பக்கம் எண் :

29

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இலட்சியம் வகுத்த இன்னருட் கொண்டல்

திருக்-குர்ஆன் அருளைப் பெற்றார்

 

ஆற்றல்நல் அறிவி னுக்கே
     அமைந்ததோர் வயதாம் அந்த
நாற்பதை அண்ணல் பெற்றே
     நன்நிறை வுற்றார் நெஞ்சே


ஒளிதரு உணர்வ டைந்த
     ஒப்பிலாப் பருவந் தன்னால்
களிதரு பணிகள் செய்யக்
     காத்திருந் தாரே நெஞ்சே


வாழ்வாங்கு வாழும் வாழ்வில்
     வளம்பல கண்ட அண்ணல்,
‘ஆழ்ந்தசிந் தனையொன் றேதம்
     அரும்பொருள்’ என்றார் நெஞ்சே


சிந்தனை வானந் தன்னில்
     சிறகுடன் பறந்த அண்ணல்
சந்தத மும்சிந் தித்த
     சால்பதும் அரிதே நெஞ்சே


சிந்தனைக் கடலில் ஆழ்ந்தே
     செம்மைசேர் தெளிவைக் காணும்
சிந்தையால் தனிமை கொண்ட
     செயலதும் என்னே நெஞ்சே


பேச்சினைக் குறைத்துக் கொண்டே
     பெருமைசேர் அமைதி கொண்டு
கூச்சலை வெறுத்தொ துக்கும்
     குணத்தைவி ழைந்தார் நெஞ்சே


தனிமையில் வாழு கின்ற
     தகவதே வாழ்வில் நல்ல
இனிமையைச் சேர்க்கு மென்றே
     இருந்திட லானார் நெஞ்சே


எண்ணிலாக் கேள்வி கேட்டே
     ஏற்றதோர் பதிலே இன்றி
அண்ணல்தாம் சுழன்று நின்ற
     அயர்வதும் என்னே நெஞ்சே

உலகில்ஏன் பிறந்தோ மென்ற
     உய்வுடைக் கருத்தில் நின்றே
பலப்பல எண்ணி எண்ணிப்
     பார்த்திட லானார் நெஞ்சே


உலகிற்கு நாமா? அன்றி
     நமக்கிந்த உலகா? என்னும்
நலமுடைக் கருத்தில் ஆழ்ந்தே
     நாளெல்லாம் நின்றார் நெஞ்சே


மக்காவுக் கருகி லுள்ள
     மலையாம்‘ஹி ரா’க்கு கைக்குள்
தக்கநம் அண்ணல் சென்றே
     தனிமைகண் டாரே நெஞ்சே


சிரமெலாம் வியர்க்கு வண்ணம்
     சிந்தனை செய்து செய்தே
இரவிலும் விழித்தி ருந்த
     இயல்பதும் என்னே நெஞ்சே


பகலதை, இரவை எண்ணிப்
     பார்த்திட மனமே இன்றி
அகத்தொளி நாடி அண்ணல்
     அங்கிருந் தாரே நெஞ்சே


ஊணதை, உறக்கந் தன்னை
     உளமதில் நினையா வண்ணம்
மாண்புசிந் தனையில் வீழ்ந்தே
     மகிழ்ந்திருந் தாரே நெஞ்சே


தனித்திருந் தேப சித்துத்
     தாகமாய் விழித்தி ருந்து
மனிதத்தின் மாண்பொன் றினையே
     மனங்கொள்ள லானார் நெஞ்சே


அறிவொளி நாடி அண்ணல்
     அமைதிசேர் குகையி னுள்ளே
நெறியினைக் குறியாய்க் கொண்டே
     உருகிட லானார் நெஞ்சே


பசியொடும் தாகத் தோடும்
     பலநாட்கள் குகையுட் தங்கி
அசைவிலா மோனந் தன்னில்
     ஆழ்ந்திருந் தாரே நெஞ்சே


