பக்கம் எண் :


திருவாரூர்த் திருநகரச் சிறப்பு65

Periya Puranam
நின்றமையும் உணர்க. பூதம் - தூய்மையுமாம். பூதநீர் - ஐம்பூதங்களில்
ஒன்றாகிய நீர் எனவும், உற்பவத்தைச் செய்கின்ற நீர் (பூ - செனித்தல்)
எனவும், கமண்டலத்துள்ளே அடங்கி உருவிற் சிறிதாயினும் வலியிற்
பெரிதாய்ப் பூதங்கள் போன்ற நீர் என்று பொருள் உரைத்துக் கொள்ளத்
தக்கது. கமண்டலம் - (தவமுனிவர்கள் தாங்கும்), மூக்குடையதொரு
சிறுபாத்திரம்; கமண்டலம் பொழிந்த பூதநீர்க் காவிரி என மாற்றுக.
பொழிந்த
- பெருகிய.

     மாதர்மண் மடந்தை பொன்மார்பில் தாழ்ந்தது - மாதர் - அழகு.
மண்மடந்தை - பூமிதேவி. பொன்மார்பு - பொன்னிறமுடைய மார்பு,
மண்ணிற்கு நிறம் பொன்மையும், நீருக்கு நிறம் வெண்மையுமாம். “பொன்பார்
புனல்வெண்மை....“என்பது சைவ சாத்திரம். பால் பசுவின் உடல் முழுதும்
நிறைவுள்ளதாயினும் அதன் முலையிலே வெளிப்படுவதுபோல, மண் மடந்தை
முழுதும் பொன்மையுடையவளாயினும், காவிரி ஒழுகியியலும் உயர்ந்த
பகுதியே அப்பொன்மை, தேற்றம்பெற வெளிப்பட்டுத் தோன்றும் என்பார்,
“மண்மடந்தை பொன்மார்பில்“ என்றார். காவிரியின்
தொடக்கப்பிரதேசத்திலிருந்து (Kolar Gold Fields) இப்பொழுதும் பொன்
விளையக் காண்டலும் இங்குக் குறிக்கற்பாலதாம். “மகளிர்க் குறுப்பிற் சிறந்த
உறுப்பாகிய முலை“ என்று பேராசிரியர் திருக்கோவையாருரையில்
விரித்தமையும் இங்கு வைத்தெண்ணத்தக்கது. நீருக்கு நிறம் வெண்மை
யாதலின் ‘நித்திலத் தாமம்' என்றார்.

     ஓதநீர் நித்திலம் - சலத்திற் பிறந்த ஒளிநீர்மையுடைய முத்து.
கரும்பு
- யானை மத்தகம் முதலிய பல இடங்களிலும் முத்துப் பிறக்கும்.
இங்கு நீரைக் குறித்தலால் அதற்கேற்பச் சலச முத்தினைக்குறித்தார்.
உலகினை ஊட்டி வளர்க்கும் தன்மையாலும், எல்லாப் பொருள்களையும்
தன்னிடத்திலே தங்கவைத்துத் தோற்றுவித்தலாலும், நிலத்தை மடந்தை
என்றார். (பூமி - பூ - பகுதி - செனிப்பிப்பது - எனப் பொருளாதலும்
காண்க) இதனை வரும் பாட்டிற் காண்க.

     தாழ்ந்த - கீழ் இறங்கி வந்த என்று கொண்டு - மார்பினின்றும்
போந்து இறங்கிய - எனக் கூறுதலுமாம். இப்பொருளில் மார்புபோன்ற சைய
மலையினின்றும் போந்து கீழே வருகின்ற என்பது கருத்தாகக் கொள்க.
இதனால் யாற்றுச் சிறப்பும் நாட்டுச் சிறப்பும் ஒருங்கே கூறத்தொடங்கியவாறு.
2

53. சையமால் வரைபயில் தலைமை சான்றது;  
  செய்யபூ மகட்குநற் செவிலி போன்றது;
வையகம் பல்லுயிர் வளர்த்து நாடொறும்
உய்யவே சுரந்தளித் தூட்டு நீரது.
3

     (இ-ள்.) சையமால்.........சான்றது - (மேலும் காவிரியாறு) சையமாகிய
பெரிய மலையினின்றும் வரும் பெருமையிற் சிறந்தது; செய்ய.......போன்றது -
செம்மை செய்யும் பூமகளை வளர்க்கும் செவிலித்தாய் போன்றுள்ளது;
வையகம்.......நீரது - உலகில் உள்ள எல்லாவகை உயிர்களையும் வளரச்
செய்து தினமும் அவைகள் உய்யும்படி சுரந்தும் அளித்தும் ஊட்டுகின்ற
நீர்மையுடையது.

     (வி-ரை.) சையமால்வரை - பரதகண்டத்தின் மேற்குத் தொடர்ச்சி
மலைகளிலே காவிரிக்கு உற்பத்தித் தானமாய் விளங்கும் மலைத்தொடர் -
சையமலை என்பர். இது குடகு நாட்டில் உள்ளது.

     செய்ய பூமகள் - மேலே “மண்மடந்தை“ என்றதற் கேற்பப் பூமகள்
என்றார். செவிலி - மகள் என்றாராதலின், மகளை வளர்க்கத் தாயர்
வேண்டுதலின், ஐவகைத் தாயர்களிலே வளர்க்குந்தன்மையுடைமையாற்,
காவிரியைச் செவிலித்தாய் என்றார்.

     நாடொறும் - பெருகிய காலத்து நீர்ப் பெருக்கினாலும், வறந்த
காலத்து நீர் ஊற்றினாலும், ஊட்டுதலின் எந்நாளும் என்க. இவ்விரண்டும்
சேர்த்துச் “சுரந்தும் அளித்தும் ஊட்டும்“ என்றார். “ஊற்றுப் பெருக்கால்
உலகூட்டும்“ என்றார் பிறறும்.