரரும் கைப்பற்றினமை ‘‘அமைவரல்
அருவி இமையம்விற் பொறித்து” (பதிற்:2-ஆம் பதி-4)