பக்கம் எண் :

41

NABIGAL
நெஞ்சில் நிறைந்த நபிமணி
நபியவர்களின் வரலாற்றுப் பகுதி

இறையரசு நிறுவிய இணையிலாத் தலைவர்

நிறைவுபெற்ற சாமுத்ரிகா லட்சணம்


கொண்டநல் அன்பி னாலே
     குழைந்துமே இறைவன் தன்னைக்
கண்டநம் நாய கத்தின்
     கண்களே கண்கள் நெஞ்சே


ஆவலாய் இறைவ னின்பால்
     அருமுரை செய்த அண்ணல்
நாவேநா என்றே இங்கு
     நவின்றிடு வாயென் நெஞ்சே


புவியினைப் படைத்த ளித்தோன்
     பொன்னுரை கேட்ட அண்ணல்
செவிகளே செவிகள் என்று
     செப்பிடு வாய்என் நெஞ்சே

 

சிரத்துடன் சேர்ந்து தாழ்ந்து
     சிறப்பெலாம் கண்ட அண்ணல்
கரங்களே கரங்கள் என்று
     கழன்றிடு வாயென் நெஞ்சே

மேலோன்மெய்ப் பாதை நோக்கி
     மேன்மையாய் நடந்த அண்ணல்
காலேகால் என்று சொல்லிக்
     களிப்புறு வாயென் நெஞ்சே


படைத்தவன் உலகம் சென்ற
     பாங்குடை நமது அண்ணல்
உடலதே உடலாம் என்றே
     உரைத்திடு வாயென் நெஞ்சே


நெஞ்சினை அவனுக் கீந்து
     நிறைவினைக் கண்ட அண்ணல்
நெஞ்சமே நெஞ்ச மென்று
     நீயுணர்ந் திடுவாய் நெஞ்சே

    
இறையவன் அன்புக் காக
     இதயத்தை அர்ப்ப ணித்த
அறையொணா நாய கத்தின்
     அறிவதே அறிவாம் நெஞ்சே


சாத்மீகத் தோடு வேண்டி
     சாந்தியைப் பெற்ற அண்ணல்
ஆத்மாவே ஆத்மா வென்றும்
     அறைந்திடு வாயென் நெஞ்சே


படைப்பிற் சிறந்த பரிபூரண நாயகம்

அறங்காத்த நிலயில் கொண்ட
     ஆன்மாவின் நிறைவில் அண்ணல்
திறங்காணும் நிலையில் நெஞ்சில்
     திகைப்பதே தோன்றும் நெஞ்சே


மோனத்தின் முடியில் நின்று
     முழுமையாம் உணர்வில் ஒன்றி
ஞானத்தின் முடியைக் கண்ட
     நற்றிறன் என்னே நெஞ்சே

காட்சிகள் கடந்து நின்று
     காரண மூலங் கண்டே
ஆட்சிக்கு முதல்வன் மார்க்கம்
     அளித்ததும் என்னே நெஞ்சே


அவனருள் பெரிதே என்றே
     அவனியோர் எண்ணும் வண்ணம்
அவனரு ளாலே செய்த
     அதிசயம் பெரிதே நெஞ்சே


அடங்கிய மனமும் வாக்கும்
     அடங்கிய வாழ்வும் கண்ட
திடம்படு வெற்றி அந்தத்
     தியானமே ! சொல்வாய் நெஞ்சே


பணிந்திடும் பண்பு தன்னை
     பகலிர வெல்லாம் கொண்டே
அணிந்தவர் வெற்றி தன்னை
     அவனிகண் டதுவே நெஞ்சே

உலையினில் மெழுகாய் நெஞ்சம்
     உருகிமெய்ப் பொருளைக் கண்ட
நிலைதனை எண்ணி எண்ணி
     நீயுயர்ந் திடுவாய் நெஞ்சே


முப்போதும் மட்டு மன்றி
     முழுப்போதும் அவனை எண்ணி
செப்பரும் வெற்றி கொண்டார்
     சீர்மைபா டிடுவாய் நெஞ்சே


தொழுதவன் அன்பைக் காக்கும்
     தூய்மைசேர் ஒளியை இங்கு
முழுமையாய்க் கண்ட அண்ணல்
     முழுத்தவம் என்னே நெஞ்சே


தெளிவினில் ஒளியும் அந்தத்
     தேசினில் களியும் காட்டி
வெளியெலாம் வாழ்வைக் கண்ட
     விந்தையும் என்னே நெஞ்சே

 

புகலுவார் மாற்ற மெல்லாம்
     புறம்போகு வண்ணம் செய்தே
அகலுல கத்தை வென்ற
     ஆற்றலும் சிறிதோ? நெஞ்சே


வேரிட்ட இறைவன் மாண்பில்
     விதவிதக் காட்சி கண்டு
போரிட்ட மக்கள் உள்ளப்
     புண்ணாற்றி னாரே நெஞ்சே


தானென்ற உணர்வ ழித்துத்
     தரணிக்குத் தம்மைத் தந்தார்;
மோனத்தால் மூலங் கண்டார்
     முழுமையும் என்னே நெஞ்சே


உயிருடன் உணர்வும் ஒன்ற
     ஒருவனின் அருளில் மூழ்கி
செயிரிலாக் காட்சி கண்ட
     சீர்மையைப் பாராய் நெஞ்சே

அகஒளி பெருக்கத் தாலே
     அதிசயம் என்று சொல்ல
முகத்தொளி கூட்டி நின்ற
     முழுமையை உரைப்ப தாமோ !


ஒருவருக் கிணையில் லாத
     ஒப்பிலான் நினைவில் ஆழ்ந்தே
ஒருவரும் அடையா வெற்றி
     உற்றதும் பெரிதே நெஞ்சே