பக்கம் எண் :


316காஞ்சிப் புராணம்


மீண்ட நாயகன் இரணிய புரத்தினை மேவி
ஈண்டு தானவக் குழுக்களைத் தாளினால் எற்றிக்
காண்ட குந்திறல் முருங்கவென் றழித்தவர் கருவின்
மாண்ட சத்தியை வாங்கினன் மணந்துவீற் றிருந்தான்.  11

     புறம்போந்த பெருமானார் இரணிய புரத்தினைச் சேர்ந்து குழீஇயுள்ள
அசுரர் கூட்டத்தினைத் தாளால் தாக்கி மதிக்கத் தக்க வலிமை கெட
வென்றழித்தவர் தம் கருவின்கண் மாட்சிமைப்பட்ட சத்தியைப் பிரித்து
மணந்து வீற்றிருந்தனர்.

விநாய கப்பிரான் அருச்சனை புரியவீற் றிருக்கும்
அனேக பேசனை அனேகதங் காவதத் திறைஞ்சின்
இனாத வெந்துயர்ப் பிறவிதீர்ந் தென்னையா ளுடையான்
றனாது வெள்ளியங் கயிலையிற் சார்ந்துவை குவரால்.    12

     விநாயகப் பெருமான் விரும்பி வழிபாடு செய்ய வீற்றிருக்கும்
அனேகபேசப் பெருமானை அத்தலத்திற் பணிந்தால் கொடுந்துன்பத்தைத்
தருகின்ற கொடிய பிறவி நோய் தவிர்ந்து என்னை அடிமையாகவுடைய
பெருமான் தனது வெள்ளி மலையிற் சார்ந்து அவ்விடத்தே வாழ்ச்சி பெறுவர்.

அனேகதங்காவதப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம் 1014

கயிலாயப் படலம்

கலித் துறை

அல்லிப்பூஞ் சேக்கைமிசை அன்னச் சேவல் பெடைக்குருகைப்
புல்லிக்கண் படுபொய்கை அனேக தங்கா வதம்புகன்றாம்
எல்லைச்செய் மணிக்கோயில் அதன்மேல்பாங்கர் இறைஞ்சினவர்க்
கொல்லைப்பே ரருள் கூருங் கயிலா யத்தை உரைசெய்வாம்.     1

     அகவித ழொடு கூடிய தாமரை மலர்மேல் ஆண் அன்னம் தன்
பெட்டைப் பறவையைச் சிறகரால் தழீஇக் கண்வளர்தற் கிடனாகிய நீர் நிலை
சூழ்ந்த அனேகதங்காவதத்தைப் பற்றிப் பேசினோம். ஒளியை வீசுகின்ற
மணிகளா னியன்ற கோயிலின் மேற்கில் பணிந்தவர்க்கு விரைவில்
பேரருளைச் செய்யும் கயிலாயத்தின் இயல்பினைப் புகழ்வாம்.