பக்கம் எண் :


தடுத்தாட்கொண்ட புராணம் 183

Periya Puranam
பெருமான் ஆணையிட்டபடியே ஆரூருக்கு வந்து என்பதுமொன்று. (3)
“இவர்க்கு (இவ்வடியவர்க்கு) நான் அடியேனாகப் பண்ணுநாள் எந்நாள்“
என்று மனத்தால் துதித்துத் திருக்கோயிலுக்குட் சென்ற சுந்தரமூர்த்தி
சுவாமிகள் அங்கே இறைவர் தந்த எதிர்காட்சியும் திருவருளும் பெற்றவராய்
அவர் அருளின்வழி மீண்டும் தேவாசிரியனுக்கு எதிரே வந்து (பாடிய) என்று
கொள்ளலும் ஒன்று.

     இவற்றுள் கயிலையிலிருந்து வந்த வரலாறு திருமலைச் சிறப்பிலும்,
தில்லையிலிருந்து வந்ததும் பின்னர்க் கோயிலிலிருந்து வந்ததுமாகிய
இரண்டும் பின்னர்த் தடுத்தாட்கொண்ட புராணத்தும் கூறுதலின் இங்கு இஃது
அவையிரண்டிற்கும் இடையில் வைத்து வந்து பாடிய என்று கூறியருளினார்
ஆகும்.

     அந்தமில் புகழ் ஆலால சுந்தரன்
- ஆலால சுந்தரர் என்ற
பெயரைப்பற்றியும், அவரது புகழின் பெருமையைப் பற்றியும் திருமலைச்
சிறப்பு 16, 17, 19, 21, 22 முதலிய திருப்பாட்டுக்களிலும் அவற்றின் உரையிலும்
காண்க. இப்பெயர் அவருக்குக் கயிலாயத்தில் வழங்கிய பெயர். இங்கு
அவருக்குப் பெரும்பாலும் வழங்கும்பெயர் சுந்தரர் என்பது.
ஆலாலசுந்தரராகிக் கயிலையில் இருந்த அவர் இங்குவந்து அவதரித்துச்
சுந்தரமூர்த்திகள் என்ற நிலையில் பாடி யருளினார்; ஆதலின் ஆலால
சுந்தரன் சுந்தரத் திருத் தொண்டத்தொகை பாடியருளிய என்றார். சுந்தரத்
திருத்தொண்டத்தொகை என்பதற்கு அழகிய திருத்தொண்டத் தொகை
எனவும் ஆம். இது பின் வரும் தடுத்தாட்கொண்ட புராணப் பகுதியின்
உள்ளுறையைச் சுருக்கி எடுத்துக் காட்டியவாறு. 11


     சுருக்கம் :- திருவாரூர் நகரத்துக்கு அகமலர்போல்வது பூங்கோயில்.
அப்பூங்கோயிலின் திருமதில் வாயிலையடுத்துக் கோவிலுக்குள் முதலிற்
காணப்பெறுவது தேவாசிரிய மண்டபமாம். இதன் வாயிலில் எல்லாத்
தேவர்களும் கூடிக்காத்திருப்பர். உள்ளே மாதவர்களாகிய அடியார்
திருக்கூட்டம் எப்பொழுதும் நிறைந்து எழுந்தருளியிருக்கும். அவ்வடியார்கள்
பலப்பலதிறத்தில் உள்ளவர்கள். அவர்கள் விபூதி உருத்திராக்கம் அணிந்து
திருவைத்தெழுத்தை ஓதுபவர்கள்; அன்பின் மிகுந்தவர்கள்; கைத்
திருத்தொண்டு செய்பவர்கள்; எப்பொழுதும் உள்ளம் கலங்காதவர்கள்;
விருப்பு வெறுப்பு இல்லாதவர்கள்; கண்டிகையும் கந்தையும் அணிந்து ஒரு
குறைவுமில்லாதவர்களாய் இறைவன் பணியே பூண்ட மகாவீரர்கள்;
முத்தியிலும் ஆசைப்படாத மனவன்மையுடையவர்கள்; சிவபெருமானை
எப்பொழுதும் மறவாதசிந்தையுடன் அவர் திருத்தொண்டிலே உறைத்து
நிற்கின்றவர்கள்; அளவிடற்கரிய பெருமையும் குணமும் உள்ளவர்கள்; தாம்
வேண்டியபடி அரசக் கோலம் முதலிய எவ்வேடமும் தாங்கி நிற்பவர்கள்.
இவர்கள் யாவரும் சிவபெருமானுடைய உண்மைத் தனித்தொண்டர்களாம்.
இத்திருக் கூட்டத்தையே ஆலால சுந்தரர் சுந்தரராகி வந்து பாடித்
துதித்தருளினார். அத்திருத் தொண்டர்களது வரலாறுகளைப் பேசுவதற்குமுன்
ஆலால சுந்தரர் கயிலையிலிருந்து வந்து திருத்தொண்டத்தொகை பாடிய
வரையில் இனிச் சொல்லுகின்றோம்.

     குறிப்பு :- இப்பகுதி இப்புராணத்துள்ள அடியார்களது
பெருமைகளைப் பொதுவகையால் வடித்து எடுத்துக் காட்டிச் சிறப்பிப்பதாம்.
இச்சிறப்புக்களைப் பிரித்து அவற்றுள் பின்வரும் ஒவ்வொரு அடியார்களது
சரிதத்திலும் அவ்வவர் சரிதத்திற் கேற்றவைகளைப் பொருத்திக்
கண்டுகொள்ளத் தக்கது. இதிற் கூறியவை அடியார்களது பொது
இலக்கணமும் பொது இயல்புகளும் ஆம். பின்னர் அவ்வச் சரிதங்களிற்
கூறுவன சிறப்பியல்பும் சிறப்பிலக்கணமுமாம். இப்பகுதி அடியார்களுடைய
நிருவிகற்பக்காட்சியாய்ச் சமூக தரிசனமும், பின்னர் அவ்வச் சரிதங்களிற்
காண்பது அவ்வவர்களது சவிகற்பக் காட்சியாகிய தனித் தரிசனமும் ஆம்.