பக்கம் எண் :


2 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     முதற்காண்டம் : நூலின் பெரும் பிரிவு காண்டம் எனப்படும்.
ஆசிரியர் இந்நூலை இரண்டு பெரும்பிரிவுகளாக வகுத்துள்ளார். அவற்றுள்
இது முதலாவது.

     இப்புராணத்துள்ள 13 சருக்கங்களுள் திருமலைச்சருக்க முதல்
திருநின்ற சருக்கம்வரை 5 சருக்கங்கள் முதற்காண்ட மெனவும்,
வம்பறாவரிவண்டுச் சருக்க முதல் வெள்ளானைச் சருக்கம்வரை 8
சருக்கங்கள் இரண்டாங் காண்டமெனவும் வகுக்கப்பட்டன; பிரளயாகலருக்குப்
போல் இறைவர் முன்னின்றுப தேசித்தருளியமையாலும், இறைவரளித்த
முத்துச்சிவிகையின்மேல் உலகெலாம் உய்ய ஏறிப் பரமாசாரியராய் உலகுக்
குபதேசித்தெழுந்தருளியமையாலும், “உலகெலாம்” என்றிறைவர் எடுத்துக்
கொடுத்தருளிய முதலை இப்புராணத்தினுள் முத லிடை கடை என்னும்
மூன்றிடங்களில் வைத்துப் போற்றும் வகையினுள் நடுவின்கண் வைத்துப்
பதிக்கும் இடம் அதுவாதலானும், வேதநெறி சைவநெறி தழைக்க வந்தாரது
புராணமாதலாலும், பிறவாற்றானும், ஆளுடைய பிள்ளையார் புராணந்
தொடங்கி இரண்டாங் காண்டமென வகுக்கப்பட்டதாமென்க.

     பாயிரம் : இது நூலின் முகப்பில் உரைக்கப்படுவது. நூற்பெயர் - வழி
- எல்லை - நுதலிய பொருள் முதலியவற்றைக் கூறும் பகுதி பாயிரம்
எனப் பெயர் பெறும். “ஆயிர முகத்தா னகன்ற தாயினும் - பாயிர மில்லது
பனுவ லன்றே”என்பவாகலின் இப்புராணத்திற்கு முதலில் ஆசிரியர் பாயிர
முரைத்து வைத்தார்.

     1. (இதன் பொருள்) உலகு எலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் -
உயிர்கள் எல்லாவற்றாலும் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவன்; நிலவு
உலாவிய நீர்மலிவேணியன் - (அங்ஙனம் அரியவனாயினும் தன்னை யாவரும்
எளிதில் கண்டு தரிசித்து உய்ய வேண்டும் என்னும் கருணையினால்)மூன்றாம்
பிறைச்சந்திரன் உலாவுதற்கு இடமாய்க் கங்கை நீர்நிறைந்த சடையை
உடையவனாயும்; அலகு இல்சோதியன் - அளவில்லாத ஒளியுரு
வுடையனாயும்; அம்பலத்து ஆடுவான் - திருத்தில்லையில்
திருச்சிற்றம்பலத்தினிடத்தே ஆனந்தத் திருக்கூத்து ஆடுகின்றவனாயும்
உள்ள இறைவனுடைய; மலர்சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம் - எங்கும்
நீக்கமின்றி மலர்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம்
செய்வோம்.

     1. (விளக்கவுரை) உலகு - என்றது உயிர்களைக் குறித்து நின்றது;
“காலமுலகம்” என்றதற்குச் (தொல்) சேனாவரையர் உரை பார்க்க. மூவகை
ஆருயிர் வருக்கம்.

     உணர்ந்து ஓதற்கு அரியவன - உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவன்.
உணர்தல் மனத்தின் தொழில்; ஓதுதல் - வாக்கின் தொழில். எனவே
பசுஞான பாசஞானங்களின் விருத்திக்கு அப்பாற்பட்டவன் என்பதாம்.
வாக்கெனப்படும் நாதமுடிவான பாசஞானத்தை வாக்கென்றும், அவற்றின்
வேறாய பசுஞானத்தை மனமென்றும் கூறுதல் உபசாரவழக்கு. “மாற்ற
மனங்கழிய நிறை மறையோன்” (திருவாசகம்) என்பதாதி திருவாக்குக்கள்
காண்க. இங்குக் குறித்தது இறைவனது சொரூப இலக்கணம். இது ஞானிகள்
வழிபடுவது.
“அரியானை.........யார்க்கும் தெரியாத தத்துவனை.....”என்று
இவரை அப்பர்சுவாமிகள் துதித்த கருத்தும் காண்க.

     நிலவு உலாவிய நீர்மலி வேணியன் - இஃது இறைவனது தடத்த
இலக்கணங் குறித்தது. இஃது அவனுடைய அருவுருவத் திருமேனி. அருவத்
திருமேனியிலிருந்து உருவத் திருமேனி தாங்கி வருவது உயிர்களுக்கு
அருள்புரியும் பொருட்டு. நிலவும் நீரும் சடையிற் றாங்கிய வரலாறுகள்
அவனது அருளைக் குறிப்பன. இவ்வரலாறுகளின் விரிவைக் கந்தபுராணம்
முதலியவற்றிற் காண்க. உலவுந் தன்மையுடைத்தாயிருந்தும் சாபத்தால் வந்த
குறைநோய் காரணமாக உலவுதலை யிழந்த நிலாவை உலவும்படி வைத்தான்;
ஓடுந்தன்மையுடைய நீரினை ஓடாமல் தங்கவைத்தான்; என்று
இச் செயல்களின் பெருமை குறித்தவாறு.