அம்மையார் இறைவன்பால் அமர்தல் கலி விருத்தம் தூக்குழல் உமைதிரு வடிவில் துன்னலான் மாக்கவின் மிகும்அணி வனப்பு நோக்குதோ றீக்கணம் முரல்மலர் ஏழை ஈதியான் ஆக்கிய அணிகொல்என் றயிர்ப்பு மேயினாள். 53 | தூய கூந்தலையுடைய உமையம்மையார்தம் அழகிய திருமேனியில் சார்தலினால் பேரழகுமிகும் அணிந்த அழகினை தான் நோக்குந் தோறும் வண்டின் குழாம் முரலும் மலரில் உறையும் திருமகள் இக்கோலம் யான் புனைந்த கோலமோ? என் றையங் கொண்டனள். விண்ணர மடந்தையர் பலரும் வேல்தடங் கண்ணிணை கவர்பெரு வனப்புக் காண்தொறும் எண்ணருங் களிப்பினர் எம்பி ராட்டியைப் புண்ணியச் சோபனம் புகன்று வாழ்த்தினார். 54 | விண்ணுலக மகளிர் பலரும் வேலையொக்கும் கண்களைக் கவர்கின்ற பேரழகைக் காணுந்தோறும் பெருங் களிப்பினராய்ப் புண்ணிய மங்கலப் பல்லாண்டுகளை விரும்பிக் கூறி வாழ்த்தினர். நங்கையும் நறைகமழ் நளினப் பாவைதன் பங்கய மலர்க்கரம் பற்றி யாங்கெழுந் தெங்கணும் மலர்மழை இறைப்ப வானவர் மங்கல வாழ்த்தொலி மல்கப் போந்தனள். 55 | வானவர் எங்கும் மலரை மழையாகப் பொழியவும், மங்கல வாழ்த்தொலிகள் பல்கவும் அம்மையார் தேன் மணக்கும் செந்தாமரை யவள் தன் மலரை ஒக்கும் கரத்தைப் பற்றி எழுந்து போந்தனர். நிழல்உமிழ் மணிக்குடை நீண்ட கேதனந் தழையொளிக் கவரிசாந் தாற்றி யாதிய மழைமதர்க் கண்அர மகளிர் ஏந்தியே விழைதகு தொழில்முறை விளைத்து டன்செல. 56 | ஒளி உமிழும் மணிகள் பதித்த குடையையும், கொடிகளையும், மொய்யொளிக் கவரிகளையும், சிவிறி முதலியவற்றையும் குளிர்ச்சியும் செருக்கும் உடைய கண்ணுடைய தேவமகளிர் ஏந்தி விரும்பத் தக்க முறையில் பணிபுரிந்து உடன் போதவும், பாவிய ஆடைமேல் நடந்து பைப்பய மாவணி மணவினை மண்ட பத்திடைப் பூவணை மிசைப்பொலி புனிதன் பாங்கரின் ஓவியக் கொழுந்தென உற்று வைகினாள். 57 | |