பக்கம் எண் :

28

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இருளை அகற்றிய இன்னொளிச் செல்வர்

அண்ணலார்க்கும் கதீஜா நாயகியார்க்கும் திருமணம் ஆகுதல்
மக்கத்தின் மக்கள் இந்த
     மணவிழாச் செய்தி யாலே
எக்களிப் புற்றார் என்றே
     இயம்பிட வல்லேன் நெஞ்சே


புதுமணச் செய்தி யாலே
     புத்துரு கொண்ட மக்கள்
வதுவைசெய் நாளும் நாளை
     வாராதோ? என்றார் நெஞ்சே


மணத்திரு நாளில் மக்கம்
     மாணெழில் பூண்ட தென்கோ!
இனித்திடும் நாளாய் எண்ணி
     எல்லோரும் மகிழ்ந்தார் நெஞ்சே


திருமண இல்லங் கொண்ட
     தேசினைச் சொல்வ தாமோ!
பெருந்திரள் மக்கள் வெள்ளம்
     பெருகிற்றென் பேனே நெஞ்சே


விதவித வண்ணத் தாலே
     விளங்கிய கதிஜா இல்லம்
புதுமைகொள் நிலையில் அன்றே
     பொலிந்ததும் என்னே நெஞ்சே


நறும்புகை மேக மென்ன
     நலமுடன் எழுந்த தோடு
பெருங்களிப் பதனைத் தந்த
     பெற்றியும் என்னே நெஞ்சே


மங்கல நன்னீ ராடி
     மாண்புறு கோலங் கொண்டே
பொங்கிடும் உவகை யோடு
     புண்ணியர் முஹம்மத் வந்தார்


தாரகை முத்தி ழைத்த
     தனிப்பெரும் வானில் திங்கள்
சீருடன் வருதல் போல
     சீர்மையாய் வந்தார் நெஞ்சே


பார்ப்போரைக் கவர வல்ல
     பாங்கெழில் கோலங் கொண்ட
வார்ப்பட மாமோ! என்ன
     வந்ததும் என்னே நெஞ்சே


இளமையின் எழில்தெ றிக்க
     இணையிலா முஹம்ம தும்தான்
உளமலி இன்பம் கொண்டே
     உட்கார்ந்த தென்னே நெஞ்சே


உட்கார்ந்த அழகும் மற்றும்
     ஒளிவீசும் முகமும் ஆங்கே
உட்கார்ந்தி ருந்தோர் நெஞ்சை
     ஊடுரு வியதே நெஞ்சே


கண்களில் கருணை பொங்கும்
     கனிவுடன் வள்ளல் தந்த
எண்ணரும் காட்சி தன்னை
     எடுத்துரைப் பதுவோ நெஞ்சே


மக்களாம் கடலுக் குள்ளே
     மாண்புறு கதிரைப் போல
எக்களிப் போடே அண்ணல்
     இருந்ததும் என்னே நெஞ்சே


அருளொளி முகத்தில் வீச
     அண்ணல்தாம் அமர்ந்தி ருந்த
பெருமைசேர் காட்சி தன்னைப்
     பேசுவ தாமோ! நெஞ்சே


இளநகை இதழில் ஆட,
     இன்முகம் எழிலில் ஓங்க
வளமண இன்பம் தந்த
     வனப்பதும் என்னே நெஞ்சே


திண்ணிய உடலும் ஒன்றாய்த்
     திரண்டெழு தோளும் மார்பும்
கண்களைக் கவர வந்த
     காட்சியும் என்னே நெஞ்சே


மாலையால் பொலிந்த அண்ணல்
     மாண்புறு தோட்கள் வானைக்
கோலமாய்ப் பிடிக்க நிற்கும்
     குன்றாகு மென்பேன் நெஞ்சே


புருவத்தின் அழகை, மற்றும்
     பொன்னுடல் அழகை, அண்ணல்
உருவத்தின் அழகை யெல்லாம்
     உரைத்திட லாமோ நெஞ்சே


நெற்றியின் விரிவும் அண்ணல்
     நெடுங்கரம் அதுவும் பின்னால்
வெற்றியைக் கொள்வா ரென்றே
     விளம்பிய தென்னே நெஞ்சே


