பக்கம் எண் :


இளையான்குடிமாற நாயனார் புராணம்551

Periya Puranam

     ஈரமென் மதுரப்பதம - ஈரம் - அன்பு - அன்பு கலந்த மெல்லிய
இனிய சொற்கள். “இன்சொலா லீர மளைஇப் படிறிலவாஞ், செம்பொருள்
கண்டார்வாய்ச் சொல்“ என்னும் குறள் இதற்கிலக்கணங் கூறிற்று.
அன்பொடு கலத்தல் - அன்பினை வெளிப்படுத்தல் என்றார் பரிமேலழகர்.

     பரிவெய்த - அன்பர்கள் தம்மிடத்துக் கருணை கூரும்படி. முன்உரை
செய்த பின் - முன் - அவர்கள் முன்பு. எதிர்கொண்டு கைகுவித்து
நிற்றலுக்குமுன் என்றலுமாம். வாக்கு இன்னுரை முன் சொல்லிக்கொண்டே
செல்ல, அதனுடன் எதிர் கொள்ளுதலும் கைகுவித்தலும் நிகழ்ந்தன.
ஆயினும் அன்பர்கள் கண்ணுக்கு அச்செயல்கள் முன்னர்த் தோன்றின;
மொழிகள் பின்னரே கேட்டன. காட்சிப் புலப்படுக்கும் ஒளியலைகள்
வேகத்தால் மிக்கனவும், செவிப்புலப்படுக்கும் ஓசையலைகள் வேகத்தால்
அவற்றினும் மிகக் குறைந்தனவுமா மென்பர் விஞ்ஞான நூலார். அற்றன்றிச்
செவிப் புலனாமோசை உண்டாய விடத்திலிருந்து கடல் அலைபோலப்
பரம்பரையின் வந்து செவிப்பொறிக்கு விடயமாம். கண்ணிந்திரியம் ஒளியாற்
சேய்மைக் கண்ணுஞ் சென்று தன் விடயத்தை விரைந்தறியும். ஆதலின்
அம்முறையே கண்ட செயலை முன்னர்க் கூறிக் கேட்ட சொல்லைப்
பின்னர்க் கூறினார்.

     மென்மதுரப்பதம் உரைசெய்தலாவது அவர் முன்னர்க்
கூசிமொழிதல் - அவரை உயர்த்தியும் தம்மைத் தாழ்த்தியும் கூறுதல்
முதலியன. “நாதனடியா...ரவர்முன்பு மிகச்சிறிய ராயடைந்தார், ஆதலினாற்
சிறுத்தொண்ட ரெனநிகழ்ந்தார்“ (சிறுத் - புரா - 15), “பூதிசா தனத்தவா
்முன் போற்றப் போதே னாயிடினும், நாதனடியார் கருணையினா லருளிச்
செய்வர் நானென்று“ (மேற்படி 45) முதலிய இலக்கியங் காண்க. 3

     443. (வி-ரை.) கொண்டுவந்து - அழைத்துக்கொண்டுவந்து. குலாவு
பாதம - மோட்ச சாதனமாகக் குலவுகின்ற; கொண்டாடப்பெறுகின்ற.
குலாப்பத்து - குலாத்தில்லை என்பன காண்க. விளங்குகின்ற என்றலுமாம்.

     பாதம் விளக்கி - இது பாத்தியம் எனப்பெறும். பாத்தியம் -
அர்க்கியம் - ஆசமனம் - அருச்சனை முதலியன வழிபாட்டின் அங்கங்கள்.
விரிவு ஆகமங்களுட்காண்க. சிவபூசைக்குரியவை அடியார் பூசையாகிய
மாகேசுவர பூசைக்குமாம். இவை சோடசோபசார மென்பர். அடியார்க்
கமுதளிக்கும் பூசையிற் பாதம் விளக்கும் நியதியும் அது காரணமாகப்
பெற்றபேறும் திருப்பெண்ணாகடத்துக் கலிக்கம்ப நாயனார் சரிதத்திற்
காண்க.

     மண்டு காதலின் - நூல்களில் விதித்தபடி இயற்றுவதென்றமட்டில்
அமைந்துவிடாது மனத்திலே மிக்கெழுந்த ஆசையினாலே.

     உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்திறத்தினில - நாலு
விதத்திலும் ஆறுசுவைத் திறத்திலும் இயன்ற உண்டி என்க. நாலு வித
உண்டி - உட்கொள்ளும் வகைக்குத் தக்கவாறு உண்டி நான்கு
வகையாகப் பிரிக்கப்படும். அவை - உண்பன, தின்பன, நக்குவன,
பருகுவன என்பவையாம். ஆறுசுவை - கைப்பு, புளிப்பு, இனிப்பு,
துவர்ப்பு, கார்ப்பு, உவர்ப்பு என்பவை. மருந்துநூல் முறைப்படி
உடற்கூற்றின் பற்பல தாதுக்களின் சத்துக்களுக்கும் பலவேறு வகைச்
சுவைகள் வேண்டப் பெறுவன என்பர்.

     ஒப்பிலா - ஒப்பற்ற - ஒப்பிலா நாயகர் எனவும், ஒப்பிலாத்
தொண்டர் எனவும் ஒப்பிலா இச்சை எனவும் கூட்டி உரைக்க நின்றது.

     நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய - நாயகருடைய
தொண்டர்கள் தமது இச்சையின்படி அமுதுசெய்ய தொண்டர்களது
இச்சையிலே நாயகர்நின்று அமுது செய்யும்படி என்றலுமாம். நாயகரும்
தொண்டரும் அமுதுசெய்ய என்று உம்மைத் தொகையாக்கி உரைத்தலுமாம்.
இச்சையின்படி அமுதுசெய்ய அளித்தலாவது - அவ்வவரும் வேண்டியன
வேண்டியவாறே பெற்றுண்ண அளித்தல்.