பக்கம் எண் :


604 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
  பரவிய திருநீற் றன்பு பாதுகாத் துய்ப்பீ“ ரென்று
புரவலர் மன்று ளாடும் பூங்கழல் சிந்தை செய்தார்.
22

     (இ-ள்.) வெளிப்படை. தமக்குப் பின் அரசியல் நடத்து முறைமையில்
வரும் இளவரசர், அமைச்சர் முதலியவர்க்கும், தம்மிடத்துக் காதலால் மனம்
வருந்தும் தேவிமார், ஏனைச் சுற்றத்தார் முதலியோர்க்கும், பொருந்திய
செய்தியைக் கூறுவாராகி “விதியினாலே பரவப்பெற்ற திருநீற்றினிடத்து
வைத்த அன்பினையே சோர்வு வாராது பாதுகாத்து உலகிலே கொண்டு
செலுத்தக் கடவீர்“ என்று உறுதி மொழிக் கட்டளையைக் கூறியபின், அரசர்,
திருமன்றிலே அருட் கூத்தாடு கின்ற பூங்கழலணிந்த எடுத்த திருவடியைச்
சிந்தித்திருந்தனர்.

     (வி-ரை.) முன் பாட்டிற் கண்டபடி திருவேடத்தையும்
வேடத்தாரையும் காத்து வந்த கொள்கையைக் கடைபோகச் செலுத்துதலே
தமது முதற கடமையாக எண்ணிச் சோர்கின்ற ஆவியைத் தாங்கினார்.

     திருவேடத்தின் பின், இரண்டாவதாகத் தமது அரசுரிமைக்
கடமையை
வைத்தெண்ணியவராய் அரசியலாயத்தாரைக் கொண்டனர்;
அதன் பின்னரே தம்பாற் காதலுடைய - உடல் உறவுடைய - தேவிமார்
முதலிய சுற்றத்தாரை வைத்தெண்ணினார். இதுபற்றியே, ஆவி சோர்கின்ற
இச்சமயத்தில், முதலில் நாயனாரது அருணோக்கத்திற் கிலக்காயினவன்
தத்தன
என்று முன் பாட்டிற் கூறிய ஆசிரியர், இப்பாட்டிலே அரசியல்
ஆயத்தாரை
அதனை அடுத்தும், விரவிய காதலாரை அதற்கடுத்தும்
வைத்தோதினார். அடியார் பணி முதலிலும், அரசியலாகிய நாட்டின்
காரியம் அதற்குப் பின்னரும், குடும்பப் பொருள் இறுதியிலும்
வைக்கற்பாலன என்பது ஆசிரியர் கருத்துமாகும். அரசியல் ஆயத்தாரும்
காதலாரும் கொண்டொழுகும்படி அரசர் பணித்ததும் தம் கொள்கையாகிய
வேடமே சிந்தித்த
லொன்றேயாம் என்பதும் குறிக்க.

     அரசியல் ஆயத்தார் - அரசியலைச் செலுத்தும் தொகுதியவர்.
அரசும் அங்கமுமாகிய யாவும் இதனுள் அடங்கும். இவற்றின் விரிவு
திருக்குறள் முதலிய நீதி நூல்களுட் காண்க. அழிவுறுங் காதலார் -
தம்மிடத்து வைத்த காதலாற் பரிந்து, தம் நிலைக்கழிந்து, இத்தகைய
தலைவரைப் பிரிய நேரிடுகின்றதே யென்று கவலைப்பட்டு அழியும்
தேவிமார், மக்கள் முதலிய சுற்றத்தார். ஆயத்தார் - மக்கள் முதலிய
சுற்றத்தார் என்றும், காதலார் மந்திரி முதலாயினார் என்று
முரைப்பாருமுண்டு.

     விரவிய செய்கை - நடந்த செய்தியையும், இனி நடைபெற
வேண்டுவதாய்ப் பொருந்திய செய்தியையும் என்க.

     விளம்புவார் - எதிர்கால வினையாலணையும் பெயர். சொல்வாராகி.
என்று என்பதனோடு முடிந்தது.

     விதியினாலே - இங்கு நிகழ்ந்த செய்தி விதியின் காரணமாய்
விளைந்தது. விதி - “திருவேடத்தை அரனெனத் தொழுக“ என்று ஆகமம்
விதித்த விதி. இதனால் இதுவரை நேர்ந்த செய்தி முற்றும் அடங்க ஒரு
சொல்லிற் சுருக்கி அறிவித்ததனோடு அமைதியும் கூறியவாறு. நிகழ்ந்தது
என்ற வினைமுற்றுத் தொக்கி நின்றது. நியதிப்படி என்றலுமாம்.
விதியினாலே பரவிய
என்று கூட்டி விதிப்படி இதுவரை நான்போற்றி
வந்த - என்றுரைத்தலுமாம். நான் - எழுவாய் வருவிக்க. பரவிய -
வேதங்களாலே பரவப்பெற்ற.

     திருநீற்றன்பு பாதுகாத்து உய்ப்பீர் - திருநீறும் ஏனைத்
திருவேடமும் எனுமிவற்றில் வைத்த அன்பின் ஒழுக்கத்தைச்
சோர்வுபடாமல் காத்து உலகத்திற் செலுத்தி வருவீர்களாக! இதுவே, இந்த,
முடிவுறும் நிலையில் நான் உங்களுக்குச் சொல்லத்தக்க உறுதிப் பொருள்.
இஃதொன்றனையே ஆயத்தார், காதலார் எனு