பக்கம் எண் :


249


சித்த மாசொரீஇ விளங்கும்ஏ காலியார் திருக்குறிப் புத்தொண்டர்
அத்த லத்தினில் வீடுபே றெய்தினர் மற்றும்ஆ யிடைப் போற்றி
முத்தி சேர்ந்தவர் எண்ணிலார் மதிமுடி முழுமுதல் அடிப்போதின்
வைத்த சிந்தையின் முக்குறும் பெறிந்துயர் மாதவத் தலைவீர்காள்.

     பிறையை முடியில் அணிந்த முதல்வர்க்கு முதல்வன் திருவடி
மலர்களில் பதித்த உள்ளத்தால் முக்குற்றங்களைத் தறித்து உயர்ந்த
பெருந்தவத் தலைமையை யுடையீர்! ஆணவாதி அழுக்கினை நீக்கி
மெய்யறிவான் விளங்கும் ஏகாலியர் மரபின் வந்த திருக்குறிப்புத்
தொண்ட நாயனார் அத்தலத்தினில் வீடு பேற்றினை அடைந்தனர். மேலும்
அம்முத்தீசப் பெருமானை வழிபாடு செய்து முத்தியைத் தலைப்பட்டவர்
அளப்பிலர் ஆவர்.

     காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்கள். இறைவன் திரு
வுள்ளத்து நிகழும் திருக்குறிப்பினை உணரும் அடியவர் திருவுட்கிடை
உணர்ந்து அவர் வழி நின்ற நாயனார் ஆகலின், திருக்குறிப்புத் தொண்ட
நாயனார் ஆயினார் என்க. சித்தமாசு ஒருவல்; (திருத். ஏனாதி. 114) எறிதல்;
குறிப்புருவகம். முற்றுருவகங்கள்; (சிவபுண்ணியப் படலம் 3)

முத்தீசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம். 814

பணாதரேசப் படலம்

அறுசீரடி யாசிரிய விருத்தம்

கவைய டிக்கய வாய்க்கரு மேதிகள் உழக்கிய கடிவாவிச்
சுவைந றும்புனல்வாளைமீன் குதிக்கும்முத் தீச்சரத்தியல்சொற்றாம்
குவைம லர்ச்செழும் பொதும்பரிற் பாட்டளி கொழிநறாமடுத்தும்பர்
அவைவி யத்தகப் பண்பயில் பணாதரேச் சரம்இனி அறைகிற்பாம். 1

     பிளவுபட்ட குளம்பினையும், பெரிய வாயினையும் உடைய கரிய
எருமைகள் கலக்கிய வாசனை வீசுகின்ற தடாகங்களிற் சுவையும், நறுமணமும்
கொண்ட நீரிடை வாளைமீன்கள் துள்ளும் முத்தீச்சரத்தின் உண்மையை
உரைத்தாம். இனிக் கொத்துகளாகப் பூத்த மலர்களையுடைய வளங்கெழுமிய
சோலையில் இசை பாடுகின்ற வண்டுகள் செழுந்தேனை நிரம்ப உண்டு
யாழ்வல்ல விண்ணவர் குழாம் கண்டு இறும்பூ தெய்தப் பண்பாடும்
இடனாகிய பணாதரேச்சரம் பற்றிப் பேசுவாம்.