பக்கம் எண் :


மெய்ப்பொருணாயனார் புராணம்605

Periya Puranam

மிருதிறத்தார்க்கும் அரசர் உறுதி கூறியவாறு காண்க. இஃதொன்றினைக்
குறிக்கோளாகக் கொண்டொழுகுதலே அனைவர்க்கும் திருவருளின்பம்
தரும் என்பது நாயனாரது துணிபாம்.

      வேடத்திற்றலைமை பெற்ற நீற்றினைச் சொல்லவே ஏனைய
வேடங்களும் உடன்கொள்ளப் பெறும்.

      என்று - என்று சொல்லி, இவ்வாறு தனது கடமைகள் யாவும
நிறைவேற்றி முடித்துக் கொண்டு, அதன்பின், இறுதியாக. புரவலர் -
காத்தலின் வல்லவர் - அரசர். இங்கு இப்பெயராற் கூறியது மேற்கூறிய
பற்பலவகைக் கடமைகளையும் பாதுகாக்கும் வழியிற் காத்துநின்றமை
குறித்ததாம்.

     மன்றுளாடும் பூங்கழல - சிற்றம்பலத்திலே அருட்கூத்தாடும்
அம்பலவாணனது அழகிய கழலணிந்த திருவடி. ஆடும் கழல
என்றமையால் எடுத்தபாதம் என்க.

      இங்கு அரசர் தாம் ஆன்மார்த்தமாய்க் கொண்டு தினமும் பூசித்து
வந்த சிற்றம்பலவாணன் திருவடிகளைச் சிந்தித்தார் என்க. முன்னர் “தேடிய
மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள் ஆடிய பெருமா னன்பர்க் காவன
வாகும்“ (470) என்றதும், வரும் பாட்டில் “அவர்முன் றம்மைக் கண்டவா
றெதிரே நின்று காட்சிதந் தருளி“ என்பதும் காண்க. இவ்வாறே
கழறிற்றறிவார் நாயனார் சிற்றம்பலவாணனைத் தினமும் பூசித்துத்
திருச்சிலம்பொலி கேட்ட சரிதமும் இங்கு நினைவு கூர்க

      இவ்வுடல் விட்டு உயிர் பிரிந்துபோம் பொழுது இறைவனை
நினைத்தல் வேண்டும் சாங்காலத்து வரும் எண்ணப்படியே ஒருவன்
பின்னர் ஆகின்றான் என்பர். “புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
யறிவழிந்திட் டைமே லுந்தி, அலமந்த போதா“கிய அப்போது, தனது
மரணவேதனையினாலும், அறிவு மயக்கத்தானும், தன்பிரிவு பற்றித் தன்
முன்னின்று, தொடர்புடைய பிறர்படுகின்ற துன்பங் காண்பதாலும்,
பிறவாற்றாலும் இது எளிதிற் கூடுவதன்று. இதுபற்றியே ஒருவன்
இறக்குங்காலத்துச் சூழ இருப்பவர் சிந்தனை முகத்திற்றேக்கி அழுதல்
முதலியன செய்யாது தேவாரந் திருவாசக முதலிய அருட்பாக்களை
ஓதிக்கொண்டிருத்தல் வேண்டுமென்று பெரியோர் கூறுவர்.

      ஆயின் இவ்வாறு ஆவி பிரியும்போது இறைவனை நினைக்கப்
பெறுதல் நெடுங்காலம் இறைவனை எண்ணி யெண்ணி வேண்டிக்
கொண்டதன் பலனாகவே இறைவன் அருளினாற் பெற வேண்டிய
தொன்றா மல்லது எவரும் அக்காலத்துத் தாமாகச் செய்துகொள்ளத்
தக்கதன்று; பிறர்தர வருவது மன்று. இதன் அருமையும் பெருமையும்
பற்றியன்றே, கந்தை மிகையாங் கருத்துடையராய், முழுத்துறவு வேந்தராய்,
இறைவனிடத்துத் தம்பொருட்டு எவ்வரமும் வேண்டாதவராய் உள்ள
எமது பரமாசாரிய ஞான மூர்த்திகளாகிய அப்பர் பெருமானும்
இவ்வொருவரத்தினையே பலவிடத்தும் இறைவன்பால் மன்றாடி
வேண்டினார்.

“துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டு மாவடு துறையு ளானே,“
 
“துஞ்சும் போதுநின் னாமத் திருவெழுத்
தஞ்சுந் தோன்ற வருளுமை யாறரே,“
 
 “சாமன் றுரைக்கத் தருதிகண் டாயெங்கள் சங்கரனே“

     முதலிய பற்பல தேவாரங்கள் காண்க. இங்கு நாயனாரும் பன்னாட் பூசித்துத் தியானித்துப் பிரார்த்தித்ததன் பயனாகவே இச்சமயத்து “மன்றுளாடும் பூங்கழல் சிந்தை செய்யப் பெற்ற“தும், இறைவன் “அவர்முன் றம்மைக் கண்டாவா றெதிரே நின்று“ அருளியதும் கூடிற்று என்றதாம்.

     செய்கை எல்லாம் - என்பதும் பாடம். 22