நல்லாடை பெருமை தன்னை
     நறுமண ஈர்ப்பு தன்னைச்
சொல்லாலே சொல்வ தாமோ!
     சொல்லரும் இன்பம் நெஞ்சே


கணக்கிலா விழிகள் அண்ணல்
     கவின்முக நகையை நோக்கி
மணவிழா சிறக்க நின்ற
     மாண்பதும் என்னே நெஞ்சே


உற்றவர் நெஞ்ச மெல்லாம்
     உவப்பினில் நீந்தி இன்பம்
பெற்றன என்றே இன்னும்
     பேசிடு வேனோ நெஞ்சே


பெற்றவர் அன்பை எல்லாம்
     பெருமழை யாய்ப்பொ ழிந்த
பொற்புடை ஹலிமா ஆங்கே
     பொலிவுடன் வந்தார் நெஞ்சே


ஹலிமாவைக் கண்ட அண்ணல்
     அளப்பரும் இன்பங் கொண்டு
பொலிந்ததை எழுத்தால் இங்கு
     பொறித்திட லாமோ? நெஞ்சே


தம்மரும் வளர்ப்புச் செல்வர்
     தகுமணக் கோலங் காண
விம்மிதத் தால்ஹ லீமா
     விளங்கிட லானார் நெஞ்சே


அழகெலாம் திரண்ட ஒன்றாய்
     அன்னமும் மயிலும் நாண
விழைமணக் கோலங் கொண்டே
     கதிஜாவும் மிளிர்ந்தார் நெஞ்சே


காரெனும் கூந்தல் வந்த
     காற்றோடு கலந்து பேச
பூரண மதியைப் போன்றே
     பொலிவுடன் வந்தார் நெஞ்சே


இன்பத்தின் சுமையைக் கொண்டே
     இலங்கிய பெண்கள் எல்லாம்
அன்னத்தைப் பழிப்ப தைப்போல்
     அசைந்துவந் தாரே நெஞ்சே


எள்விழ இடமில் லாமல்
     எழில்மணம் வீச வல்ல
கள்ளவிழ் மலர்க்கூட் டம்போல்
     கன்னியர் வந்தார் நெஞ்சே

தளிர்க்கரம் சிறித சைத்த்
     தாமரை அடியெ டுத்தே
களிப்புடன் கதிஜா வைத்த
     காட்சியும் என்னே நெஞ்சே


அடியின்மேல் அடியெ டுத்தே
     அழகொளி கதிஜா வந்த
வடிவினை விளக்கிச் சொல்ல
     வார்த்தையுண் டாமோ! நெஞ்சே


மங்கையர் கடலுக் குள்ளே
     மதியென ஒளிப ரப்பி
நங்கையர் திலகம் வந்த
     நலமதும் என்னே நெஞ்சே


தாமரை பட்டால் நோகும்
     தன்னுடை அடியெ டுத்து
கோமகள் குனிந்து வந்தே
     குந்திட லானார் நெஞ்சே


ஒளியெலாம் திரண்ட ஒன்றாய்
     உடலது மின்னும் போது
களியெலாம் திரண்ட ஒன்றாய்க்
     களிமுகம் பொலியும் நெஞ்சே


அணிகளின் ஒளிப்பெ ருக்கம்
     அழகுவான் வில்லைப் போல
இனிமைசேர் ஒளியைத் தந்த
     இயல்பதும் என்னே நெஞ்சே


மரகத ஒளிப ரப்பும்
     மாண்பினைக் காட்டிக் கையின்
விரல்களின் எழி்லி ளங்க
     வீற்றிருந் தாரே நெஞ்சே


நெற்றியின் அழகை உண்ட
     நெளிநகை நகைப ரப்ப
மற்றைய நகைகள் எல்லாம்
     மகிழாதோ சொல்வாய் நெஞ்சே


நான்கண்டேன் அழகை என்று
     நகைகள்தாம் ஒன்றுக் கொன்று
வீண்சண்டை ஒளியால் செய்த
     விந்தையும் என்னே நெஞ்சே


அடக்கத்தை நன்கு காட்டி
     அருங்குணப் பெருமை காட்டி
மடக்கொடி அமர்ந்தி ருந்த
     மாண்பதும் என்னே நெஞ்சே


நெறியதன் புறம்செல் லாத
     நேர்விழி அழகைக் கொட்டி
மருவிய காட்சி தன்னை
     மகிழ்ந்துரைப் பதுவோ நெஞ்சே


