பக்கம் எண் :


66 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
     நீர் - நீர்மை. சுரந்தும் அளித்தும் ஊட்டி வளர்க்கும் நீர்மை
உடையது என்க. நீரது - நீரையுடையது என்றலுமாம். என்னை? காவிரியின்
நீர் முழுதும் உலகினை ஊட்டி உய்விப்பதற்கேயன்றி ஏனை ஆறுகள்போல
வறிதே கடலிற் போதலில்லை ஆதலின். பின்னரும் “கடல் வயிறு நிறையாத
காவிரி“ (திருமூலர் புரா 8) என்றனர்.

     வையகம் பல் உயிர் வளர்த்து - உய்யவே - வையகத்தில் வாழ்ந்து
அதன் போகங்களை நுகரும் உயிர் தங்கும் உடம்புகளை வளர்த்தும்,
உயிர்களை உய்யச் செய்தும் என்றபடி வையகம் வளர்த்து உயிர் உய்யவே
என்க. உயிர்களுக்காக இறைவன் தந்த உடம்பும், கரணங்களும்,
உலகங்களும், அவற்றின் போகங்களும் வளரும்படி செய்தும், அவற்றை
உயிர்கள் அனுபவிக்குமாறு செய்தும், சிவத்திலே ஈடுபட்டு உய்யும்படி
கூட்டுவதற்குத் துணை செய்வது என்பது கருத்து. உயிர்கள்
சிவப்பணிவிடையிலே முயல்வதற்கு உரிய பூவும் நீரும் ஆகிய சாதனங்களைத்
தருதலேயன்றித், தானும் பூசை செய்து வழிபட்டு ஆன்மாக்களையும்
வழிப்படுத்தும் என்பது வரும் 57-வது பாட்டிற் காண்க. இவ்வுதவி என்றும்
இன்றியமையாததென நாடோறும் என்றார்.

     உய்யவே - இவ்வுலகில் இறந்துபடாமலிருக்கும்படி. “பசும்புற்றலை
காண்பரிது“ என்றார் நாயனார்; இஃது எல்லா ஆறுகளுக்கும் பொது இயல்பு.
மேலும் அழியாத வாழ்வடைந்து உறுதி பெறும்படி என்பதுமாம். இது
காவிரிக்குச் சிறப்பியல்பாம்.

     உய்யவே சுரந்து அளித்து ஊட்டு நீரது - சுரத்தலால் பிரமனையும்,
அளித்தலால் கங்கையையும், ஊட்டுதலால் உமாதேவியையும், உய்யத்துணை
செய்தலால் சிவனடியார்களையும், ஒப்பாகுவது காவிரி எனப் பின்னர்
இம்முறையிலே 54, 55, 56, 57 திருப்பாட்டுக்களில் விரித்துக் கூறியருளினார்.
காவிரி இவ்வுலகிற் போந்தது இந்திரன் சிவபூசைக்காகச் சீகாழியில் வைத்த
நந்தனவனத்தைக் காப்பாற்றுதற் பொருட்டே என்று மேலே கொள்ளப்பட்டது.
காக உருவம் கொண்ட விநயாகப் பெருமான் அகத்தியரது கமண்டலத்தைக்
கவிழ்க்க, அதனின்று பெருகி விரிந்த காரணத்தால் காவிரி என்று காரணப்
பெயர்பெற்றதென்பர். கவேர முனிவர் ஆசிரமத்தின் வழி வந்தமையால் அவர்
பெயரால் காவேரி என்று பெயராயிற்று என்பதும் ஒரு வரலாறு. இது உலகில்
வந்தது மலர் வனத்தை வளர்க்கும் காரணம் பற்றியாதலின் அச்சிறப்பு
நேர்ககி “வளர்த்து“ எனத் தொடங்கிக் காட்டினார்.

     இப்பாட்டிற்குக் ‘காவிரி' என்ற எழுவாய் மேற்பாட்டிலிருந்து வருவித்து
உரைக்க. காவிரி - சான்றது - போன்றது - நீரது என்று தனித்தனி
முடிக்க. 3

54. மாலினுந் திச்சுழி மலர்தன் மேல்வருஞ்  
  சால்பினாற் பல்லுயிர் தருதன் மாண்பினாற்
கோலநற் குண்டிகை தாங்குங் கொள்கையாற்
போலுநான் முகனையும் பொன்னி மாநதி.
4

     இது காவிரிக்கும் பிரமனுக்கும் சிலேடைவகையால் ஒப்புமை கூறுவது

     (இ-ள்.) மாலின் உந்தி.......சால்பினால் (1) மிகப் பெரிய ஆற்று நீர்ச்
சுழியையும் மலர்களையும் தன்னிடத்துத் தாங்கி வருகின்ற சிறப்பினால் - (2)
(பிரமன்) திருமாலின் சுழிந்த உந்திக் கமலத்தினின்று பிறத்தலாகிய
விசேடத்தால்; பல்லுயிர் தருதல் மாண்பினால் - (1) (காவிரி) பல
உயிர்களையும் சாவாது நீர் தந்து காக்கும் மாட்சியினால் - (2) (பிரமன்) பல
உயிர்களையும் படைக்கும் மாண்பினால்; கோலம்..........கொள்கையால் - (1)
(காவிரி) (அகத்தியமுனிவரது) நற்கோலமுடைய கமண்டலத்தினாலே தாங்கி
வரப்பெற்ற வரலாற்றினால்; (2) (பிரமன்) நற்குண்டிகையைத் தாங்கி நிற்கும்
கோலமுடையன் எனப் புராணங்கள் கூறும்