பக்கம் எண் :


616 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

ருக்குத் திருமண அணிகலன் முற்றும் முத்துக்களாற் செய்து குறியிட்டுக்
காட்டிய ஆசிரியர் திறமுங் காண்க. (திருஞான - புரா 1211 முதல் 1215 வரை
திருப்பாட்டுக்கள்). அச்சிறப்பினை இங்கு வைத்து இதன் உள்ளுறை
சிறப்பையும் அணிநலனையுங் கண்டு களிக்க. உயிர்களின் நால்வகைத்
தோற்றமும், அவை பெறும் நால்வகைப்பேறும் குறிக்க நால்வகை முத்துக்
கூறினார் என்றலுமாம்,முல்லையும் உடன் கொள்ளப்படுமென்று
முன்னர்க்குறித்தற் கேற்பக் குறிஞ்சி (வரை)க்கு இரண்டு முத்துக்கள் கூறிய
பொருத்தமுங்காண்க.

     மூரல் எனச்சொல் வெண்முத்த நகையார்
- இம்முத்துக்கள்
இவர்களின் மூரலேயாம் என்று உவமிக்கப் பெறுகின்ற
பல்வரிசையினையுடைய பெண்கள். மூரல் - புன்முறுவல். பற்கள்
முத்துப்போல்வன என்றுவமிப்பது வழக்கு. முத்துக்கள் பல்போல்வன என
சிறப்புக்காண்க. நகை - ஆகுபெயராய்ப் பல்வரிசையை உணர்திற்று.

     அறிவில்லாத பொருள்கள் ஆகிய கடல், கரும்பு, மூங்கில், யானைக்
கோடு இவை தாமும் அந்நாட்டில் முத்துடையனவாயின், அறிவும் உயிரும்
உள்ள பெண்களும் முத்துடையவர்களேயாம் என்றார். அம்முத்துக்கள்
எவையும் எமது மூரலுக்கு ஒப்பாகா என அவைகளைக் கண்டு அவர்
நகைக்கின்றனர் என்ற நயமுங் காண்க.

     தெரிந்து முறைகோக்கும் - ஒளி - வடிவு - கனம் - கதிர்
என்பனவற்றின் வேற்றுமை ஒற்றுமைகளைத் தெரிந்து எம்முறையில்
முறைப்படுத்திக் கோத்தால் அழகும், அதிக மதிப்பும் பெறுமோ
அம்முறையிற் கோக்கின்ற, இப்பாட்டாலே அந்நாட்டுக் கருப்பொருள்
உரிப்பொருள்களின்சிறப்பும், நீர்வளம், நிலவளம், பொருள்வளம்,
மக்கட்சிறப்பு, தொழில் முதலிய பலவும் அழகுபெற ஆசிரியர் முறைகோத்து
அமைத்தது கண்டு களிக்க. 2

     493. (வி-ரை.) என்னும் - செங்குன்றூர் என்கின்ற. செம்மை பெற்ற
குன்றுகளின் ஊர், எனப் பெயர்ப்பொருள் பெறுதலின், இது, காரணம்பற்றிய
இடுகுறியாகவும் அமைந்த தென்பார், என்னும் என்றார். பெயரின் விளங்கி
- தன் பெயரினாலேயே இது மலைநாட்டின பல ஊர்களிலும்
அந்நாட்டுக்குரிய சிறப்புக்கள் பலவற்றுடன் விளங்குவது என்க. ஊர்களின்
முன் சிறந்த மூதூர்
என்றதும் இக்குறிப்புப்பற்றியேயாம். பெயர்மட்டினன்றிப்
பெருமையிலும் சிறந்தது. செங்குன்றூர் - செம்மை - சிவத்தன்மையின்
குறிப்புமாம்.

     உலகு ஏறும் பெறுமையுடையது தான்
- உலகை மிக ஏற்றமடையச்
செய்யும் பெருமை தானேயுடையது. உலகை வாழச்செய்து ஈடேற்றும்
பெருமை. மேற்பாட்டின்கீழ் உரைத்தவை காண்க. தான் உடையது என
மாற்றுக. தானே - பிரிநிலை ஏகாரம் தொக்கது. தேற்றேகாரம் எனினுமாம்.
உலகிலே மேன்மேல் அதிகரிக்கும் பெருமை என்றலுமாம்.

     உழவின் அமைந்த வளத்தால் - முதனிலைத் தீபமாக்கி உழவின்
வளத்தாற் குடிமைத் தலை நின்றார் எனவும், உழவின் வளத்தால் மரபிற்
பெரியோர் எனவும் இரண்டிடத்தும் கூட்டி யுரைக்க. உழவுத் தொழில்
மறையோர்க்கு விதித்தலின்று. ஆயின் இந்நாடு பரசிராம முனிவனால்
மறையோர்க்குத் தானமாகத் தரப்பெற்றமையால் மறையோர் நிலத்துக்
குரிமைபெற்ற கிழவராயினர். ஆதலின் நிலக்கிழமை பூண்டார் உழவு
வளத்தால் மன்னுவ
தியல்பாம். ஆயினும் இவர்கள் உழவு தங்கட்குரிய
தொழிலன்றாகவே, நிலத்தை உழவுத் தொழிற் குரியோராகிய
வேளாளமக்களிடம் ஒப்புவித்து அவர் தரும் மேலுரிமைப் பங்கு வருவாயைத்
தமதாகக் கொண்டு நிலைத்து வாழ்வார். அவ்வாறு இவர்களின்கீழ்
உழவுசெய்யும் வேளாண் மக்களும் தாந்தாம் உழுகின்ற நிலத்தை ஆளும்
உரிமையுடையாராயும் மறையவர்பாற் குடிமை பெற்றாராயும் வாழ்வார். இரு
திறத்தினரும் நில உரிமையுடையாராய்த் தொடர்புற்று இந்நாட்டில் விளங்குதல்
இன்றைக்கும் காணப்பெறும். இருவரும் உழவின் வளத்தாலே வாழ்வார்.
இவ்விருதிறத்தாரது நில உரிமையின் விரிவுகள் இந்நாட்டு நில உரிமைச்
சட்டத்தினுட் கண்டுகொள்க.