உலகத்தின் நினைவே இன்றி
     உறக்கத்தில் ஆழ்ந்த போதும்
துலக்கஞ்சேர் கனவு கண்டே
     துடித்தெழுந் திடுவார் நெஞ்சே


வியர்வைதான் பெருகி யோட
     விழித்தெழு நாய கர்க்கு
நயமுடை கதிஜா செய்த
     நற்பணி என்னே நெஞ்சே


கனவில்தம் கண்க ளுக்குக்
     கவினொளி உருவ மொன்று
தினம்தினம் வந்து தோன்றும்
     திவ்யத்தைச் சொன்னார் நெஞ்சே


அவ்வுரை கேட்ட மங்கை
     அன்புள்ள துணைவ! நீவிர்
எவ்விதப் பயமுங் கொள்ள
     வேண்டாமென் றியம்ப லானார்


எவருக்கும் தீமை செய்யும்
     எண்ணமே கொள்ளா நீங்கள்
கவலையேன் கொள்ள வேண்டும்?
     கலங்கற்க! என்றார் நெஞ்சே


அம்மொழி கேட்ட வள்ளல்
     அச்சத்தால் சோர்ந்த வண்ணம்
கம்மிய குரலில் சொன்ன
     கனிமொழி கேட்பாய் நெஞ்சே


கனவினில் வந் தோன்றும்
     கவினுரு மாறி என்றன்
நினைவினில் வந்து கண்முன்
     நிற்குதே என்றார் நெஞ்சே


அவ்வாறு பேசுங் காலை
     அண்ணல்தாம் நடுந டுங்க,
அவ்வித மாற்றங் கண்டு
     கதிஜாவும் அயர்ந்தார் நெஞ்சே


அண்ணலோ கையை நீட்டி
     அங்குபார்! உருவ மென்றே
பன்முறை உரைக்க லானார்
     பார்! பார்! பார்! என்றார் நெஞ்சே

ஒளியுரு வத்தைக் காண
     உவந்திட்ட கதிஜா வுக்கோ
துளியுமே தெரிய வில்லை
     துடித்திட லானார் நெஞ்சே


அண்ணலே! நீங்கள் என்றன்
     அருகினில் நின்று பார்த்தால்
கண்களால் நானும் காண்பேன்
     காட்டுக! என்றார் நெஞ்சே


அண்ணலவ் வாறு செய்ய
     அவ்வுரு தோன்ற வில்லை
விண்ணுரு மறைந்த தென்றே
     விளம்பிட லானார் நெஞ்சே


அம்மொழி கேட்ட தும்தான்
     அரிவையர் திலகம் ஆங்கே
உண்மையைக் கண்டே னென்றே
     உரைத்திட லானார் நெஞ்சே


அருகினில் நானி ருக்க
     அவ்வுரு நிற்க வில்லை;
பெருமைசேர் வான வர்க்கே
     பெட்பிதாம் என்றார் நெஞ்சே


கற்பதன் மாண்பு ணர்ந்து
     கண்டஅவ் வுருவம் செல்ல-
அற்புத மனித ரானீர்
     அஞ்சற்க! என்றார் நெஞ்சே


ஒளியுரு கனவில் மற்றும்
     நினைவினில் உதித்த தாலே
அளிமிகு அண்ணல் கொஞ்சம்
     அச்சத்தில் மீண்டார் நெஞ்சே


பன்முறை அதனைக் கண்ணால்
     பார்த்திடும் வாய்ப்பி னாலே
நன்முறைப் பயிற்சி தன்னை
     நலமுடன் பெற்றார் நெஞ்சே


அப்பெரும் பயிற்சி யாலே
     அண்ணல்தாம் பெரிதும் மாறி
எப்பொழு தும்சிந் தித்தே
     இருந்திட லானார் நெஞ்சே


