பக்கம் எண் :

23

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இருளை அகற்றிய இன்னொளிச் செல்வர்

வெளிநாடு சென்று வரலானார்

 
பருந்ததும் நிழலும் போல
     பாலரும் அவரும் ஒன்றாய்
இருந்ததைச் சொல்லச் சொல்ல
     இன்பமுண் டாகும் நெஞ்சே


உலகெனும் பள்ளி யின்பால்
     உவந்தவர் வாழ்வுக் கான
பலவற்றைக் கற்றுக் கற்றுப்
     பகுத்தறி வுற்றார் நெஞ்சே


கற்பிக்க ஆசான் அற்ற
     கலக்கமே இல்லா வண்ணம்
பொற்புடன் கற்று வந்த
     புதுமையும் என்னே நெஞ்சே


பெரியதந் தைது ணையின்
     பெட்புறு வாணி பத்தில்
சிரியாநாட் டுக்குச் சென்று
     சிறுவரும் வந்தார் நெஞ்சே


பதிமூன்று வயதுப் பாலர்
     பாங்குடன் அவரின் பின்னே
புதியபல் லிடங்க ளுக்குப்
     போய்வர லானார் நெஞ்சே


சிரியாவின் எழிலைக் காணச்
     சென்றிடும் வேளை ஆங்கே
விரிவாகக் காட்சி கண்டே
     விம்மித முற்றார் நெஞ்சே


இயற்கையின் அழகில் தோய்ந்தே
     இணையிலா மகிழ்ச்சி யுற்று
நயமிகு அறிவைப் பெற்றே
     நாடோறும் வளர்ந்தார் நெஞ்சே


பாலையின் பசுமை கண்டார்
     பறவைகள் குரலை ஆங்கே
சீலமாய்க் கேட்டுக் கேட்டுச்
     சிந்தனை செய்தார் நெஞ்சே