பக்கம் எண் :

26

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி

நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இருளை அகற்றிய இன்னொளிச் செல்வர்

அண்ணலார்பால் கதீஜா அன்புகொள்ளல்

 

உள்ளத்துள், உடலுள் அந்த
     உயர்மொழி பரவி இன்ப
வெள்ளத்தைப் பாய்ச்சிற் றென்றே
     விளம்பிட வேண்டு மாமோ


மாமணி புகழை யெல்லாம்
     மைஸரா சொல்லச் சொல்ல
மாமல ராய்‘கதீஜா’
     மனமல ராதோ நெஞ்சே


இப்புகழ் உரைக ளெல்லாம்
     இன்னொளி கதிஜா நெஞ்சில்
அப்பெரும் தலைவர் மாண்பை
     அதிகமாக் கியதே நெஞ்சே


கதிஜாவின் நெஞ்சத் துள்ளே
     கவினுடைச் செல்வர் தோற்றம்,
எதிரிலும் அவரின் தோற்றம்
     என்னநின் றாரே நெஞ்சே


இல்லத்தில் அங்கும் இங்கும்
     இன்பமாய் கதிஜா செல்ல
நல்லஅவ் வொலியே கேட்க
     நயந்திட லானார் நெஞ்சே


அண்ணலின் நினைவில் உள்ள
     அருங்குண கதிஜா அண்ணல்
பண்பினை எண்ணி எண்ணிப்
     பார்த்திட லானார் நெஞ்சே


அன்பினை அடைப்ப துண்டோ
     அவருளம் தன்னில் வீழ்ந்த
அன்பெனும் விதைதாம் ஊன்றி
     அரும்பியோங் கிற்றே நெஞ்சே


முகம்மதாம் தருவைச் சூழ்ந்து
     முளைத்தஅக் கொடிதான் பற்ற
அகமொத்துப் போன தும்தான்
     அரியதோ? சொல்வாய்! நெஞ்சே


விழிவழி புகுந்து நெஞ்ச
     வீட்டினுள் ஒளிப ரப்பி
எழில்நலங் காட்டும் அண்ணல்
     ஏற்றமும் என்னே நெஞ்சே


முகம்மதைத் துணையாய்க் கொள்ள
     முழுமதி நினைந்து விட்டார்
அகமதைத் தங்கை யின்பால்
     அறைந்திட லானார் நெஞ்சே


வாணிபத் துணையாய் வந்த
     வனப்புடைச் செல்வர் வாழ்வைப்
பேணிடும் துணையாய் வந்தால்
     பேரின்பம் என்றார் நெஞ்சே


தங்கையும் உளம கிழ்ந்தார்
     தாதியாம் ‘நபிஸா’ வின்பால்
பொங்கிய உவகை யோடு
     புகன்றிட லானார் நெஞ்சே