பக்கம் எண் :


மெய்ப்பொருணாயனார் புராணம்609

Periya Puranam
தாம் நிலத்திலே இருந்து கொண்டு, “இனி அருள் செய்க!“ என்றார். அவன்
புத்தகப்பையை அவிழ்ப்பவன்போல இருந்து, அவர் வணங்கியபோது
படையை எடுத்துத் தான் முன் நினைத்த அக்கொடிய செயலைச்செய்ய,
மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்“ எனத்தொழுது, அரசரே வென்றார்.
மறைத்தவன் புகுந்தபோதே அங்குமனம் வைத்திருந்த தத்தன்
நொடிப்பொழுதில் அவனை வாளினால் எறியப்புக்கான். மிகுதியும் இரத்தம்
சோர்தலால் வீழ்கின்ற அரசர் தமது நீண்டகையினால் “தத்தா நமரேகாண்
என்று சொல்லி அவனைத் தடுத்து வீழ்ந்தார். “இனி நான் யாது செய்கேன்?“
என்று தத்தன் கேட்க, அரசர், “அடியார் போகும் போது யாரும்
இடைவிலக்காதபடி கொண்டுபோய் விடுநீ“ என்றார். இதனை அறிந்தார்
பலரும் வழியிலே மறித்து அரசரைத் தீங்குசெய்த பொய்த்தவனைக்
கொல்வோம்“ எனச் சுற்றிச்சூழ்ந்தனர். “இவன் போகப்பெற்றது அரசரது
ஆணையாகும்“ என்று தத்தன் அவர்களையெல்லாம் விலக்கி, ஆள்
அணுகாத கானம் சேர அவனைவிட்டு, மீண்டு வந்து அரசரை வணங்கி
நின்று, “செய்தவ வேடங்கொண்டு வென்றவனுக்கு இடையூறின்றிக்
கொண்டுபோய் விட்டேன்“ என்றான். அது கேட்பதற்காகவே, சோர்கின்ற
உயிரைப் போகாதே தடுத்துத் தாங்கி யிருந்த அரசர் “இன்று எனக்கு ஐயன்
செய்தது யார்செய்ய வல்லவர்?“ என்று நன் மொழிகூறி, அரசியல்
ஆயத்தார்க்கும் காதலார்க்கும் “விதியினாலே திருநீற்றன்பு நெறியைப்
பாதுகாத்துச் செலுத்துவீர்களாக என்று உறுதி கூறியபின் அம்பலக்கூத்தரது
ஆடும் கழலைச் சிந்தித்தார்.

     இறைவன் தம்மை முன் அவர் கண்டவாறே எதிரே நின்று காட்சி தந்து
அவரைத் தேவர்க்கும் அரிய தமது அருட்கழல் நீழல் சேரும்படி கொண்டு
தம்மை இடையறாமற் கும்பிடுங் கொள்கையை ஈந்தருளினர்.

     தல விசேடம் - முன்னர் 467-ம் திருப்பாட்டின் கீழ் உரைத்தவை
காண்க. பெண்ணையாற்றின் தென்கரையில் இவ்வாலயம் உள்ளது.
மேற்குமுகமான சந்நிதி. பதிகம் 2. சுவாமி வீரட்டநாதர் எனவும், அம்பிகை
சிவாநந்தவல்லி எனவும் பெறுவர். இத்தலம் திருக்கோவலூர் எனும்
இருப்புப்பாதை நிலையத்திலிருந்து வடக்கு ? நாழிகை யளவில்
திருவறையணிநல்லூரை அடைந்து பெண்ணையாற்றைக் கடந்து அதன்
தென்கரையிற் சேரத்தக்கது. கோவலூர் - ஊர்ப்பெயர். வீரட்டானம் -
திருக்கோயிலின் பெயர். “கோவலூர்தனுள் - வீரட்டானஞ் சேர்துமே“ என்ற
ஆளுடைய பிள்ளையார் தேவாரங்கள் காண்க. இத்தலம் ஊனடைந்த
உடம்பின் பிறவி நீக்கி, வீடளிக்குந் தன்மையுடையதென்பது, இதற்குள்ள
இரண்டு தேவாரப் பதிகங்களி னுட்குறிப்பாகும். தேவாரக் குறிப்புக்கள்
ஆளுடைய பிள்ளையார் - அப்பர் பெருமான் சரிதங்களுட் காண்க. இங்குப்
பெண்ணையாறு உடல் நோயும் உயிர் நோயும் தீர்க்கும் புனித தீாத்தமாம்.
இங்கு ஆற்றின் கரையின் மேலிருந்து திருவண்ணாமலைச் சிகரந்
தரிசிக்கலாம்.

     கற்பனை :- 1. அரசியல் அறநெறி வழாமற் காத்தலும், குடிகளைப்
பகைவர் முதலிய ஐந்து பயங்களின்றும், காத்தலும், நீதிவிதிப்படி
அரசியற்றலும் அரசர் கடன்.

     2. அன்பர் வேடம் அரனெனச் சிந்தித்துத் தொழுதற்குரியது.

     3. வேதவாய்மை காத்தலும், இறைவன் கோயில்களிலெங்கும்
நித்தியபூசையும் சிறப்பும் வழாது நடைபெறச் செய்வதும் அரசர்களது முக்கிய
கடமைகளாம்.

     4. “மன்னனெப்படி மன்னுயிரப்படி“ என்ற பழமொழிப்படி மன்னரது
ஒழுக்கமே குடிகளிடத்தும், ஏனைய சுற்றத்தார் ஆயத்தார்களிடமும் பரவும்.
ஆதலின் மன்னரும், உலக உயர் நிலையில் உள்ள பிறரும் நல்லொழுக்க
முடையராய் வாழ்தல் வேண்டும். அவர்கள் தவறி நடந்தால் உலகமும் தவறி
நடக்கும். அந்தப் பழியும் பாவமும் அவர்கள் மேலேதேயாகும். இங்கு
நாயனாரது காவலாளர் முதலியோர் செய்கைகளும், கருத்தும் அரசரது
ஒழுக்கத்தினையே பின்பற்றி நின்றதுகண்டு உலகம் திருந்துக.