பக்கம் எண் :


திருநகரப் படலம் 57


மல்லரை மயில்களை வான ரங்களைப்
புல்லிய முயல்களைப் பொருச ரங்களை
வல்லவா புறக்கொடை கண்ட வான்கதிப்
பல்லியல் புரவியின் பந்தி ஆயிரம்.             18

     மல்லரையும், மயில்களையும், குரங்குகளையும், சிறிய முயல்களையும்,
அம்புகளையும் வல்லபடி அவற்றைப் புறங்கண்ட பெரியகதிகளையுடைய பல
இலக்கணமமைந்த குதிரையின் பந்திகள் அளவில்லாதன.

மதக்கரி தனைமுயல் வயங்கொள் காதையைப்
புதுக்கவீங் கிருளொளிப் பொலிவைப் பற்றியீர்த்
ததிர்ப்பதென் றுளங்கொளக் கரிய வாங்குர
கதத்தொகை பற்றுபொன் தேர்க ணக்கில.       19

     மதத்தால் செருக்கும் ஆண் யானையை முயல் வெற்றிகொண்ட பழைய
கதையான் வரும் விம்மிதத்தைப் புதுப்பிக்கச் செறிந்த இருள் ஒளிமிகுதியைப்
பற்றி ஈர்த்து ஆரவாரியா நின்றது என மனங் கொள்ளும்படி கரிய குதிரைகள்
பற்றி ஈர்க்கும் பொற்றேர்கள் கணக்கில ஆயின. அதிர்வு-நடுக்கம். குரகதம்-
குதிரை.

எரிமணிச் சோதியுள் மூழ்கி ஈர்த்துச்செல்
பரிகளைக் காண்கிலர் பார்த்துச் சூரன்ஊர்
திருவுடை இந்திர ஞாலத் தேர்கொல்என்
றுருகெழச் செல்லுதேர் உலப்பில் வீதியே.       20

     தேரிற் பதித்த மாணிக்கங்களின் பேரொளியுள் மூழ்குதலின் இழுத்துச்
செல்லும் குதிரைகள் காணப்படாவாய் அத்தேர் மட்டும் காணப்பெற்று, இது
சூரபதுமன் ஊர்ந்து செல்லும்‘இந்திரஞாலத்தேர்’ கொலோ என அச்சமுறத்
தோன்றும் தேர்கள் நீங்குதல் இல வீதிகள்.

     எரி-தீ. திரு-குதிரை இன்றிச் செல்லும் தெய்வத் தன்மை. செம்மணி
ஒளியுள் செந்நிறக் குதிரைகள் தோன்றாவாயின.

வீரர் இருக்கை

நால்வகை நிலையினால் பயிலும் நாமவில்
வேல்வளை பலகைவாள் கற்கும் விஞ்சையர்
கோலவான் விஞ்சையர் குழாங்கள் நோக்குபு
சால்பினை வியத்தகு தலைமைப் பாலரே.          21

     நால்வகையாக நின்று அச்சந்தரும் வில்லையும், வேலையும்,
சக்கரத்தையும், கேடகத்தையும், வாளையும் ஏந்தி விஞ்சை (வித்தை) கற்போர்,
அழகிய வானிடத்து வித்தியாதரர் குழுக்கள் நோக்கிக் கலை நிறைவை
வியக்கத்தக்க முதன்மையர். கற்கும் அளவிலே இந்நிலையினர் என்பதும், விஞ்சையரைப் போற்றற்குரியர் விஞ்சையரே என்பதும் அறியற்பாலன.