பக்கம் எண் :

Mozhinool Katturaigal - Page 3
3

"அக்காலத்து அவர் (தலைச்சங்கப் பாண்டியர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னு மாற்றிற்கும் குமரி யென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும்-நாற்பத்தொன்பது நாடும்-பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின் காறும் கடல்கொண் டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க" என்னும் அடியார்க்கு நல்லார் உரைப் பகுதியாலும் (சிலப். சாமிநாதையர் பதிப்பு, ப. 230),

  ".......தலைச்சங்க மிருந்தார்............தமிழாராய்ந்தது கடல் கொள்ளப் பட்ட மதுரையென்ப" என்றும்,

  "........இடைச்சங்க மிருந்தார்..................தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப," என்றும், இறையனாரகப் பொருளுரை கூறுவதாலும் (பக். 6, 7), பிறவற்றாலும் அறியப்படும்.

  திரவிடரெனப்படுவார் தென்னாட்டுப் பழங்குடி மக்களேயென்று, இராமச்சந்திர தீட்சிதர் எழுதியுள்ள வரலாற்று முன்னைத் தென்னிந்தியா (Pre-Historic South India) , தமிழரின் தோற்றமும் பரவலும் (Origin and Spread of the Tamils) என்னும் நூல்களிலும், P.T . சீனிவாசையங்கார் எழுதியுள்ள இந்தியக் கற்காலம் (Stone Age of India) என்னும் நூலிலும் பரக்கக் கூறியிருத்தல் காண்க.

 குமரிநாட்டு உண்மையை அறிந்தால்தான், தமிழர் தெற்கே தோன்றி வடக்கே சென்று திரவிடராய்த் திரிந்தாரென்ற வுண்மையையும், திரவிடர் மீண்டும் வடமேற்கே சென்று ஆரியராய்த் திரிந்தாரென்ற வுண்மையையும், தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமுமாகும் என்ற வுண்மையையும் உணர்தல் இயலும் .

 "தென்னாட்டு மொழிகளுக்குள் தமிழ் மிகத் தொன்மையானதென்றும், என் கருத்தின்படி அது திரவிடத் தாய் என்றும் நம்புவதற்கு ஒரு பாணிப்பும் தேவையில்லை" என்று தமிழரின் தோற்றமும் பரவலும் என்ற நூலிலும் ,

 "தமிழேனும் வேறு எத் தென்னிந்திய மொழியேனும் சமற்கிருதத்தினின்று தோன்றியதன்று என்பது மட்டுமன்று; நாம் நெருங்கி ஆயுங்கால், திரவிட மொழிகள் சமற்கிருதத்திடத்தும் வேதமொழிக் கிளைகளிடத்துங்கூட மிகுந்த அளவு செல்வாக்குச் செலுத்தியிருக்கின்றன என்னும் எம் கொள்கையை வலியுறுத்த மிகுந்த ஒப்புமைகள் காண்கின்றோம்" என்று திரவிட முன்னைத் தென்னிந்தியா என்னும் நூலிலும், இராமச்சந்திர தீட்சிதர் கூறியிருப்பதைக் கவனிக்க.

திரவிட மொழிகள் ஆரிய மூலமொழிக்கு மிக நெருங்கியவை என்று கால்டுவெல் தம் ஒப்பியல் இலக்கணத்தில் ஆங்காங்குக் கூறியிருப்பது, ஆழ்ந்து நோக்கத்தக்கது.