அம்மையாருக்கு இறைவன் திருவருள் செய்தல் கலி விருத்தம் என்றுளம் நெக்குருகி எல்லையில் அன்பினளாம் மன்றல் மலர்த்தொடையல் வார்குழல் போற்றிசெயக் கொன்றை முடிச்சடையார் பேரருள் கூர்ந்தருளித் துன்றிய கேண்மையினான் மற்றிது சொல்லினரால். 409 | என்று மனம் நெகிழ்ந்து உருகி அளவிட லரிய அன்புடையராய் மணமுடைய மலர் மாலை சூடிய ஏலவார் குழலி யம்மையார் போற்றி செய்யக், கொன்றை மலர் மாலையைச் சடையி லுடையவர் பேரருள் மீக் கூர்ந்து செறிந்த உரிமையினால் இதனை அருளுவர். பொங்கி மணங்கமழப் பூசு நறுங்களப மங்கல மென்முலையாய் காளி மகிழ்ந்திதுகேள் அங்கனை நின்னொடுநாம் வேறலம் ஆரமுதத் திங்களும் வெண்ணிலவும் போலு மெனத்திகழ்வோம். 410 | ‘மணம் மிக்குக் கமழும்படி நறிய கலவையைப் பூசு நலமுடைய மென் முலையாய்! காளீ! (கறுப்பி) அங்கனையே! இதனை மகிழ்ந்துகேள். நின்னொடு வைத்து நாம் வேறலம்; ஒருவே மாவேம். அரிய அமுதத்தைப் பொழியும் சந்திரனும் அதன் வெள்ளிய நிலவும் போலக் குணகுணியாய் விளங்குவோம். இலளிதை யாம்பெயரான் முன்இவண் எம்உருவிற் பலர்தொழ வந்துலகம் பங்கய னாதியெலாம் மலர்தர நல்கினைபின் மற்றொரு கற்பமதிற் சலமறு மெய்ஞ்ஞான சத்தியின் நீங்கியரோ. 411 | ‘இலளிதா தேவி என்னும் பெயரோடு முன்னர் எம் வடிவினின்றும் பலரும் தொழத் தோன்றி உலகையும், பிரமன் முதலான யாவரையும் ஒடுங்கிய நிலையினின்றும் விரிதரப் படைத்தனை. பின்பு வேறொரு கற்பத்தில் கோட்ட மறுக்கும் மெய்ஞ்ஞான சத்தியாகத் தோன்றி, அந்தண னுக்கருளி ஆக்கிய துப்புதவிக் கந்த மலர்க்கடவுள் கான்முளை தன்மகளாய் நிந்தனை செய்தவனை நீத்து வரைக்கிறைபால் தந்து மறித்தும்எமை அன்பின் மணந்தனையால். 412 | ‘பிரமனுக்கு அருள் செய்து படைக்கும் ஆற்றலை வழங்கி அப் பிரமனுக்கு மகனாகிய தக்கனுக்கு மகளாய்த் தோன்றிப் பழித்த அத் தக்கனை வெறுத்துநீ ங்கி இமய மன்னனுக்கு மகளாகி வந்துமீண்டும் எம்மை அன்பொடும் மணந்து கொண்டனை.’ |