அன்றுநல் லிரவில் அண்ணல்
     அழகு ‘ஹி ரா’க்கு கைக்குள்
என்றைக்கும் போலு றங்க
     எழுந்ததே ஒளிதான் நெஞ்சே


ஒளியினைக் கண்ட அண்ணல்
     உள்ளத்தில் அதிர்ச்சி யுற்றார்
ஒளிப்பெருக் கத்தில் ஆழ்ந்தே
     உணர்விழந் தாரே நெஞ்சே


கூர்ந்துபின் பார்க்க முன்பு
     கனவினில் வந்து கூறும்
சீர்மிகு உருவே என்று
     சிந்தைகொண் டாரே நெஞ்சே


நாதரின் முன்னால் நின்ற
     நல்லொளி உருவம் ஆங்கண்
ஓதுவீ ராக! என்றே
     உரைத்ததும் என்னே நெஞ்சே


ஒருவாறு மனமும் தேறி
     ஓதநான் அறியேன் என்றே
மறுமொழி வள்ளல் தந்த
     மாண்பதும் என்னே நெஞ்சே


உரையினைக் கேட்ட அந்த
     ஒளியுரு நெருங்கி வந்தே
தரைபுகழ் அண்ண லைத்தாம்
     தழுவிய தென்னே நெஞ்சே


ஓதுக! என்று மீண்டும்
     ஒளியுரு உரைத்த போது
ஓதநான் அறியேன் என்றே
     உரைத்திட லானார் நெஞ்சே


ஒளியுரு மீண்டும் அண்ணல்
     உடலதை இறுகப் புல்லி
அளியுடன் மும்மு றைதான்
     அணைத்ததும் என்னே நெஞ்சே


அணைத்தஅம் மாத்தி ரத்தில்
     அண்ணல்தாம் மெய்சி லிர்க்க
அணைத்தவர் விலகி ஆங்கே
     அண்ணலை நோக்கி நின்றார்


ஒளியுரு நோக்க நோக்க
     உத்தம அண்ண லாரும்
தெளிவுறு ஒளிவெள் ளத்தில்
     திகழ்ந்திட லானார் நெஞ்சே


அகத்தொளி பெற்றொ ளிர்ந்த
     அண்ணலை உருவம் நோக்கி
மகத்துவ வாய்தி றந்து
     வசனிக்க லானார் நெஞ்சே


திருக்-குர்ஆன் அருளைப் பெற்றார்


இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக்
 கலகல் இன்ஸான மின்அலக்


மேதினி யைப்ப டைத்த
     மேலவன் பெயரைக் கொண்டே
ஓதுக! மறையை என்றவ்
     வுருவுரைத் ததுவே நெஞ்சே


அறியாத வற்றை யெல்லாம்
     அறிவித்துத் தந்த உன்றன்
இறைவனின் பெயரைக் கொண்டே
     இயம்புக! என்றார் நெஞ்சே

 

ஒளியுரு உரைத்த வண்ணம்
     ஓதிய அண்ண லாரும்
ஒளியுரு தன்னைப் பார்க்க
     ஒளிமறைந் ததுவே நெஞ்சே


இறைதூதர் நீரே என்றும்
     இறைமறை தந்தோ மென்றும்
அறைந்தந்த உருவம் சென்ற
     அதிசயம் என்னே நெஞ்சே


நெஞ்சமாம் சுவடி தன்னில்
     நினைவெனும் கோலால் அந்தச்
செஞ்சொலை எழுதிக் கொண்ட
     சிறப்பதும் என்னே நெஞ்சே


ஆயினும் அண்ணல் அந்த
     அதிசய உருவம் ஆங்கே
மாயமாய் மறந்த தாலே
     மட்டிலா அச்சங் கொண்டார் !

