மற்றெமக் கினிய மூதூர் வளம்பயில் காஞ்சி அங்கண் உற்றெமை வழிபட் டேத்தி ஊங்குவை பெறுகென் றெங்கோன் சொற்றலும் விரைந்து காஞ்சித் தொன்னகர் எய்திக் காமன் அற்றமில் சருவ தீர்த்தத் தடந்திரை அலைக்குங் கோட்டின். 5 | ‘எமக்கு விருப்புடைய பழைய நகரம் வளம் நிலவு காஞ்சிஆகலின் அங்கண் எய்தி வழிபாடியற்றி அவற்றைப் பெறுக’ என எம்பிரானார் அருளாலும் மன்மதன் காஞ்சியை அடைந்து குற்றமில்லாத சருவதீர்த்தத் திரைமோதுகின்ற கரையில், தவாதபே ரன்பிற் காமேச் சரன்றனை இருத்திப் போற்றி உவாமதி முகத்து மென்றோள் ஒள்ளிழை உமையாள் தன்னைக் கவான்மிசைக் கொண்ட பெம்மான் கண்ணருள் சிடைத்து நெஞ்சத் தவாவிய பேறு முற்றும் அந்நிலை எய்தி னானால் 6 | இடையறாத பேரன்பினால் காமேச்சரப் பெருமானை நிறுவிப் போற்றிப் பௌர்ணிமை நாளின் முழுமதியை ஒக்கும் திருமுகமும், மெல்லிய தோளும், விளக்கமடைந்த அணிகளும் உடைய உமையம்மையைத் துடைமேற்கொண்ட பெருமானார் கடைக்கண் நோக்கினைப் பெற்று நெஞ்சில் விரும்பிய பேறுகள்யாவும் அந்நிலையே பெற்றான். ஏதமில் உயிர்கள் எல்லாந் தோற்றுதற் கேது வாகிக் கோதறத் தானம் ஈவோன் கொள்பவன் தானுந் தானாய் மேதகும் இறைமை பெற்று விளங்கினான் மறையோர் ஏற்கும் போதுளத் தவனை எண்ணிற் புரைதவிர்ந் துய்வார் அன்றே. 7 | குற்றமில்லாத உயிர்கள்யாவும் பிறப்பதற்குக் காரணனான காமனாகியும், குற்றமறத் தானம் கொடுப்போனும்ஆகி, கொள்வோனும் தானேயாய் மேன்மை பொருந்திய தலைமையனாகியும் விளங்கினான். ஆகலின், வேதியர் தானம் ஏற்கும்போது காமனை எண்ணினால் ஆசையாகிய குற்றம் தவிர்ந்து கடைத்தேறுவார். ஆவர். தீர்த்தேச்சரம் பரவினோர் விழைந்த காமப் பயன் அளித் தருளுங் காமேச் சரநகர் வந்த வாறு சாற்றினம் இதன்பா லாகப் பரிதிமான் தடந்தேர் ஈர்க்கும் பரிக்குளம் பிடறிப் போய திருமணிச் சிகரக் கோயில் வழங்குதீர்த் தேசம் உண்டால். 8 | வழிபட்டோர் விரும்பிய காமியப் பயனை அளிக்கும் காமேசர் திருக்கோயில் தோற்றிய முறையைக் கூறினோம்; இனி, சூரியன் தனக்குரிய பெரிய தேரை இழுத்துச் செல்லும் குதிரைகளின் குளம்பிடறிய, உயர்ந்த மணிகள் குயிற்றிய சிகரமுடைய கோயில் விளங்குகின்ற தீர்த்தேசம் என்பது உள்ளது. |