பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 17
17

1. வரலாறு தழுவாதது

வரலாறு எக்கலைக்கும் அடிப்படையாய் மட்டுமன்றி முதுகந்தண்டாயுமுள்ளதென்பது, உலகறிந்த உண்மை. கலைகளுள்ளும், மொழி நூல் வரலாற்றியலை இன்றியமையாது தழுவியதென்பது சொல்லாமலே பெறப்படும். ஆயினும், வரலாற்றுத் தொடர்பின்றி உண்மை தழுவாத உயிரற்ற நிலையில் வண்ணனை மொழிநூல் வளர்க்கப்பட்டு வருகின்றது. இது, அந் நூலாரின் முயற்சியின்மை, கலையுணர்ச்சியின்மை, நடுநிலையின்மை ஆகியவற்றுள் ஒன்றையே காட்டும்.

2. ஆரிய அடிப்படை கொண்டது

முந்தியல் செம்மொழியாகிய தமிழை ஆராயாமையால், மொழி நூல் திறவுகோல் தமிழிலேயே பொதிந்து கிடப்பதை அறியாது, திரிபில் திரிபும் செயற்கையில் செயற்கையும் ஆரியத்தின் முடியுமாகிய சமற் கிருதத்தை அடிப்படையாகக் கொண்டு, மொழிநூற் செய்திகளையும் மொழிகளையும் மொழியுறுப்புகளையும் முன் பின்னாகவும் கீழ்மேலாகவும் முறைபிறழக் கூறிவருவது வண்ணனை மொழிநூல்.

தமிழ் ஆரியத்தின் அடி என்பதை இன்னும் மேலையர் உணர்ந்திலர்.

3. எல்லா மொழிகளும் இடுகுறித் தொகுதிகளே என்பது

தமிழ்போலும் இயன்மொழியை ஆராயாது ஆரியமாகிய திரி மொழிகளையே ஆய்ந்ததினால், எல்லாமொழிச் சொற்களும் இடுகுறிகளே என்னும் தவறான முடிவிற்கு வந்துள்ளனர் இற்றை அமெரிக்க மொழிநூலாசிரியர்.

தமிழில் இடுகுறிச் சொல்லே இல்லையென்பதற்கு. "எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே." என்னும் தொல்காப்பிய நூற்பாவொன்றே போதிய சான்றாம். "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" என்பது, சொல் வேர்ப்பொருள் பார்த்தவுடன் அல்லது மிகத் தெளிவாகத் தோன்றாது (சில சொற்களில்) எனப் பொருள்படுமேயன்றி, திரு. வையாபுரிப்பிள்ளை கூற்றுப்போல் தோன்றவே தோன்றாது எனப் பொருள்படுவதன்று.

இயற்சொற்களில் தெளிவாகத் தோன்றும் வேர்ப்பொருள் திரிசொற்களில் மறைந்துபோம் என்னும் உண்மையைக் கீழ்க் குறித்த சொற்களினின்று அறிக.

  இயற்சொல் திரிசொல்
  இடைகழி ரேழி
  வெண்ணெய் வென்ன (தெலுங்கு)
  Episcope Biscop

மொழி தோன்றிய வகையை விளக்கி நிற்பது உலக முழுமையினும் தமிழ் ஒன்றே.

 4. சொற்கள் தம்மளவிற் பொருளுணர்த்தாது அவற்றின் முறைப்பாட்டினாலேயே    பொருளுணர்த்துவன என்பது ,

இது மொழி தோன்றிய முறையை அறியாமையால் நேர்ந்த தவறாகும்.