பக்கம் எண் :


312காஞ்சிப் புராணம்


உந்தி பூத்தவன் அளப்பரும் உவகையுள் திளைத்துச்
சந்த மாமலர் அடிமிசை வீழ்ந்துதாழ்ந் தெழுந்தான்
எந்தை நீதர முழுவதும் பெற்றுளேன் இந்நாள்
அந்தில் என்றனக் களித்தருள் ஐயநின் உருவம்.    8

     திருமால் அளவுபடாத மகிழ்ச்சியில் மூழ்கி அழகிய பெருமை
பொருந்திய மலர் போலும் திருவடிகளில் விரும்பிப் பணிந்தெழுந்து
‘எந்தையே நீ அருள் செய்ய முன்னரும் யாவும் பெற்றுடையேன். ஐயனே!
இப்பொழுது நினது சாரூப வடிவினை அடியேனுக்கு அளித்தருளாய்! 

     உந்தி பூத்தவன்-அந்தில், அசை நிலை.

சம்பந்தர் பாடலால் திருமால் சாரூபம் பெறுதல்

என்ற வாய்மொழி திருச்செவி ஏறலும் எங்கோன்
ஒன்று கூறுத லுற்றனன் உவணம்மீ துயர்த்தோய்
நன்று தேர்வைவச் சுதமனு வந்தரம் நணுகும்
அன்று நாலிரண் டீற்றுடை இருபதாங் கலியில்.    9

     என்ற வாய்மொழி திருச்செவியிற் எய்துதலும் இறைவனார் ஒன்றனைக்
கூறத் தொடங்கினர். கருடக் கொடியோனே! நன்று கேள், வைவச் சுதமனு
வந்தரம் நடைபெறும் அக்காலத்தில் இருபத்தெட்டாங் கலியுகத்தில்,

     சுவாயம்பு முதலான மனுக்கள் அறுவர் மறைந்து ஏழாமனு வாகிய
வைவச்சுத மனுவின் நிகழ்ச்சில் இருபத்தெட்டாம் கலியுகம் இப்பொழுது
நடைபெற்று வருகிறது. விளக்கம் காலப்பிரமாணம் என்னும் தலைப்பிற்
காண்க.

காழி மாநகர்க் கவுணியர் குலத்தொரு காளை
ஏழி சைத்தமிழ் ஞானசம் பந்தன்எம் அடியான்
யாழ நீபெற எம்முரு இங்குவந் தளிப்பான்
ஆழி யோய் அது காறும்இவ் வரைப்பினில் அமர்ந்து.,  10

     ‘சீகாழிப் பதியில் கவுணியர் கோத்திரத்துள் தோன்றுகின்ற ஏற்ற
முடைய ஏழிசையுடன் பொருந்திய இசைத்தமிழைப் பரப்புகின்ற திருஞான
சம்பந்தராகிய எம் அடியவர் எமது திருவுருவமாகிய சாரூபத்தை நீ பெறும்
படி இத்தலத்திற் கெழுந்தருளி வழங்குவர். சக்கரப் படையுடையோய்! அவர்
வருமளவும் இத்தலத்தில் அமர்ந்து’,

ஈட்ட ருந்தவம் இயற்றுகென் றருளிநீங் குதலும்
கோட்டம் இன்றிமால் அம்முறை வதிந்துபூங் கொன்றைத்
தோட்ட லங்கலாற் றொழப்புகும் முத்தமிழ் விரகர்
பாட்ட லங்கலால் பரஞ்சுடர் திருஉருப் பெற்றான்.       11