மேகங்கொள் மாடி மீது
     முழுமதி பலவாம் என்ன
ஏகமாய்ப் பெண்கள் நின்ற
     எழிலதும் என்னே நெஞ்சே


இருவரும் பொலிந்த அந்த
     இன்புடைக் காட்சி தன்னைப்
பெருவிருந் தாக எண்ணிப்
     பெண்கள்தாம் உண்டார் நெஞ்சே


வந்தமர் மக்க ளெல்லாம்
     வதுவையின் மாண்பைக் கண்டு
சிந்தையில் கொண்ட இன்பைச்
     சித்திரித் திடவோ நெஞ்சே


அன்புற்ற மக்கள் சூழ
     அபுதாலிப் உரைநி கழ்த்த
இன்புடன் மணமு டித்தே
     இருவரும் களித்தார் நெஞ்சே

மணமதன் கோலங் கண்ட
     மக்களின் வாயில் எல்லாம்
‘அணங்கினுக் கரசன்’ என்ற
     அருமொழி தானே நெஞ்சே


குணங்களின் சிறப்பு யாவும்
     கூடிய ‘முஹம்மத்’ அந்த
அணங்கினுக் காக வந்த
     அழகரோ! என்றார் நெஞ்சே


வனிதையாய் வடிவெ டுத்த
     வனப்புடை ‘கதிஜா’ அந்தப்
புனிதருக் காக வந்த
     பூவையோ! என்றார் நெஞ்சே


திகழ்மணம் திரண்டெ ழுந்த
     திருமணம் இதுவே என்ன
புகழ்மணம் பாய்ச்சி நின்ற
     பொற்பதும் என்னே நெஞ்சே

 

பெருமைக்கும் அன்பி னுக்கும்
     பெற்றியாய் அமைந்த அந்தத்
திருமணப் பண்பு தன்னைத்
     தெரிவிக்க வோ!என் நெஞ்சே


வையக வரலாற் றின்கண்
     வனப்புடன் பொறிக்க வல்ல
தெய்வீகத் திரும ணத்தின்
     தேசதும் என்னே நெஞ்சே


ஒளிவண்ண ஓவி யத்தை
     உரிமையாய்ப் பெற்றோ மென்ற
களிப்பதாம் கடலில் ஆடி
     கதிஜாஇ ருந்தார் நெஞ்சே


தன்மனம் தேர்ந்தெ டுத்த
     தகைமைசால் தலைவர் தம்மை
இன்புடன் பெற்றோ மென்றே
     எண்ணிட லானார் நெஞ்சே

 

`ஈரேழு லோகந் தன்னின்
     இணையிலாத் துணைவர் தம்மைப்
பாராளக் கொண்டேன்''என்றே
     பரவச முற்றார் நெஞ்சே


வண்டுக்குக் காத்தி ருந்த
     வனமலர் வண்டைக் காணக்
கொண்டிடும் இன்பந் தன்னைக்
     கூறுவ தாமோ! நெஞ்சே


தென்றலுக் காக ஏங்கும்
     தேமலர்ச் சோலை வந்த
தென்றலைக் கண்டால் ஆடித்
     திளைக்காதோ? சொல்வாய் நெஞ்சே


பான்மதி வருகைக் கேங்கும்
     பரவைதான் மதியைக் காணின்
வான்முட்டத் துள்ளித் துள்ளி
     வளைந்தாடி டாதோ? நெஞ்சே

 

கொம்பின்றித் தனித்து நிற்கும்
     கொடியது கொம்பைக் கண்டால்
விம்மித முறுத லும்தான்
     வியப்பதோ சொல்வாய்! நெஞ்சே


காத்திருந் திட்ட அந்தக்
     கதிஜாவின் முகம லர்தான்
பூத்ததை விளக்கி யானும்
     புகன்றிட லாமோ நெஞ்சே


மாமுகிற் கூட்டங் கண்டு
     மகிழ்ந்திடும் மயிலைப் போல
மாமணி வருகை யாலே
     மகிழ்ந்திட லானார் நெஞ்சே


நித்திரைக் கண்ணில் தோன்றி
     நினைவினில் நிலைத்த அந்தப்
பத்தரை மாற்றுப் பொன்னைப்
     பார்த்துவந் தாரே நெஞ்சே

