இனையநா னிலம் அடுத்த வளாகமெலாம் பெருங்குடிகள் இயல்பின் ஓங்கித், தினையளவும் முறைபிறழாத் தொண்டைநாட் டணி முழுதுந்தெரித்துக் கூறக், கனைதிரைநீர்க் கடலாடை நிலவரைப்பின் யாருளரோ கற்ப நாட்டுந், தனைநிகர்பா தலதலத்தும் அன்னதே யெனிற்பிறிது சாற்று மாறென். 143 இத்தன்மைய வளங்களையுடைய நால்வகை நிலங்களும் சூழ்ந்த இடப் பரப்புகளிலெல்லாம் செல்வ மிக்க குடிகள் மேம்படுதலால் தினைத்தனையும் முறைபிறழாத தொண்டை நாட்டின் சிறப்பு முழுதும் வரிசைப் படுத்திக் கூற, ஒலிக்கின்ற கடலை ஆடையாகவுடைய நிலப்பரப்பின் யாவருளர்? கற்பக நாட்டினும், பாதல உலகத்தும் அவ்வியல்பே என்னில், வேறு விரித்துச் சொல்ல யாதுளது என்க. எந்நாட்டுப் பெருவளமும் எவ்வெவகோட் பாடுகளும் இயம்பவல்ல, பொன்னாட்டுப் பொன் செருக்கும் பல்நாக்குப் பணிச்செருக்கும் போக்கும் இந்த, நன்னாட்டைப் புலவரெலாந் தொண்டைநாடெனவுரைப்பர் ஞால மங்கை, தன்னாட்போ தனையமுகக் கனிவாயாங் காரணத்தின் சார்பாற் போலும். 144 எந்த நாட்டிலுள்ள எப்பெரு வளங்களையும் எவ்வெச்சமயக் கொள்கைகளையும் எடுத்துச் சொல்லவல்ல விண்ணுலகத்துத் தேவகுருவின் சொல் திறனையும், பலநாப் படைத்த ஆதிசேடனின் தருக்கையும் போக்குதற்கு உரிய புலமையும், செல்வ நிலைமையும், உடைய நல்ல நாட்டைப் புலவர் யாவரும் தொண்டை நாடெனக் கூறுவர். நில மகளுடைய அன்றலர்ந்த தாமரை மலரை ஒத்த முகத்திலுள்ள (தொண்டைக்கனி) கொவ்வைக் கனி போன்ற வாயாம் காரணத்தினாற்போலும். கரிகாற்சோழனுக்கு நாக கன்னிகையிடத்துப் பிறந்த புதல்வன், தன் தந்தையை ஆதொண்டைக் கொடிசூடி அடைந்து ஆதொண்டைச் சக்கரவர்த்தி, தொண்டைமான் எனும் பெயர் பெற்று, அவனால் ஆளப் பெற்றமையால் தொண்டை நாடென இந்நாட்டிற்குப் பெயர் அமைந்தது. சலதியுடைச் சேயிழைக்குத் தமிழ்நாடே மதிமுகமாத் தமிழ்நாட்டுள்ளு, மலர்புகழ்த்தண் டகநாடே கனிவாயா அதனுள்ளும் சாதி பேதங், குலவும்ஆ ருயிர்க்கெல்லாந் தத்தமது மரபொழுக்கங் குடங்கை சேர்ஆ, மலகமெனத் தேற்றுதலின் நாவெனலாங் காஞ்சிநகர் வண்மை சொல்வாம். 145 கடலை உடையாகக் கொண்ட நிலமகட்குத் தமிழ்நாடே மதிக்கத் தக்க முகமாகவும், அத்தமிழ் நாட்டினும் விரிந்த புகழையுடைய தண்டக நாடே கொவ்வைக் கனிபோலும் வாயாகவும், அத் தண்டக நாட்டிடத்தும் பல சாதி பேதங்களாக விளங்குகின்ற அரிய உயிர்களுக்கெல்லாம் தத்தமரபினையும் ஒழுக்கத்தினையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவித்தலால் நாவென்று சொல்லப்படும் காஞ்சிபுரத்தின் வளமையை இனிக்கூறுவாம். ஆகத் திருவிருத்தம் - 172. |