இமவ ரைத்தலைவி யோடு பிரானை ஏத்த வேண்டிஇவண் எய்தினன் அன்னோர், தமத ருட்கருணை பெற்றனன் மீண்டேன் தாழ்வி லாதுசெய் தவத்திற னால்உன், கமல நோக்கருளும் இன்று கிடைத்தேன் காதல் உன்னடி யேன்இனி என்ஊர்க், கமல நாயகசெல் கின்றனன் என்றான் அறுமு கக்கடவுள் அன்னது கேளா. 8 ‘உமையம்மையாரொடும் பிரானாரை வழிபட வேண்டி இங்கெய்தினேன். அவர்தம் திருவருளைப் பெற்று மீண்டேன். சிறப்புறு தவப்பயனாக நும் மலர்க்கண் அருளும் இன்று வாய்க்கப் பெற்றேன், விருப்புடைய நும்முடைய அடியனேன்; தூயோனே! இனி, என் இருப்பிடத்திற்குச் செல்கின்றேன்’ என்றனன். ஆறுமுகக் கடவுள் அதனைக்கேட்டு நன்று சொற்றனை உணர்ச்சியின் மிக்காய் ஞாலம் முற்றுதவும் நான்முகன் நீகொல், குன்ற வில்லிஅரு ளாற்கலை எல்லாங் கோதறத்தெளித லுற்றனை அன்றே, ஒன்றும் அக்கலைகள் முன்னுற என்னே ஓதும் அக்கரம் அதன்பொருள் யாதோ, இன்றெ னக்கிது விளம்புதி என்றான் ஏட விழ்க்கும்மல ராளிஇறைஞ்சி. 9 ‘உணர்வின் மிக்கோனே! நன்று கூறினை; உலக முழுதும் உதவும் நான்முகன் நீயேயோ? சிவபிரான் அருளாற் கலைகள் யாவும் குற்றமறத் தெளிந்து கொண்டனை அல்லவா? பொருந்தும் அம்மறைகளை ஓதும் முன்பு ஓதும் அக்கரம் யாது? அதன் பொருள் யாது? இப்பொழுது எனக்கதனைக் கூறுதி’ என்றனர். தோடுகள் விரியும் மலரோன் வணங்கி, ஐய நுந்தை அருள் இன்றி எமக்கோர் அறிவும் உள்ளதுகொல் ஆதியில் ஓது, மெய்யெ ழுத்தைஅறி கின்றிலன் அங்கண் விளம்பும் முப்பொருளு மியான்அறி கில்லேன், உய்யு மாகருணை வைத்தெனை ஆள்என் றுரைத்தி ரந்துகடி தேக முயன்றான், பொய்க டந்தவனும் ஆதிஎழுத்தின் பொருள்உ ரைத்தலது போகலை என்று. 10 ‘ஐயனே! நும் தந்தையார் அருள் இன்றிச் சுதந்திரமாக எமக்குச் சிறிதேனும் அறிவு: உள்ளது கொல்லோ? முதற்கண் ஓதும் உண்மை எழுத்தை அறியும் வலியிலேன். மூவகையாகக் கூறும் அதன் பொருளையும் அறியும் வலியிலேன். பிழைக்குமாறு கருணை பாலித்து என்னை ஆட்கொள்’ என்று கூறி இரந்து விரைந்து போக முயன்றனன். பொய்யன்பிற் ககப்படாத பெருமானாரும் முதலெழுத்தின் பொருளை உரைத்தன்றிப் போகேல்’ என்றருளி, |