தன்வரைப்பில் அலரோனைச் சிறைபடுப்பித் துலகமெலாந் தானே தோற்றும், இந்நிலைமைத் தலைநின்றான் அறுமுகவேளுடன் எய்து முனிவர் தேவர், அன்னவனைக் கொடுபோதப் பின்சென்றார் அவ்வரைப்பி னளவும் அப்பால், கன்னவில்தோள் கணநாதர் பிடித்துந்த மீண்டழுங்கிக் கயிலை புக்கார். 14 கந்தலோகத்தில் பிரமனைச் சிறையில் நிறுத்துவித்துப் பெருமானாரே உலகங்களைத் தோற்றுவிக்கும் செயலில் முற்பட்டு நின்றனர். பிரமனை விடுவிக்கப் பின் தொடர்ந்தனர் தேவர்களும், முனிவரரும். அச்சூழலளவும் தொடர்ந்தபின் மலையையொக்கும் தோள்களை யுடைய கண நாதர்கள் பிடரியைப் பிடித்துத் தள்ள வருந்தி மீண்டு கயிலையிற் சரண் புகுந்தனர். பெருமான் பிரமன்சிறையை விடுவித்தல் புக்கிறைவன் றனைவணங்கி நிகழ்ந்தவெலாம் விண்ணப்பஞ் செய்யப் பூந்தேன், நக்கநறுந் தொடைஇதழிக் கடவுள்அவர் தமைநோக்கி நவில்வான் என்னே, அக்கமலன் விளம்பியவா நம்மையும்நம் புதல்வனையும் அன்றே மான, மிக்கபுகழ்ச் சுருதியெலாம் பிரணவத்தின் பொருளாக விளம்பு மாறே. 15 புகுந்து பெருமானை வணங்கிப் பிரமனுக்கு நிகழ்ந்த யாவும் முறையிடக் கொன்றை மலர் மாலையர் அவர்தம் முகங்களை நோக்கி அப்பிரமன் கூறியபொருள் பிழையாகலின் விளம்பிய வகை என்னே! நம்மையும், நம் புதல்வனையும் அல்லவோ பெருமை மிகுந்த புகழ்ச்சியையுடையவேதங்களெல்லாம் பிரணவத்தின் பொருளாக விளம்பு முறையாகும். இதனால் நாமும் முருகப் பெருமானாரும் அபேத மென்பதனைப் புலப்படுத்தி உண்மையும் உபசாரமும் ஆகிய இவற்றைக் கருத்திற் கொள்ளாது நம்மொடும் சமமென எண்ணும் பிரமனின் அறி வின்மையையும் உணர்த்தி அருளினர். ‘‘எக்கலைக்கும் பூதங்கள் எவற்றினுக்கும் பிரமனுக்கும் ஈசன்என்னத், தக்கமுதல் பரப்பிரமம் சதாசிவன்ஓம்” எனவேதம் சாற்றும் அல்லால், முக்கனல்சூழ் வேள்வியிற் சுப்பிரமணியன் ஓமெனவும் முக்காற் கூறும், இக்கருத்தை அறியானை எவ்வாறு விடுவிப்ப தியம்பு மின்னோ. 16 எல்லா மறைகளுக்கும், எல்லாப் பூதங்களுக்கும், பிரமனுக்கும் ஈசன் என்னத்தக்க முதல்வனும் பரப் பிரமமும் ஆகிய சதாசிவன் ஓம் என்று வேதம் எடுத்து முழங்கும் அன்றியும், முத்தீ வேள்வி பயிலும் மறைகள் ‘சுப்ரஹ்மண்யோம்’! சுப்ரஹ்மண்யோம்! சுப்ரஹ்மண்யோம்!! என்றிங்கனம் மும்முறை கூறும் இதன் தாற்பரியத்தை உணராத குற்றவாளியாகிய பிரமனை எவ்வாறு சிறையினின்றும் விடுவிப்பது கூறுங்கோள்,’ |