 


நெஞ்சினில் நிறைந்தி ருந்த
     நீள்பயத் தோடு வள்ளல்
அஞ்சிஅக் குகையி னுள்ளே
     அயர்ந்திட லானார் நெஞ்சே


விடியுமுன் இல்லம் ஏகி
     விண்ணொளி பெற்ற அண்ணல்
நடுங்கியே அயர்ந்து நின்ற
     நிலையதும் என்னே நெஞ்சே


போர்வையால் போர்த்தச் சொல்லிப்
     பொன்னொளிக் கதிஜா வின்பால்
கார்முகில் அனைய வள்ளல்
     கலங்கிய தென்னே நெஞ்சே


போர்வையால் போர்த்துங் காலை
     புதுமுகம் தன்னைக் கண்ட
நாரியர் திலகம் ஆங்கே
     நல்வியப் பதனில் ஆழ்ந்தார்

 


அண்ணலின் மாற்றங் கண்ட
     அன்புறு கதிஜா வுக்கோ
உண்மையை எடுத்துை ரக்க -
     உளமது சோர்ந்தார் நெஞ்சே


அண்ணலின் கலக்கத் திற்கோர்
     ஆறுதல் கதிஜா சொல்ல -
கண்ணிய அண்ண லாரும்
     கண்ணயர்ந் தாரே நெஞ்சே


விந்தைசேர் செய்தி கேட்ட
     வியப்புறு கதிஜா ஆங்கே
சிந்தனைக் கடலில் ஆழ்ந்த
     செய்தியைக் கேட்பாய் நெஞ்சே


கணவரின் பிறப்பை, அன்னார்
     காட்சியை, உயர்வ நெஞ்சில்
கணந்தொறும் எண்ணி எண்ணி
     கதிஜாசிந் தித்தார் நெஞ்சே

 


புதுப்புது காட்சி தோன்றும்
     பொற்புறு கணவர் வாழ்வை
இதயத்தில் எண்ணி எண்ணி
     இன்புற லானார் நெஞ்சே


இளமையில் அண்ணல் கொண்ட
     இன்புறு குணங்கள் தம்மை
உளமதில் எண்ணி எண்ணி
     உவந்திட லானார் நெஞ்சே


வர்த்தகத் துறையில் அண்ணல்
     வளமுட னேயொ ளிர்ந்த
அற்புதத் திறனை யெல்லாம்
     அவரெண்ண லானர் நெஞ்சே


மணங்கொண்ட நாளாய்க் காணும்
     மாண்பினை எண்ணி எண்ணி
அணங்கவர் வாழ்வைப் பற்றி
     அதிசயங் கொண்டார் நெஞ்சே

 


பிறந்தது முதலாய் அண்ணல்
     பேரருட் பதவி ஏற்கும்
வரையுள்ள ‘வாய்மை’ தன்னின்
     மாண்பினை நினைத்தார் நெஞ்சே


அன்னவர் துணையால் என்றன்
     அமைவுறு வாழ்வில் காணும்
இன்பங்கள் பலவே இன்னும்
     இருக்குமென் றாரே நெஞ்சே


இவ்வாறே அண்ணல் வாழ்வில்
     இணைந்துள்ள வியப்பிற் கெல்லாம்
செவ்விய விளக்கங் காணச்
     சிந்தை துடித்தார் நெஞ்சே


அகமது வியந்து நின்ற
     அணங்கும்தன் பெரிய தந்தை
மகனவர் ‘வரக்கா’ வின்பால்
     மகிழ்ந்திதைச் சொன்னார் நெஞ்சே

 


முன்மறை நூல்கள் தம்மை
     முழுதுணர்ந் தொளிர்ந்த அந்த
அன்புடை வரக்கா ஆங்கே
     அறிஞராய் நின்றார் நெஞ்சே


வரக்காஇச் செய்தி கேட்டார்
     வாயுரை ஏது மின்றிச்
சிறகடித் தேஎங் கெங்கோ
     சென்றிட லானார் நெஞ்சே


