பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 81
81

இனி, ஒரு சில தமிழர், திரு + இடம் = திருவிடம் - திரவிடம் - திராவிடம் என வந்ததாகக் காட்டுவர். இவ் வரலாறு உத்திக்குப் பொருந்தாமையோடு சான்றும் அற்றது. ஒருசார் இளம்புலவர், திரு + இடம் = திராவிடம் எனப் புணர்த்து,

  அன்று வருகாலை ஆவாகுதலும்
செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப
(258)

என்னும் தொல்காப்பிய விதியையும்,

  அது முன் வருமன் றான்றாந் தூக்கின் (180)

என்னும் நன்னூல் விதியையும் துணையாகக் காட்டுவர். அது + அன்று என்பது, அதன்று என்று புணர்ந்து செய்யுளில் அதாஅன்று என்று அளபெடுத்த நிலையையே மேற்காட்டிய விதிகள் குறிப்பதால், அவர் கூற்று சற்றும் பொருந்தாததென விடுக்க. மேலும், அவர் கருத்துப்படி, திரு + இடம் என்பது திரீடம் அல்லது திரீயிடம் என்றே புணரவேண்டும் என்க.

இதுகாறும் கூறியவற்றால், திரவிடம் என்பது தென் சொல்லேயென்று தெளிக.

தமிழ் என்பது தூய்மையான தமிழையும், திரவிடம் என்பது தமிழினின்று திரிந்த தெலுங்கு, கன்னட முதலிய இனமொழிகளையும் இன்று குறிக்குமென்க. வடமொழியில் உயிர்மெய்ம்முதலை மெய்ம் முதலாக்கி ரகரத்தை வழிச்செருகற்கு, படி - ப்ரதி, பவழம் - ப்ரவாளம் என்பன எடுத்துக்காட்டுகள்.

 
- தென்றல் 19.9.1959