பக்கம் எண் :


519


     இவர் யாவரும் சிவலிங்கங்களைத் தனித்தனியாகச் செவ்வனம் நிறுவி
விரும்பிய பொருள்களைப் பெற்றனர். அந்நாளவர்கள் போற்றிய பெருமானார்
தம்மைக் கண்டு போற்றினோர் அப்பெருமானார் திருவருளைப் பெறுவர்.

கயிலாயம்

அன்னவற்றின் தென்பால் கயிலாயம் அவ்வரைப்பின்
நன்னர்க் கயிலாய நாதன் றனைநிறுவி
மன்னுந் திசைக்கிறைமை, பெற்றான் மருவலார்க்
கின்னல்புரி முத்தலைவேல் ஈசானன் என்பவே      9

     பகைவர்க்குத் தீங்கு செய்யும் முத்தலைச் சூலம் ஏந்திய ஈசான
மூர்த்தி அத்தலங்களுக்குத் தென் திசையில் கயிலாய மென்னும் அவ்விடத்துக்
கயிலாய நாதப் பிரானை நன்கு நிறுவிப் போற்றி மேன்மையுறும் வடகிழக்குத்
திசைக்குத் தலைவராயினர்.

பாண்டவேசப் படலம் முற்றிற்று

ஆகத் திருவிருத்தம்-1755

மக்சேசப் படலம்

கலி விருத்தம்

பார்த்த ராதியோர் வழிப டும்புகழ்
ஆர்த்த சூழல்கள் விளம்பி னாம்அருள்
கூர்த்த அப்புலக் குடக்கண் இப்பிநீர்த்
தீர்த்த ஞாங்கர்மச் சேசங் கூறுவாம்.             1

     அருச்சுனர் முதலானோர் வழிபடும் புகழைப் புறம் போகாது பிணித்த
தலங்களை விரித்தோம்; அருள்மிகுத்த அவ்விருக்கைக்கு மேற்கில் இப்பிநீர்த்
தீர்த்தக்கரையில் விளங்கும் மச்சேசத்தைக் கூறுவோம்.

ஒப்பில் அற்புதம் உணர்த்த எம்பிரான்
இப்பி முத்தம்அங் கெடுத்த ளித்தலால்
செப்ப ரும்புகழ் இப்பி தீர்த்தம்என்
றப்பெ ரும்பெயர் அதனுக் காயதே.               2

     ஒப்பற்ற வியப்புடைய நிகழ்ச்சியை வெளிப்படுத்த எமது பெருமான்
இப்பிமுத்தினை இத்தீர்த்தத்தில் தோற்றுவித் தருள் செய்தலால் சொல்லற்கரிய
புகழுடைய சிப்பி தீர்த்தம் என்ற அந்தப் பெயர் அத்தீர்த்திற் கமைந்தது.