மேற்கூறிய நால்வகை ஆசிரமங்களில் குற்றமற ஒழுகித் தெய்வ மாந்தருவின் நீழலில் அமர்ந்த திருவேகம்பர்க்கு அகத்தடிமை செய்து ஊழியினும் அழியாத காஞ்சியில் வாழும் இயல்பினர் செறியும் மும்மலக் குற்றம் நீங்கி இன்ப வீட்டினைத் தலைப்படுவார். ஒழுக்கப் படலம் முற்றிற்று. ஆகத்திருவிருத்தம்-2621 சிவபுண்ணியப் படலம் அறுசீரடி யாசிரிய விருத்தம் கச்சிநகர் அமர்ந்துறையும் நியதியராய் ஏகம்பக் கடவுள் பாதச், செச்சைமலர் வழிபடுவோர் மேம்பாடு நானேயோ தெரிக்க வல்லேன், முச்சகமும் புகழ்ந்தேத்தும் பன்னிரண்டு பெயர் படைத்த மூதூர் வைப்பிற், பொச்சமறச் செய்தக்க சிவதருமத் திறனும் இனிப் புகலக் கேண்மின். 1 பெரியீர்! காஞ்சியில் விரும்பி வாழும் நியமம் உடையராய்த் திருவேகம்பர் தம் சிவந்த மலரடிகளை வணங்குவோருடைய சிறப்பினைக் கூறவல்லேன் அல்லேன். மூவுலகானும் புகழ்ந்து போற்றப்படும் இப்பழம் பெருநகரில் உண்மையாகச் செய்யத் தக்க சிவபுண்ணிய வகைகளையும் விரும்பிக்கூற அமைந்து கேளுங்கள். எவ்வறமுந் திருக்காஞ்சிக் கடிநகரிற் புரிகிற்பின் ஏற்றம் எய்தும், அவ்வறத்துட் சிவதன்மம் அதிகம்அவை சிவலிங்கப் பதிட்டை ஏனைச், செவ்வியுடைத் திருமேனி திருக்கோயிற் பணிபூசைச் சிறப்பு மற்றும், ஒளவியந்தீர் மெய்யடியார் திருத்தொண்டு முதற்பலவாம் அவற்றுள் மாதோ. 2 யாதோர் அறத்தையும் இங்குச் செய்தால் சிறப்பு மிகும். பொதுத் தருமங்களினும் சிவபுண்ணியம் சிறக்கும் அச்சிவ புண்ணியம் சிவலிங்கம் தாபித்தலும், சோமாஸ்கந்தர் முதலாம் திருவுருவங்கள் அமைத்தலும், கோயிற் றொண்டுகளும், நித்திய நைமித்திகங்களும், மலக்குற்றம்தவிர்ந்த மெய்யடியார் பூசனையும் முதலாகப் பலவும் ஆகும். சிவலிங்கப் பதிட்டைப் பயன் கயக்கமுறும் அறக்கடையின் சிமிழ்ப்பறுத்துப் பிரமாண்டக் கனத்தை நூறி, மயக்கமிகும் வினைப்பகையும் பெரும்பிறவிப் |