பக்கம் எண் :


தடுத்தாட்கொண்ட புராணம் 179

Periya Puranam
     முன்னர்ச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கைலாயத்தில் கும்பிட்டுக்கொண்டு
வாழ்ந்த நிலையைவிட இறைவன் அருள் நடனத்தைக் கும்பிடப்பெற்றதால்
இப்பிறவியையே சிறந்ததாகக் கருதினார் என்ற பொருள் இங்கு உணர்ந்து
அனுபவிக்கத் தக்கது. இவ்வாறன்றிக் கூடுமன்பினில் கும்பிடுதல் என்பதனுக்கு
எல்லா உயிர்களும் இறைவனைக்கூடி இன்பம் அடைக என்னும் கருத்தால்
கும்பிடுதல் என்றுரைப்பினும் ஆம். “வையகமுந் துயர் தீர்கவே“ என்பன
வாதி திருவாக்குக்களின் கருத்தை நோக்குக. 8

144. ஆரங் கண்டிகை யாடையுங் கந்தையே  
  பார மீசன் பணியல தொன்றிலார்
ஈர வன்பினர் யாதுங் குறைவிலார்
வீர மென்னால் விளம்புந் தகையதோ.
9

     (இ-ள்.) ஆரம்...........கந்தையே - (மேலும் இங்குள்ள அடியார்கள்)
ஆரமாகப் பூண்பது உருத்திராக்க வடமேயாம். ஆடையாக உடுப்பது கந்தை
உடையேயாம்; பாரம்.........ஒன்றிலார் - அவர் தாம் செய்யும் கடமையாகத்
தாங்கி நிற்பது இறைபணியையே யன்றி வேறொன்மில்லார்; ஈர அன்பினர்
- (அப்பணியிலே தங்களைச் செலுத்தவல்ல) தண்ணிய அன்பினை
மிகவுடையார்; யாதும் குறைவிலார் - ஒன்றினாலுங் குறைவு இல்லாதவர்;
வீரம்....தகையதோ - இவர்களது வீரம் என்னால் அளவிட்டுச் சொல்லுந்
தகைமையதோ? (அன்று என்றபடி).

     (வி-ரை.) ஆரம் - மாலை. உடலுக்கு அணி செய்வது.

     கந்தை
- கிழிந்த பழைய துணி என்றும், பல துணிகளைச் சேர்த்து
இழையோட்டி ஒன்றாகத் தைத்த துணி என்றும் கூறுவர். இங்குக்
கூடியிருக்கும் அடியார்கள் உருத்திராக்க மாலைகளைத் தவிர
வேறொன்றையும் தமது திருமேனிக்கு அணிகலமாக வேண்டாதவர்கள்.
உடையின்றியிருக்க மரபில்லையாதலின் கிழிந்த தைத்த ஒரு கந்தையைத்
தவிர வேறொரு உடையையும் விரும்பாதவர்கள். இந்த ஒருகந்தையைக்கூட
மிகை அல்லது சுமை அல்லது பற்று என்று உண்மை அடியார்களாகிய
இவர்கள் கருதுவார்கள் என்பது “கந்தை மிகையாங் கருத்து“ எனப் பின்னர்
அப்பர் சுவாமிகளின் நிலை கூறுதல் காண்க. “கருத்துணி பலதொடுத்திசைத்த,
ஒருதுணி யல்லது பிறிதொன்று கிடையாதாக“ என்று இந்நிலையை
வேண்டுகின்றனர் குமரகுருபர சுவாமிகள்.

“..............துன்னற் கோவணம் பரிக்கும் ஆடை
சீரெலாம் சிறந்த சாந்தம் தெய்வநீறு அணிபூண் கண்டி“

என்று மாணிக்கவாசக சுவாமிகளின் நிலையைப்பற்றித் திருவிளையாடற்
புராணங் கூறும். இவற்றுள் முந்தியதாகிய தெய்வநீற்றை முந்தைய முறையிலே
வைத்து முன்னர் 6-வது பாட்டுக்களில் “நீற்றொளியால்“ “பூசுநீறுபோல்“
என்று பேசினமையால், இங்குக் கூறிற்றிலர். மணி என முன்னாப்
பொதுவகையாகக் கூறினாராயினும் இங்குச் சிறப்பு வகையாகக் கண்டிகையும்
கந்தையும் கூறப்பெற்றன.

     பாரம் - தம்மாற் செய்தே தீரவேண்டுவதாகிய கடமைப்பாடு;
உரிமையாகக் கொள்வது. “ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்“ என்னும்
திருமூலர் திரு மந்திரத்தின் உண்மைப்பொருளை அறியாதார் ஆடை
கந்தையேயாயுள்ள ஞானிகளுக்கு நீறும் கண்டிகையும் இறைவன் பூசையும்
வேண்டுவதோ என்று ஐயப்படுவர். இறைவரது பணி அவர்க்கும்
கடமையாம்என்று அவரது இயல்பு கூறும் வகையினாலே இவர்களது ஐயத்தை
நீக்கியவாறு. “ஏகனாகி இறைபணி நிற்க“ என்பது சூத்திரம்.

     ஈசன் பணி - எல்லா உலகுக்கும் முதல்வனாகிய இறைவன் பணி.
இதற்கு - எல்லா உயிர்க்கும் தன்னைப் போலக் கருதிப் பணி புரிதல்;
எவ்வுயிர்க்கும் தீங்கு