பக்கம் எண் :


554காஞ்சிப் புராணம்


நலம்புரி அனந்த பற்ப நாபன்என் றோங்கு வாயால்
வலம்புரிக் கரத்தோய் என்று வழங்கினாள் குவவுத் திண்தோள்
உலம்புரி அனந்த பற்ப நாபனும் உமையாள் தன்னைப்
பொலம்புரி சடிலத் தேவைத் தொழுது போய்க் காஞ்சி புக்கான்.  9

     பாஞ்ச சன்னியத்தை யுடையோய்! நலஞ்செய் அனந்த பற்பநாபன்
என்னும் பெயருடன் சிறப்பாயாக’ என்றருளினர் அம்மையார். திரண்ட
கல் அவாவும் திரண்ட திண்ணிய தோள்களை யுடைய திருமாலும்
உமையம்மையாரையும் பொன் விரும்புகின்ற சடையினையுடைய
பெருமானையும் தொழுது சென்று காஞ்சியை அடைந்தனர்.

வணங்கினன் திருவே கம்பம் மற்றதன் அயலே வேதி
இணங்குறும் அனந்த பற்ப நாபமா இலிங்கம் பூசித்
தணங்கருள் பெற்றுப் பாந்தள் மூதுரி அகற்றி யாங்குப்
பிணங்கிய சாபம் நீத்துப் பேரருட் குரிய னானான்.     10

     திருவேகம்பத்தைக் கண்டுதொழுது அத்தலத்தின் மருங்கே பீடத்துடன்
கூடி விளங்குறும் அனந்த பற்பநாபேசச் சிவலிங்கம் நிறுவிப் பூசித்து
அம்மையாரது திருவருளைப் பெற்றுப் பாம்புருவை விடுத்துப் பழைய
வடிவுடன் விளங்கினர் திருமால்.

அனந்த பற்பநாபேசப் படலம் முற்றிற்று.

ஆகத் திருவிருத்தம்-1878

கச்சி மயானப் படலம்

கொச்சகக் கலிப்பா

சிற்பநிகழ் மணிமாட நெடும்புரிசைத் திருவனந்த
பற்பநா பேசத்தின் பரிசறிந்த வாறுரைத்தாம்
நிற்பனவும் சரிப்பவுமாய் நிறைந்தபிரான் இனிதுறையும்
அற்புதமாந் திருக்கச்சி மயானத்தின் அடைவுரைப்பாம்.   1

     சிற்ப நுண் தொழிலமைந்த நீண்ட மதில்களையும் அழகிய
மாடங்களையும் கொண்டுள்ள அழகிய அனந்தபற்ப நாபேசத்தின் இயல்பினை
அறிந்தபடி கூறினோம். இனி, தாபர சங்கமங்கள் என்னும் இருவகை
உடம்புடைய உயிர்களினும் வியாபித்துநின்ற பெருமானார் இனிது
வீற்றிருக்கும் வியப்புறுத்தும் திருக்கச்சி மயானத்தின் வரவினைக் கூறுவோம்.

பண்டாசுரன் வரம்பெறல்

முன்னொருநான் முகன்புருடப் பெயர்க்கற்பம் முடிவெய்திப்
பின்னுறுசீர் அகோரமாங் கற்பத்துப் பிறங்குலகின்
மன்னுயிர்கள் வளர்ந்தோங்கி வைகுநாள் விறற்பண்டன்
என்னும்ஒரு வல்லவுணன் இப்புவனத் துளனானான்.      2