பக்கம் எண் :


தடுத்தாட்கொண்ட புராணம் 171

Periya Puranam
“வெம்பிறவி வேலைதனில் வீழ்பவர்க ளெல்லாம்
நம்புசிவ நாமமெனும் நற்புணை பிடித்தால்
எம்பர னருட்கரை யேறுதுறை யாமால்
அம்புவி மொழிந்துள பெருந்துறை யதன்பேர்“

எனத் திருவாதவூரர் புராணம் போற்றியிருத்தலும் காண்க.

அஞ்செழுத்து - காரணம், சூக்குமம், தூலம் என மூன்றாகவும், இன்னும்
பல வேறு வகையாகவும் சொல்லப்பெறும். இதன் இயல்புகளைத் திருவாசகம்,
திருமூலர் திருமந்திரம், மூவர் முதலிகளது தேவாரப் பஞ்சாக்கரப் பதிகங்கள்
முதலிய தமிழ் மறைகளும், சைவ சித்தாந்த சாத்திரங்கள் முதலிய அருள்
நூல்களும் எடுத்துப் பேசுவனவாம். இவற்றின் விரிவுகளை நல்லாசிரியரை
அடுத்து முறையாய்த் தெரிந்துகொள்க.

     நடேசப்பெருமானின் அருள் நடனம் திருவைந்தெழுத்தின்
அருள்நிலையே அமைந்தது என்ப. பஞ்சாக்கரத் திருப்பதிகத்தாலே சம்பந்த
சுவாமிகள் திருநல்லூர்ப் பெருமணத்திலே, அதைக் கேட்ட ஆன்மாக்கள்
அனைவரையும் பிறவியில் வாராமற் செய்து முத்தியிற் செலுத்தி யருளினர்.
பஞ்சாக்கரத் திருப்பதிகத்தாலே திருநாவுக்கரசு சுவாமிகள் பாசக்கயிறு
அறுபட்டுக் கல்லே தெப்பமாகக் கொண்டு கடலினின்றும்
கரைசேர்ந்தருளினார். இவையும் மற்ற சரிதங்களும் இங்குப் புரந்த என்ற
இடத்து நினைவு கூர்தற்பாலன.

“காத லாகிக் கசிந்துகண் ணீர் மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது“
- திருஞா - தேவாரம்

“வருபவக் கடலில்வீழ் மாக்கள் ஏறிட
அருளும்மெய் அஞ்செழுத்து.........“

என்று ஆசிரியர் எடுத்துக் காட்டித் திளைக்கும் தன்மையுங் காண்க.

     ஓசை - தனித்தனி ஒவ்வொருவரும் எண்ணிச் சொல்லும்போது ஒலி
உருவமாய் நின்ற அந்த மகாமந்திரம் பலர் சொல்லும்போது விரவி ஓசைத்
தன்மையில் வரும். ஆதலின் ஓசை என்றார். பாற்கடலின் ஓசை அதனுடைய
அலைகளால் ஆயிற்று.

     ஆயிரம் - அநேகம் - எண்ணிறந்த - என்பது பொருளாம். அடியவர்
ஒவ்வொருவரும் நீற்றொளியும், தூய்மையும், ஓசையும் உடைமையால்
ஒவ்வொரு பாற்கடல் போன்றவராவர். ஆதலின் அனேகம் அடியார்கள்
உள்ள இக்காரணம் பற்றி அநேகம் பாற்கடல்கள் போன்றிருந்தனர் என்று
குறித்தார். பாற்கடலில் பள்ளி கொள்ளும் விட்டுணுவினது உள்ளத்தில்
வீற்றிருப்பவராதலாலும் அம் முறையே பாற்கடலிற்றங்குபவராதலின்,
பாற்கடல்கள்போல் விளங்கா நின்றவர்களாகிய அடியவருள்ளங்களில்
தங்குபவர் இறைவன் என்பதும் குறிப்பாம். 3

139. அகில காரணர் தாள்பணி வார்கடாம்  
  அகில லோகமு மாளற் குரியரென்
றகில லோகத்து ளார்க ளடைதலின்
அகில லோகமும் போல்வ ததனிடை.
4

     (இ-ள்.) அகில காரணர்...........என்று - எல்லா உலகங்களுக்கும்
கர்த்தாவாயுள்ள சிவபெருமானது திருவடிகளையே பற்றாகப் பணிபவராய்
இங்கு எழுந்தருளியிருக்கும் அடியார்களே எல்லா வுலகங்களையும் ஆட்சி
செய்தற்கு உரியார் என்ற காரணத்தால்; அகில லோகத்து........அதன் இடை -
எல்லா உலகத்துள்ளார்களும் அவர்களது ஆட்சிக்குள் ளமைந்து வணங்க
இங்கே வந்து அடைகின்றார்கள். ஆதலின் அத்தேவாசிரியனின் இடமானது
எல்லா வுலகங்களையும் ஒன்று சேர்த்தது போன்றுளது.