பக்கம் எண் :


544 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     7. இவ்வுலக தருமங்களிலே பிறன்மனை நயத்தல் ஒருவனுக்குப்
பெரும்பழி. ஒருவன் தன் மனைவியைப் பிறருக்கீதல் அவனுக்குப்
பெரும்பழி. ஒருவன் மனைவி வேறொருவனுடன் வாழ்தல் அவளுக்குப்
பெரும் பழி. இவை அவ்வக் குடும்பங்களையே யன்றிக் குலத்தினையும்
நாட்டினையும் பற்றும். இவ்வகைகளை ஒன்றுங் கருதாது பலவகையிலும்
பழியே பெருக்கி மானத்தைச் சுருக்கி மனம் போன வழியே பெரிதென
வாழும் இந்நாள் உலகம் இச்சரிதத்திற் சுற்றத்தாரும் நாட்டவரும் கொண்ட
கொள்கையும் செய்த செயலும் கண்டு திருந்தத்தக்கது.

     8. அறநூல் வழியே அவரவர் கொண்ட கொள்கைகள் கடைபோகக்
காத்தற்குரியன. சமயம்போலக் கொள்கைகளை மாற்றி வாழும் இந்நாள்
மாக்களின் வாழ்க்கை இதுகண்டு திருந்தத்தக்கது.

     9. உலக நீதிகளினும் உலக அறங்களினும் சிவதருமங்கள்
மேம்பட்டன. இல்வாழ்க்கை முதலிய உலக அறங்கள் அவை குறித்த
உலக அளவு வரையிலே கொள்ளத்தக்கன. உலக வாழ்வில்
தாமரையிலையிலே தண்ணீர்போலப் பற்றுவையாது கொண்டு வாழ்தல்
உயிர்களுக்கும் மேம்படும் வழி தரும். இச் சரிதத்தில் சுற்றத்தார் செயல்
உலக நிலையில் வாழ்க்கையின் குறிக்கோளைக் கற்பிக்கும். இவ்வுலக
வாழ்வின் உயர்ந்த குறிக்கோளை நாயனாற்பற் கண்டு உலகம்
கடைப்பிடிக்கத்தக்கது.

     10. “அகன் ஞாலத் தகத்துட்டோன்றி, வருந்துணையுஞ் சுற்றமும்
பற்றும் விட்டு வான்புலன்க ளகத்தடக்கி மடவாரோடும், பொருந்தணைமேல்
வரும்பயனைப் போக மாற்றிப் பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க்
கென்றும்,பெருந்துணை“ என்றபடி மனைவி, மக்கள், சுற்றம் முதலிய   
ஏனைச் சார்புகள் சிவச்சார்புகளின் முன்னே அறுத்தொழித்த இடத்தே
சிவன் வெளிப்பட்டு வழித்துணையாவன். “பற்றற்ற கண்ணே
பிறப்பறுக்கும்“, “தலைப்பட்டார் தீரத் துறந்தார், மயங்கி வலைப்பட்டார்
மற்றை யவர்“ - குறள்.

     11. நீறு - கண்டிகை - முதலிய சிவசாதனங்களிலே வயமாக்கப்
பெற்ற மனமுடையாரது செயல்கள் சாமானிய பசுபோத உலகநீதி கொண்டு
அளக்கப்படா.

     12. துன்பத்துக் கேதுவாகிய வெறுங் காமமாதி உலகானுபவங்களிலே
ஒன்றொன்றில் மயங்கியோர் அவ்வவற்றிற் சிக்குண்டு அவையே
பெரிதாகக்கொண்டு செய்யும் அடாத செயல்களும் படும்பாடும் பெரிதாம்.
அதனைவிட்டு அவ்வுயர் வாழ்வினிலே உலகில்வைத்த அந்த ஆர்வத்திற்
சிறிது செலுத்துவார்களாயின் உய்ந்து மேற்செல்வர். “தத்தையங் கனையார்
தங்கண்மேல் வைத்த தயாவை நூறாயிரங் கூறிட், டத்திலங் கொருகூ
றுன்கண்வைத் தவருக் கமருல களிக்குநின் பெருமை“ - திருவிசைப்பா.

     13. “பனிமலர்க் குழற்பாவை நல்லாரினும்,“ இனியனாய்த் தன்னடைந்
தார்க்கருள்புரிவன் சிவன். சிவனடியார்களது திருவேடத்திலே சிவனைக்
கண்டு வழிபடில் சிவனே அங்கு நின்று அருள்புரிவன்.

     14. இளமங்ககையர் தோளிற் பூசிய சாந்து முதலியன காமுகரை
வயமாக்குதல் போல அடியார்கள் மேல் நின்ற நீறு கண்டிகை முதலிய
சிவசாதனங்கள் அன்புடையார்களைத் தம்வயப்படுத்தி ஈடுபடச் செய்யும்.

     15. “உருப்பொ லாதவரிழிகுலத் தவர்நல் லொழுக்க மில்லவ
ரென்று மளவில், விருப்பி லாதவ ரெனினுமெய்ந் நீறு மிக்க சாதன
வேடமுங் கண்டாற், றரிப்பி லாதுசென் றெதிருற வணங்கித் தக்க
போனக மளித்தவர்க் கெளிதா, விருப்பர் தாமவ ரடியவர்க் கடியா
ரென்பர் யானென தெனுஞ்செருக் கறுப்பார்“ என்று திருவாதவூரடிகள்
புராணத்து உபதேசிக்கப் பெற்ற உண்மை இங்கு அதிதீவிரதர
பக்குவமுடைய நாயனார் சரிதத்தில் வைத்துக் கண்டு இதன் பெருமை
உலகம் உணர்ந்துய்யு நெறி கடைப்பிடித் தொழுகுவதாக. ஆறுமுக
நாவலரவர்கள் எழுதிய சூசனங் காண்க.

3. இயற்பகை நாயனார் புராணம் முற்றிற்று.