முன்வந்த மறைகள் சொன்ன
     மொழிகளின் வண்ணம் இங்கே
இன்நபி வந்தா ரென்றும்
     எண்ணிட லானார் நெஞ்சே


தங்கையின் இடத்தில் கொண்ட
     தாங்கொணா அன்பி னாலே
அங்கவர் எடுத்து ரைத்த
     அருமுரை கேட்பாய் நெஞ்சே

 


என்னரும் தங்காய்! உன்றன்
     ஏற்றத்தை என்ன சொல்வேன்
முன்னறி வித்த வண்ணம்
     முடிந்தது என்றார் நெஞ்சே


ஒன்றுமே விளங்கா வண்ணம்
     உழன்றஅக் கதிஜா வின்பால்
அன்னவர் உரைத்த வற்றை
     அறைந்திடக் கேளாய் நெஞ்சே


இறைவன்தன் தூதாய் உன்றன்
     இதயத்து முஹம்ம தைத்தான்
நிறைவுடன் ஏற்றுக் கொண்டான்;
     நீஅஞ்சேல்! என்றார் நெஞ்சே


இறுதியாய் வந்தி ருக்கும்
     இன்நபி தோற்றத் தோடும்
இறைமறை யின்து வக்கம்
     எழுந்ததே என்றார் நெஞ்சே

 


அப்பெரும் மறைய ளிக்க
     அவர்முனம் வந்த வர்தான்
*ஜிப்ராயீல் ஆவார் என்றே
     செப்பிட லானார் நெஞ்சே

* ஜிப்ராயீல் - ஜிப்ரீல் - Gabriel - இறைநேசத்
தூதுச் செல்வர்க்கெலாம் மறையுரை வழங்கும்
அமரர் முதல்வர்.
* ஈஸாநபி - Jesus - ஏசுநாதர் * மூஸாநபி
Moses - மோசே


நிறைகுணம் வாய்ந்த தூதர்
     நேர்த்திசேர் ‘மூஸா’ வுக்கும்
இறையாணை யைக்கொ ணர்ந்தார்
     இவரேதான் என்றார் நெஞ்சே


இரக்கத்தின் உருவாய் வந்த
     இனிய*ஈ ஸா’ நபிக்கும்
இறைமறை கொணர்ந்த தும்தான்
     இவராவர் என்றார் நெஞ்சே


மானுடம் முளைத்த நாளாய்
     மாபெரி யோன்தூ தர்க்கு-
தேனனைச் செய்தி ஈவோர்
     இவரேயென் றாரே நெஞ்சே


 

முன்மறை பெற்ற வர்க்கும்
     முடிவுநாள் வரையுள் ளோர்க்கும்
அன்புடைத் தலைவர் உன்றன்
     அகங்குளிர் கணவர் என்றார்


இதுவரை உலக மக்கள்
     எதிர்நோக்கி இருந்த தூதர்
புதுவழி காட்டும் உன்றன்
     புனிதரென் றுரைத்தார் நெஞ்சே


முன்னறி வித்த வண்ணம்
     முதல்வன்தன் மறைய ளித்தான்
உன்னரும் கணவர் கொண்ட
     உயர்வென்ன என்றார் நெஞ்சே


அன்புறு தங்காய்! நானோ
     அதிகநாள் இருக்க மாட்டேன்;
உன்னருங் கணவர் மாண்பை
     உரைக்கக்கே ளென்றார் நெஞ்சே

 


இறைமறை அவரின் பாலே
     இறங்கிக்கொண் டேயி ருக்கும்;
நிறையுள்ள மக்கள் பல்லோர்
     நேசிப்பர் என்றார் நெஞ்சே


தேனதில் வீழு கின்ற
     திரளான ஈக்க ளைப்போல்
வான்மறை கேட்க மக்கள்
     வருவாரென் றாரே நெஞ்சே