 

உருமுக மாக உள்ளே
     உருக்கமாய் எழுதி வைத்த
திருமுகம் நேரில் தோன்றத்
     தோன்றாதோ இன்பம்! நெஞ்சே


அகலாமல் ஆண்டு நிற்கும்
     அண்ணலின் அழகைக் கண்டே
புகழாமல் கதிஜா கொண்ட
     புளகமும் என்னே நெஞ்சே

துணையினை இழந்து நின்ற
     தூய்மைசேர் கதிஜா வுக்குத்
துணையென ஆன வள்ளல்
     தூய்மையும் என்னே நெஞ்சே


தேனதும் சுவையும் போல -
     தென்றலும் சுகமும் போல -
வானதும் நிலவும் போல
     வாழ்ந்ததும் என்னே நெஞ்சே


பூவதும் மணமும் போல-
     பொன்னதும் ஒளியும் போல-
பாவதும் பண்ணும் போல
     பொருந்திய தென்னே நெஞ்சே


எதுகையும் மோனை தானும்
     இணைந்திருப் பதனைப் போன்று
மதுரமாய்ச் சேர்ந்த அன்னார்
     மாண்பதும் பெரிதே நெஞ்சே


செம்புலப் பெயல்நீர் போல
     சேர்ந்தவர் அறம் புரிந்த
செம்மைசேர் இல்ல றத்தைச்
     செப்புவ தாமோ? நெஞ்சே


அண்ணலின் அன்பில் தோய்ந்தே
     அகமொத்துப் பணிக ளாற்றும்
கண்ணியம் பெற்றோ மென்றே
     கதிஜாசொல் வாராம் நெஞ்சே


தேக்கியே வைத்தி ருந்த
     திவ்யமாம் அன்பை எல்லாம்
தேக்கினார் தொண்டில் என்றே
     தெரிவிக்க வோ!என் நெஞ்சே


தன்னுடையச் செல்வம் யாவும்
     தம் `முஹம் மது''வுக் கென்றே
கன்னியர் மகுடம் செய்த
     காட்சியும் என்னே நெஞ்சே


மனையறம் ஆற்றி அன்னார்
     மகிழ்வுடன் பணிகள் செய்தே
அனைவரும் போற்ற வாழ்ந்த
     அழகதும் என்னே நெஞ்சே


காணாதார், கேளார் மற்றும்
     கால்முடப் பட்டோ ருக்கும்
பேணுனர் அற்றோ ருக்கும்
     பெருந்துணை யானார் நெஞ்சே


நன்றியை மறவா வள்ளல்
     நன்மணப் பரிச தாக
அன்புடை ஹலிமா வுக்கும்
     அருங்கொடை அளித்தார் நெஞ்சே

நாற்பது ஆடு கள்எம்
     நலமுடைப் பரிசென் றோதி
ஏற்புடன் அனுப்பி வைத்த
     எழிலதும் என்னே நெஞ்சே


பதினைந்தாண் டுக்குள் ஆங்கே
     பற்பலர் போற்றும் வண்ணம்
அதிவிரை வாக மக்கள்
     அகம்புகுந் தாரே நெஞ்சே


இவ்வாறே இவர்கள் வாழ்வில்
     இன்பமாம் தென்றல் வீசச்
செவ்விய மக்கட் செல்வம்
     செழித்ததும் வியப்போ நெஞ்சே


அறுபெரும் மாணிக் கங்கள்
     அவர்குலம் விளங்கத் தோன்ற
இருபெரும் *ஆண்செல் வங்கள்
     இறந்ததும் என்னே நெஞ்சே


ஜைனபு, ருகையா மற்றும்
     உம்முகுல்தூம், பாத்திமா
எனப்பெரும் பூக்கள் தந்த
     எழில்வளம் என்னே நெஞ்சே


இனியசொற் செல்வத் தோடும்
     இணையிலாப் புகழி னோடும்
கனிமொழி முஹம்ம தும்நம்
     கதிஜாவும் களித்தார் நெஞ்சே


பொன்னொளிப் பெருக்கத் தோடும்
     பொற்புடை நலங்க ளோடும்
இன்னொளிச் செல்வர் கொண்ட
     இசையதும் என்னே நெஞ்சே