பக்கம் எண் :

38

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

அருந்தவம் புரிந்த பெருந்தூதர்


வாழ்க்கையின் வெற்றி எல்லாம்
     வாய்த்திடும் ஞானம் எல்லாம்
தாழ்த்திடும் பண்பால் என்றே
     தனிமைகொண் டாரே நெஞ்சே


தனிமையில் இன்பங் கண்டு
     தவநலம் வளர்த்த தோடு
இனியவர் இதயத் துள்ளே
     இன்னொளி கண்டார் நெஞ்சே

 

பேச்சினைப் பெரிதும் நீக்கிப்
     பேரொளி கொண்ட அண்ணல்
ஆச்சரி யங்கள் என்ன
     அருஞ்செயல் செய்தார் நெஞ்சே


நெஞ்சமாம் பள்ளி தன்னில்
     நேயத்தால் இறையை வைத்து
மிஞ்சிய ஒளிய ளித்த
     மேன்மையும் என்னே நெஞ்சே


ஒன்றித்த ஒருமை யாலே
     உளத்தினில் களிநி ரப்பி
இன்புறு நிலையில் அண்ணல்
     இருந்ததும் என்னே நெஞ்சே


அனைத்தையும் ஆட்டு விக்கும்
     ஆண்டவன் அருளை, அன்பை
நினைந்தயர் வில்லா வண்ணம்
     நெகிழ்ந்ததும் என்னே நெஞ்சே


அருவிபோல் நீர்பெ ருக்கி
     அகமெலாம் கனிந்து நிற்க
பெருமகன் வணங்கி நின்ற
     பெட்பெலாம் பெரிதே நெஞ்சே


அலைமனப் போக்கை வென்றே
     அல்லாஹ்வின் சீர்இ சைத்தும்
அலைகடல் அனைய ஆற்றல்
     அடைந்திட லானார் நெஞ்சே


புறமனப் போக்கை எல்லாம்
     புறம்போகு வண்ணம் செய்தே
அறமனம் கொண்ட அண்ணல்
     ஆற்றல்கள் என்னே நெஞ்சே


பணிந்திடும் நெஞ்சத் தோடு
     பக்குவம் பலவும் பெற்ற
மணியனை நாய கத்தின்
     மனத்தொளி பெரிதே நெஞ்சே

 

அளப்பரும் ஆற்றல் கொண்ட
     அண்ணலின் நெஞ்சின் மாண்பை
அளந்திட முடியு மாமோ ?
     அறைந்திடு வாய்!என் நெஞ்சே


உள்ளொளி நல்க வல்ல
     ஒருவனை நினைவில் கொண்டே
வள்ளல்தாம் மனத்தை வென்ற
     வல்லமை பெரிதே நெஞ்சே


உள்ளத்தை அவனுக் கீந்தே
     உலகத்தைத் தொண்டால் ஈர்த்து
வெள்ளம்போல் அன்பைத் தந்த
     விந்தையும் என்னே நெஞ்சே


நாக்கு,வாய், செவி,மூக் கென்னும்
     நல்லுறுப் புக்கள் எல்லாம்
வாக்குக்கு வலிமை தந்த
     வனப்பதும் என்னே நெஞ்சே

 

மேனிலை தன்னை எண்ணி
     மேலவன் நினைவே கொண்டு
மோனஞ்சேர் தவத்தி லாழ்ந்தே
     மூழ்கிய தென்னே நெஞ்சே


அருளாளன் அருளை வேண்டி
     அன்பான நாய கம்தான்
இருவிழி நீரைச் சிந்தி
     இணைந்ததும் என்னே நெஞ்சே


ஆண்டவன் அருளைக் கூட்டும்
     அனைத்தையும் விரும்பி ஏற்றே
பூண்டநற் பொலிவை எல்லாம்
     புகன்றிடல் எளிதோ? நெஞ்சே


அகஒளி பெருக்கத் தாலே
     அதிசயம் என்று சொல்ல
முகத்தொளி கூட்டி நின்ற
     முழுமையை உரைப்ப தாமோ?

 

நாட்டத்தை அவன்பால் வைத்த
     நாயகம் வாழ்வில் கொண்ட
தேட்டத்தின் பெருமை தன்னைத்
     தெரிவிப்ப தாமோ ? நெஞ்சே


உள்ளொளி ஆத்ம இன்பம்
     உயர்தவப் பொலிவை எல்லாம்
வள்ளல்தான் முழுதும் பெற்ற
     வனப்பதை உரைப்ப தாமோ ?


