பக்கம் எண் :


கயிலாயப் படலம் 319


     ‘கொடுஞ் செயலில் உறைத்து நின்ற கொடியராயினும் சிவபிரானிடத்துப்
பேரன்பு வாய்த்தவர்; அழியாத பெருவன்மையைப் பெற்றவர்; பொலிவமைந்த
நுனியுடைய அம்பொன்றினால் விரைய அழிக்கும் வன்மை யுடையேம்
அல்லேம் யாம். பொருந்திய புகழையுடைய சிவபெருமானா ரொருவரே
அதற்கு வல்லவராவர்.’

கலிவிருத்தம்

அனையவன் அடிபேணி அடைந்தவர் அவர்கண்டீர்
இனிஅவர் சிவபத்தி சிதைவுசெய் திடுகேம்யாம்
நினைதரும் இதுவல்லாற் பிறிதிலை நெறிஎன்னாப்
புனைபுகழ் நெடுமாயன் புகன்றிது புரிகிற்பான்.     10

     ‘அப்பெருமானார் திருவடிகளைப் போற்றி அடைந்தவர் அத்திரிபுரர்
காண்மின்! இப்பொழுது யாம் அவர்தம் சிவபத்தியை மாற்றுவேம். எண்ணும்
இவ்வுபாய மல்லால் வெல்லும் வழி பிறிது இல்லை’ என்று கூறி அழகிய
புகழையுடையதிருமால் விரும்பி இதனை இயற்றுவர்.

மறைநெறி பழுதென்றும் மறுமைஒன் றிலையென்றும்
உறைதரு பொருளெல்லாங் கணத்தழி வுறுமென்றும்
அறைதரும் ஒரு நூலை ஆக்குபு வடிவத்திற்
பொறைபுரி தன்கூற்றோர் புருடனை வருவித்தான்.    11

     வேதத்துட் கூறப்படும் பொருள்கள் பிழையுடையன என்றும்,
மறுபடியும் அவற்றாலெய்தும் பயனும் சிறிதும் இல்லை என்றும், காணப்படுகிற
பொருள்கள் யாவும் கணநேரத்தில் அழிவெய்தும் என்றும் பேசப்படும் பிடக
நூலை இயற்றித் தாங்குகின்ற தன் வடிவினின்றும் தன் அமிசமாக ஓர்
புருடனை வருவித்தார்.

அங்கவன் முகம்நோக்கி அடல்அரி புகல்கிற்பான்
இங்கிது புத்தாகேள் இணையதோர் நூல்கொண்டே
பொங்கிய சிவநேசம் பூண்டுயர் புரஅவுணர்
தங்களை மயல்பூட்டிச் சிவநெறி தபுவிப்பாய்.       12

     அப்புருடனின் முகத்தைப் பார்த்து வலிமை அமைந்த திருமால்
கூறுவர்: ‘புத்தனே! இதனைக்கேள். இந்நூலின் துணையால் மிகுந்த சிவநேசம்
பூண்டமையால் உயர்ந்த திரிபுர அசுரர்களை மயக்குறுத்திச் சிவ
நெறியினின்றும் வழுவுவிப்பாய்?’

நாரதன் துணையாக நடமதி இருவீர்க்குஞ்
சீரிய மறைவாய்மை சிந்தையின் நிலைபெறுகென்
றேர்பெற விடைநல்க யாழிசை முனிவோனும்
தேரனும் விரைந்தெய்தித் திரிபுரம் அணுகுறலும்.    13