இடையினில் பகைவர் தோன்றி
     எல்லையில் லாத துன்பைக்
கொடுக்கவும் அஞ்சா ரென்றே
     கூறிட லானார் நெஞ்சே


தன்னுயிர்க் கணவ ருக்குத்
     தக்கதுன் பெழுமே என்ற
வன்மொழி அதனைக் கேட்டே
     வருந்திட லானார் நெஞ்சே

 


புகழுறு வாரென் றோத
     பொலிந்திட்ட அவர்மு கத்தில்
பகையென உரைத்த போது
     படராதோ கவலை? நெஞ்சே


தங்கையே! துன்பத் தாலே
     தம்நாட்டை விட்டுச் செல்லும்
வெங்கனல் செய்தி தன்னை
     விளம்பிடேன் என்றார் நெஞ்சே


தன்னருங் கணவர் பின்பு
     தக்கதுன் புறுவார் என்ன
கண்ணீரச் சிந்தி ஆங்கே
     கதிஜாதான் நைந்தார் நெஞ்சே


துன்பத்தை அடைந்த போதும்
     தூய்மைசேர் முஹம்ம தும்தான்
அன்புறு பணியால் வெல்வார்
     அறிக!என் றுரைத்தார் நெஞ்சே

 


ஆண்டவன் துணையால் பாரில்
     அன்பர சாட்சி தன்னை
மாண்புடன் நிறுவி வெற்றி
     மாலையும் பெறுவார் என்றார்


அம்மொழி கேட்ட தும்தான்
     அருங்குண கதிஜா நெஞ்சே
மும்மடங் காக இன்பம்
     முகிழ்த்தெழுந் ததுவே நெஞ்சே


பலகோடி மக்கள் சூழ
     பண்புறு முஹம்ம தும்தான்
நலமிகு *‘கஃபா’ வுக்குள்
     நடப்பார்என் றாரே நெஞ்சே


இவைகளைக் கண்ணால் கண்டே
     இன்புறும் வாய்ப்பில் லாமல்
புவிவாழ்வைத் துறப்போ னாய்யான்
     போவேன்என் றாரே நெஞ்சே

 


ஆயினும் தங்காய்! நீதான்
     அகம்வருந் தாமற் சென்று
தூயநும் கணவர் காவல்
     தொடருக! என்றார் நெஞ்சே


எல்லையில் இன்ப முற்றே
     எழுந்தநம் கதிஜா அன்னை
நல்லொளிச் செல்வர் முன்பு
     நாட்டமாய் வந்தார் நெஞ்சே


வந்ததும் வியர்வை தன்னை
     வாஞ்சையாய்த் துடைத்தெ டுத்து
வந்தநல் பேறு பற்றி
குரைத்தார் நெஞ்சே


கதிஜாவின் மொழிகள் தம்மைக்
     கனிவுடன் கேட்ட அண்ணல்
எதிரிகள் எமைத்து ரத்தி
     அடிப்பரோ? என்றார் நெஞ்சே

 

மக்களுக் குழைக்க எண்ணும்
     மனமுடை எனக்கு மக்கள்
துக்கமா? தருவார் என்றே
     தொடர்ந்தவர் கேட்டார் நெஞ்சே


அண்ணலின் மொழியக் கேட்டே
     அயர்வுற்ற கதிஜா ஆங்கு
வண்ணமாய் எடுத்து ரைத்த
     வாசகம் கேளாய் நெஞ்சே


ஆண்டவன் துணையால் நீவிர்
     அனைத்திலும் வெற்றி கொள்வீர்!
மீண்டும்நான் கூறு கின்றேன்;
     மேன்மையே என்றார் நெஞ்சே


நீர்கொண்ட கொள்கைக் கிங்கு
     நிச்சயம் தோல்வி இல்லை;
பார்கொள்ளக் காண்பீ ரென்றே
     பகர்ந்திட லானார் நெஞ்சே