பக்கம் எண் :


626 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     பெருகாநின்ற பெரும் பேறு - பேறு - பாக்கியம். இப்பேறு
பெரியது. இயல்பிற் பெரிதா யிருப்பதுடன் பின்னும் மேன்மேலும் பெருகி
வளர்கின்றது என்க. பெருகுதலின் விரிவு மேல்வரும் இரண்டு பாட்டுக்களும்
குறித்தன. அவை யன்றியும் திருத்தொண்டத் தொகையால் உலகம் என்றும்
உய்ந்து நிகழ்கின்றதும் குறிப்பாம்.

     அவர்பாற் பேறு பெற்றார் - புறகு என்று நாயனார் சொல்லியதும்
திருவருளாலே ஆகியதாம். “அகில காரணர் தாள்பணி வார்கடாம், அகில
லோகமு மாளற்குரியர்“ (139) என்றபடி அடியவர்களே முதல்வராவார் என்பது
இந்நாயனார் கொள்கை. அதற்கிணங்க இறைவரும் உலகம் உய்யத்
திருத்தொண்டத்தொகையினைத் தோற்றுவிப்பதும், நம்பிகளைத்
திருக்கூட்டத்தினுட் கூட்டுவிப்பதும் ஆகிய இரண்டினையும் தாமே
செய்வதினும் இந்நாயனாரைக் கொண்டு செய்விப்பது தக்கதென்று திருவுளம்
பற்றி இவ்வாறு இவர் சொல்லுமாறு செய்தனர் என்க.

     மற்றும் பெற நின்றார் - மற்றும் - வன்றொண்டர்
புறகென்றதேயன்றி அவருக்குப் பிரானாகியவரும் புறகு என்பது. இதுவும்
திருவருள் வழியே நிகழ்வதாகலின், மற்றும் - என எச்சவும்மை
கொடுத்தோதினார். அதனோடு மேலும், “அல்லல் தீர்ந்துலகுய்ய
மறையளித்த“ தமது திருவாக்கினாலே இறைவர் “தில்லைவாழந்தணர்த
மடியார்க்கு மடியேன்“ என்று அடியார்க் கடிமைத்திறம் தாமே வகுத்தருளப்
பெற்றதும் (345) அவ்வருட்டுணை கொண்டு, அதுவே உண்ணின்று
உணர்த்திப் பாடுவிக்க (348) நம்பிகள் திருத்தொண்டத்தொகை பாடித்
தொழுது திருக்கூட்டத்தி னடுவண் வந்து அணையப்பெற்றதும் (349) ஆகிய
பேறுகளுமாம். பெற நின்றார் - இனிப் பெறுதற்குரியராய் நின்றார்.

     சீரடியார் - புறம் பென்றுரைப்ப - என்பனவும் பாடங்கள். 7

     498. (வி-ரை.) சேணார்மேருச் சிலை வளைத்த - நெடுஞ்
சேய்மைக் கண்ணும் சென்று ஒங்குகின்ற மேருவாகிய மலையை வில்லாக
வளைத்த. சேண் - நெடுந்தூரம். ஆகாயத்தை அளாவி என்றுரைப்பாரு
முண்டு. மிக மேலும் மிகக் கீழும் சென்று, அண்ட கோளகையின் நடுவாகி
விளங்குவது மேரு என்பர். சிலை - மலை என்று கொண்டு மேருவாகிய
மலையை வளைத்த எனவும், சிலை - வில் எனக்கொண்டு மேருவை
வில்லாக வளைத்த எனவும், இருவழியும் கொள்ளத் தக்கது. 496 பார்க்க.

     சிவனார் அடியார் - சிவனாரது அடியார். வேற்றுமைத் தொகை.

     திருக்கூட்டம் பேணாது - இரண்டாம் வேற்றுமைத் தொகை.
திருக்கூட்டத்தைப் பேணாது செல்லும். தொழுது வந்தணையாது என்றதும்
காண்க.

     பேணுதல் - உரிய வகையில் பாராட்டுதல். ஊரனுக்கும் -
புனைந்தார்க்கும் புறகு என்றுரைக்க எனக் கூட்டி உரை கூறுவாரு முண்டு.
திருக்கூட்டத்திற்கு ஊரனையும் பிரானையும் புற கென்றதே யன்றி
அவர்களுக்குத் திருக்கூட்டத்தைப் புறகென்றல் பொருந்தாதென்று அதனை
மறுப்பாரு முண்டு. அவர்க்கு இவர் புறகாயினும் இவர்க்கு அவர் புறகாயினும்
பொருள் ஒன்றேயென விடை கூறுவாருமுண்டு.

     ஊரனுக்கும் - எண்ணுப் பொருளோடு உம்மை இழிவு சிறப்புப்
பொருளும் பெற நின்றது. உரைப்ப - உரைக்கத் தக்கபடியாக.

     மற்று அவர் பால் - மற்று - மற்றும் - மேலும் - முன்பெற்ற
அருளோடு. இதனையே மேற்பாட்டில் மற்றும் பெற நின்றார் என்று
குறித்தது காண்க. அவர் பால் - தான புறகென்று கூறிய நம்பிகளிடத்தும்
பிரானிடத்தும் என்றலுமாம். நம்பிகளிடத்துக் கோணா அருள் பெற்றதாவது
“விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்“ என்று
திருத்தொண்டத்தொகைப் பாட்டினுள்ளே தொழப் பெற்றது.

     கோணா அருள் - எஞ்ஞான்றும் எவ்விடத்தும் கோடுதல் இல்லாத
திருவருள்.