தானென்ற உணர்வில் லாத
     தன்மையில் காணும் இன்பில்
ஊனெலாம் உருகி நின்ற
     உயர்வதும் என்னே நெஞ்சே


அயராது அண்ண லும்தான்
     அகவழி பாடு செய்ய
உயரருள் ஆன்ம நேய
     உத்வேகம் கொண்டார் நெஞ்சே


அளப்பரும் ஆன்ம ஆற்றல்
     அருளிய சக்தி கள்தாம்
பலப்பல வெற்றி தன்னைப்
     பயந்ததும் என்னே நெஞ்சே


அகஆய்வுக் கூடந் தன்னில்
     ஆத்மீகத் தேர்வு செய்தே
தகவுடன் அண்ண லும்தான்
     தண்ணொளி பெற்றார் நெஞ்சே


ஆத்மீகத் தேர்வு தன்னில்
     அண்ணலார் வெற்றி கொண்டே
சாத்வீகம் கொள்ள அல்லாஹ்
     சார்ந்திட லானான் நெஞ்சே


நித்திரை வந்த போதும்
     நினைவெலாம் அவன்மேல் வைத்துச்
சித்தத்தில் ஒளியைச் சேர்த்த
     சிறப்பதும் என்னே நெஞ்சே

 

நித்திரை எல்லாம் நேயன்
     நினைப்பினில் ஆழ்ந்தி ருந்து
புத்தொளித் தவம்பு ரிந்த
     புனிதமும் என்னே நெஞ்சே


உலகெலாம் உறங்கும் வேளை
     உறங்காத விழிக ளோடு
பலப்பல ஆய்ந்து நின்ற
     பக்குவம் என்னே நெஞ்சே


உடலெலாம் உறங்கும் போதும்
     உறங்காத உளத்தி னோடு
திடமுடன் சார்ந்து நின்ற
     திறனதும் பெரிதே நெஞ்சே


இரவெலாம் நின்று நின்று
     இறைவனை வணங்கி ஏத்தும்
திருவுடைக் காட்சி தன்னைத்
     தெரிவிப்ப தாமோ நெஞ்சே


இரவெலாம் உருகி நெஞ்சம்
     இறைவனின் நினப்பில் ஆழ்ந்தே
சுரந்திடும் கால்க ளோடு
     சுகித்துநின் றாரே நெஞ்சே


இல்லாளின் தூக்கத் திற்கும்
     இடையூறே இல்லா வண்ணம்
மெல்லவே எழுந்து போற்றும்
     மேன்மையும் என்னே நெஞ்சே


பாயினில் படுத்தி ருந்தே
     பதைபதைத் தேஎ ழுந்தும்
ஆயிஷா அண்ண லின்பால்
     அறைந்ததைக் கேளாய் நெஞ்சே


தூதரே! நீங்க ளும்தான்
     தூயவன் அன்பைக் கொண்டீர்;
ஆதலால் கண்வி ழிக்க
     அவசிய மாமோ ? என்றார்


அம்மொழி தன்னைக் கேட்ட
     அன்புடை நாய கம்தான்
எம்மொழி சொன்னார் என்றே
     இயம்பிடக் கேளாய் நெஞ்சே


ஒவ்வொன்றின் உள்ளி ருந்தும்
     ஒளிதரும் அல்லாஹ் வைநான்
எவ்வாறு மறப்பேன் ? என்ற
     ஏற்றமும் என்னே நெஞ்சே


கைம்மாறு கருதா தெம்பால்
     கணக்கற்ற துணைபு ரிந்த
எம்மானை மறப்ப தாமோ ?
     என்றுரைத் தாரே நெஞ்சே


அறிந்திடும் அளவுக் கேற்ப
     அறிவொளி யாக நிற்கும்
இறையோனை நினத்தே இன்பம்
     அடைகின்றேன் என்றார் நெஞ்சே


இறைநன்றி மறந்து வாழ்தல்
     இம்மியும் கூடா தென்றே
நிறைவுடன் கூறி நின்ற
     நெகிழ்ச்சியும் என்னே நெஞ்சே


மறந்திடா நினைவால் வல்லான்
     மாண்பினைப் போற்றிக் கொண்ட
சிறந்ததம் வேட்கை தன்னின்
     சீர்மைசொல் வதுவோ நெஞ்சே


வேண்டிய நலங்கள் எல்லாம்
     விரும்பிடும் முன்அ ளிக்கும்
ஆண்டவன் அருளே வேண்டி
     அண்ணல்நின் றாரே நெஞ்சே


நேரிய விழைவு தன்னை
     நிர்மல இறைய வன்பால்
ஆராத நிலையில் கொண்ட
     அற்புதம் பெரிதே நெஞ்சே