பக்கம் எண் :


பாயிரம் 1

Periya Puranam

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

பெரியபுராணம் என்னும்

திருத்தொண்டர் புராணம்


முதற்காண்டம்
பாயிரம்

நடராசர் துதி

1. உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
 
  நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
1

                        இது மங்கல வாழ்த்து

     திருத்தொண்டர் புராணம் : இறைவனுக்குத் தொண்டு
செய்தலையுடையஅடியவர்களது வரலாறும் பண்பும் விரித்துக்கூறும் பெருநூல்
என்பதுபொருள். இது இந்நூலுக்கு ஆசிரியர் தந்த பெயர்; பாயிரம் பத்தாவது
பாட்டினுட் காண்க. இதனைப் பெரியபுராணம் எனக் கூறுவது உலகிற் பரந்த
வழக்கப் பெயராம். செய்தற்கரிய செய்கை செய்த பெரியார் சரிதங் கூறும்
நூலாதலின் இவ்வாறு வழங்கலாயிற்று.


     இஃது ஒரு பெருங்காப்பியம். அங்ஙனமன்றிப் பல சரிதங்கள் சேர்ந்த
ஒரு கோவை எனச் சிலர் எண்ணுவர். அது சரியன்று. ஒப்புயர்வற்ற
சுந்தரமூர்த்திகளைத் தலைவராகவும், பரவையார் சங்கிலியார் என்ற
இருவரையும் தலைவியராகவும் கொண்டு அவர்கள் கயிலையிலிருந்து
உலகுய்யவும் சைவநெறியோங்கவும், பூவுலகத்தில் அவதரித்து, மணந்து,
உலகத்தார்க்கு அறம்பொருள் இன்பம் வீடு என்ற நான்கு உறுதிப்
பொருள்களையும் உணர்த்தி, உய்வித்து மீண்டும் திருக்கயிலை சேர்ந்தார்கள்
என்பது காப்பியத்தின் உட்பொருள். இதில் தலைவன் தலைவியர் - கூட்டம்
- பிரிவு - புலவி - முதலிய அகப் பொருளும், போர் முதலிய
புறப் பொருளும், மலை, கடல், நாடு, நகர், பருவம், சூரியன் உதயம்,
அத்தமனம் முதலியவற்றின் சிறப்பும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும்
பகுப்புக்களும், மந்திரம், தூது இகல் வென்றி முதலியனவும் பெருங்காப்பிய
உறுப்புக்கள் முற்றும் சிறப்பாய் அறியக் கிடக்கும். இது பெருங்காப்பியமாகும்
விவரங்களை விரிவாக எனது சேக்கிழார் எனும் நூலிற் காண்க.
தண்டியலங்கார முதலியனவும் பார்க்க.