பக்கம் எண் :


574 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

நாள்தோறும் மெல்ல மறைந்து போகும்படி திருவுளங்கொண்டனர். இவ்வாறு
வளங்களெல்லாம் சுருங்கவும், இறையான்குடி மன்னராகிய மாறனார் தம்
மனஞ்சுருங்குதலின்றித், தமது பொருள்களை மாறியும் கடன்கள் கொண்டும்
முன்செய்து வந்த அடியார் பூசையாகிய ஒப்பற்ற திருப்பணியிலே முதிர்ந்த
கொள்கையராய்ச் செயல்புரிந்து வந்தனர்.

     இந்நாளி லொருநாள் உலகம் உய்யும் பொருட்டு ஒரு நற்றவத்தவர்
வேடமே கொண்டு இறைவன் இவர் மனைக்கு எழுந்தருளி வந்தனர்.
அக்காலம், மழைக்காலத்து ஒருநாளில் நள்ளிரவாய், ஊணுமுறக்கமுமின்றி,
மழையால் நனைந்து வேறு ஆதரவுமின்றி, மனைவாய்தல்
அடைக்கப்பட்டிருந்த காலமாயிருந்தது. அக்காலத்தேயும் நாயனார் கதவைத்
திறந்து வந்த விருந்தை எதிர்கொண்டு அழைத்துக் திருமேனியை ஈரம்
போக்கி, ஆசனம் தந்து, அமரச்செய்தபின் அவர்க்கு உணவூட்ட
எண்ணினார்.

     “முன்பு நமக்கு உணவில்லை! ஆயினும் இவ்வடியவரை யமுதூட்டல்
எங்ஙனே?“ என மனைவியாரை வினவினார் நாயனார். அவர்
“மற்றொன்றுங் காண்கிலேன்; நேரம் அகாலமாயிற்று; தருபவரும் வேறு
எவருமிலர்; போமிடமும் வேறில்லை; வயலிலே இன்று பகலில் விதைத்த
நென்முளைகளை வாரிக்கொண்டு வந்தால் வல்லபடி அமுதமைத்தலும்
கூடும்“ என்றனர். வானம் பிறங்க மழை பெய்து, வழியிது பக்கமிது என்று
தெரியாதபடி மைக்குழம்பு போன்ற இருள் சூழ்ந்த அந்த நள்ளிரவிலே ஒரு
பெரிய இறை கூடையைத் தலையிலே கவிழ்த்துக் கொண்டு
கால்களினாற்றடவி முன் பழக்கக் குறியினாலே வயலுட்சென்று நீரில் மிதந்து
வரப்போரங்களிற் சார்ந்திருந்த நென்முளைகளை வாரிக் கூடையிற்
கொண்டுவந்து, நாயனார், மனைவாயிலில் தம்மை எதிர்நோக்கி நின்ற
மனைவியாரிடம் கொடுத்தனர். மனைவியார் விறகில்லை என்ன, வீட்டுக்
கூரையின் அலக்குகளையறுத்து வீழ்த்து நாயனார் விறகாக்கினார்.
மனைவியார் நென்முளையைவறுத்து, அரிசியாக்கி, அமுதாக்கினர். நாயனார்
வீட்டுக்கொல்லையிற் குழிநிரம்பாத புன்செய்ப் பயிர்களைப் பாசப்பழிமுதல்
பறிப்பவர்போல வேரோடும் பறித்துத்தர, அவற்றை மனைவியார் தமது
கைவினைப் பழக்கத்தால் பற்பல கறிவகைகளாகச் சமைத்தனர்.

     பின்னர் அங்குத் துயில் கொண்டார் போன்று பள்ளிகொண்ட
அரனடியவர் பாலன்பாகச் சென்று “அழுந்திய இடருள் நீங்கி அடியேன்
உய்யும்பொருட்டு என்னிடம் எழுந்தருள் பெரியோய்! ஈண்ட
அமுதுசெய்தருள்க“ என்று துயிலுணர்த்தினார். அவர் வடிவம் ஒரு
சோதியாய்த் தோன்றிற்று. அன்பரும் மனைவியாரும் திகைத்து நின்றனர்.
இறைவன் விண்ணிலே விடையின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளிக்
காட்சிதந்து, “அன்பனே! அடியார் பூசை பாதுகாத்தளித்த நீ
மனைவியோடும் எமது உலகத்திற் சேர்ந்து, குபேரனே பெருநிதியம் ஏந்தி
உன் சொல்வழி முன்னின்று ஏவல் கேட்ப, இன்பம்பெற்று இருக்க“ என
அருளிச்செய் தெழுந்தருளினார்.

     தல விசேடம் - முன்னர் உரைக்கப்பெற்றது. 547 - பக்கம் பார்க்க.

     1கற்பனை - 1. ஏரின் செல்வம் எல்லையில்லாத வளங்களையும்
சிறப்பையும் தருவது. அதனைப் புறக்கணித்து ஒதுக்காது பாதுகாத்துப்
போற்றுதல் வேண்டும்.

     2. செல்வமும் சிவசிந்தனையும் பெற்று அவ்வொழுக்கத்து நிற்றல்
சிறந்தது.

     3. சிவனடியார் பூசையும் அவர்க்கன்போடமுதூட்டலும் சிறந்த
புண்ணியமாம். இதனிற் சிறந்த புண்ணியம் வேறில்லை.


     1கற்பனை - கற்பித்தல். தொழிற் பெயர். ஆகு பெயராய்க்
கற்பிக்கப்பெறும் நீதிகளின்மேல் நின்றது. “முத்தியு ஞானமும் வானவ
ரறியா முறை முறை பலபல நெறிகளுங்காட்டிக், கற்பனை கற்பித்த
கடவுளை“ என்ற நம்பிகள் தேவாரமுங் காண்க. கற்பனை என்பது
இல்லாததனைக் கற்பித்துக் கூறும் புனைந்துரை என்று பொருள் தருமோ
என் றையுற்றுச் சில அன்பர்கள் வினாவியதனால் இக்குறிப்பு எழுதப்பெற்றது.