பக்கம் எண் :


48 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

விராட்புருடனுக்கு இருதயத்தானமாகிய பெருமை - [“நீவிரிருவரும் கண்ட
மன்றம் இதயமாம்” என்ற திருவிளையாடற் புராணம் காண்க.] சற்புத்திரப்
பேற்றிற்காகத் தவஞ் செய்த அநசூயை யம்மையாரது அஞ்சலித்த கையிலே
ஆதிசேடன் குமாரராக வந்து விழுந்த காரணத்தால் (பத் - விழுதல்; அஞ்சலி
- கூப்பியகை) பதஞ்சலி எனும் பேர்பெற்ற முனிவர் பூசித்த பெருமை சேர்
என்ற எதிர்காலக் குறிப்பினால் இப்புராணம் பாடிய சேக்கிழார் பெருமானுக்கு
அடியெடுத்துக் கொடுத்தும், உண்ணின் றுணர்த்தியும் உபகரிக்கும் பெருமை
- காண முத்தி கொடுக்கும் பெருமை - முதலிய பல பெருமைகளும்
உள்ளிட்டுரைக்க நின்றது.

     ஒருமையாளர் - “செம்மை வெண்ணீற் றொருமையினார்” (சண்டீசர்
புரா - 2) என்ற இடத்திற்போலச் சிவபெருமான் ஒருவரிடத்திலே யன்றி
வேறொன்றிலும் சிந்தை செல்லாதவர் எனலுமாம். “ஒருமையால் உலகை
வெல்வார்” (தடுத் - புரா - 196) என்பதும் காண்க. தாம் வேறு, இறைவன்
வேறு, என்றில்லாமல் பெருமானும் தாமும் அத்துவிதக் கலப்பினாலே ஒரு
தன்மைப்பட்ட மனத்தையுடையவர்களே ஒருமையாளர் எனப்பெறுவர். ஒருமை
- ஒன்றுபட்ட தன்மை. “தம்பிரானைத் தன்னுள்ளந் தழீஇயவன்” என்றதும்
காண்க. இதனைப் “பொது நீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்,
பெருந்துணையை” என்ற திருத்தாண்டகத்தும் காண்க.

     ஒருமையாளர் வைப்பாம் - அருச்சித்த புலிமுனிவர்க்கே யன்றி ஏனை
முனிவர்களுக்கும் தில்லைவாழந்தணர் முதலியோர்க்கும் நித்தமாகிய
சேமநிதி. வைப்பாம் - முக்காலத்தும் நிகழ்வது என்க.

     ஒங்கும் - எக்காலத்தும் வளர்ந்து விளங்கும்.

     பெருமைசூழ் - என்பதும் பாடம்.     31

     42. (வி-ரை.) மெய்த்தவக் கொடி - உண்மைத் தவத்திலே முளைத்த
கொடி போல்வாராகிய அம்மையார்.

     விருப்புடன் - இடைநிலைத் தீவகமாய், விருப்புடன் காண என்றும்,
விருப்புடன் ஆடும் என்றும், இரண்டுடனும் கூட்டியுரைக்க. இருவரும்
வேண்டுதல் வேண்டாமை யிலாதவராதலின் இங்கே குறித்த விருப்பு -
உயிர்கள் உய்யவேண்டும் என்று வைத்த கருணையேயாம், தம்
பொரு ட்டன்றிப் பிறர் பொருட்டெழுந்த விருப்பமாம். இதனையே
நமையாளுடை” என்று குறித்தார்.

     ஆளுடைய - கொடி - காண - அம்மை தவஞ்செய்தல், நடங்காணுதல்,
அதனால் உயிர்களை உய்ய ஆட்கொள்ளுதல் என்ற இந்நிலைகளின்
விளக்கம்பற்றி மெய்கண்ட ஞான நூல்களிலும் சிவாகமங்களிலும்
கண்டுகொள்க.

     காண - இறைவன் அந்த விருப்புடன் திருக்கூத்தாடவும் அதனைத்
தங்கள் ஊனக் கண்ணாற் காண்பதற்கு ஆன்மாக்கள் வலிமையில்லார்
ஆதலின், இறைவியார் தாம் கண்டு அக்காட்சியின் பயனை
ஆன்மாக்களாகிய தமது மக்களுக்கு ஊட்டுவர். “பாலுண் குழவி பசுங்குடர்
பொறாதென, நோயுண் மருந்து தாயுண் டாங்கு” என்று குமரகுருபர
சுவாமிகள் விளங்க எடுத்துக் காட்டியருளினார்.

     நீடிய அம்பலம் - அறிவு மயமாய் என்று முள்ள சித்து ஆகிய
அம்பலம். இதுவே சிற்றம்பலம் என்பதாம்

     நித்தன் ஆடும் - அம்பலம் என்றும் நீடுவது, அவனும் நித்தன் -
என்றும் உள்ளவன், அவன் ஆட்டமும் முக்காலத்தும் நிகழ்வது, ஆதலின்
செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றாற் கூறினார்.

     எத்திசை - வினா, வேறு இல்லை என இன்மை குறித்தது.