பக்கம் எண் :


அமர்நீதி நாயனார் புராணம்685

Periya Puranam

இப்பாட்டாற் கூறினார். நாயனார் துலையில் நின்றபடியே துலைநேர் நிற்றல்
கண்டார். இறைவரும் பேதையும் தாமுமாகத் தந்த காட்சியுங் கண்டார்.
ஆதலின் தொழுதார்; போற்றினார்; நின்றபடியே துதித்தார். இறைவன்
அவர்க்கும், மைந்தர்க்கும், மனைவியார்க்கும் அழிவில் பதம் கொடுத்தார்
எனக் கண்டுகொள்க.

     அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும் - இறுதியாக ஏறிய
அன்பரை முன்னரும் அவர்க்குமுன் ஏறிய மைந்தரை அடுத்தும், இருவர்க்கும்
முன்னர் ஏறிய மனைவியாரை அதற்கடுத்தும் வைத்தார். முன் கூறியமுறை
வேறு. இங்குக் குறித்தமுறையின் காரணம் வேறு. இஃது ஏறிய காலம்பற்றி
நிச்சயித்த சங்கார முறையாம். மைந்தரைக் கையிலேந்திய நாயனாரது பழய
வுருவம் பழையாறையிலும் திருநல்லூரிங் காண்க.

     வழுவில் - குற்றமில்லாத. இறைவர் தம் கோவணங் கொண்டார்
என்று அன்பர்பாற் குற்றஞ் சுமத்தி வெகுண்டு இத்துணையுஞ் செய்தார்.
அவ்வாறு ஐயர் செய்தாரேனும் அவர் என்றும் வழுவற்றவரேயாம் என்பது
குறிப்பு. “கோவணக் கள்வர்“ (520), “ஐயர் கைதவம்“ (521), என்ற இடத்தும்
பிறாண்டும் உரைத்தனவும் இங்கு நினைவு கூர்க. “முட்டில் அன்பர்“ (536),
“பொச்சமில் லடிமைத்திறம் புரிந்தவர்“ (542), “இழைத்த அன்பு“ (544),
“அன்பினிற் குறைபடா அடிமைத் தொண்டு“ (545), என்று பலவாறும்
முன்னர்க் கூறியவற்றிற் கேற்ப இங்கு எவ்வகை வழுவுமில்லாத அன்பர்
என்று கூறினார். வரும்பாட்டில் கோதில் அன்பர் - என முடித்துக்
காட்டியதும் காண்க. கிறிபட என்ற அப்பர் சுவாமிகள் தேவாரத்திலும்,
கைதவம் ஐயர் மேலதே, அன்பரிடத்தன்று எனக் குறித்தபடியும் காண்க.

     முழுதும் இன் அருள் - முன்பு “மன்னுமிருளை மதிதுரந்தவாறு“
என்றபடி சிறிது சிறிதாக வெளிப்பட்டு நால்வகை நிலையின் வைத்து
அருளியது. முன்னர் இதுவரை பெறக் கொடுத்ததும் இன்னருளேயாம். ஆயின்
அவை திரோதான சத்தியின் உருவும் முழுதும் மாறாமல் நின்று வெகுட்சி
முதலியனவாய் வெளிப்பட்டு, அச்சம் முதலியவற்றை விளைவு செய்தன.
ஆயின் இங்குப் பெறக் கொடுத்தது அவ்வாறன்றி முழுதும் இன்னருளேயாய்,
அருட்சத்தி உருவமேயாய் நின்றது என்றபடி. கோதையுந் தாமுமாய்
வெளிப்பட்டுக் காட்சிதந்த கோலத்திற் கேற்ப முழுதும் இன்னருளே பெறக்
கொடுத்தனர் என்க. முழுதும் - காலத்தானும் இடத்தானுங் குறைபாடின்றி.

     தம்முன் - தமது அருள் வியாபகத்திலே கலந்து தம் சந்நிதானத்திலே.
இருக்கும் - எப்போதும் இடையறாது இருக்கின்ற. அழிவில் வான் பதம் -
சிவபதம்.

     எழுந்தருளினார் - வெளிப்பட்ட நிலையினின்றும்
அருள்நிறைவுக்குள்ளே கலந்தருளினர். ஐயர் - பெருமையுடையவர். “ஐயர்
கைதவம்“
(521) என்ற இடத்துக் கூறியவையுங் காண்க. 47

549. நாதர் தந்திரு வருளினா னற்பெருந் துலையே  
  மீது கொண்டெழு விமானம தாகிமேற் செல்லக்
கோதி லன்பருங் குடும்பமுங் குறைவறக் கொடுத்த
வாதி மூர்த்தியா ருடன்சிவ புரியினை யணைந்தார்.
48

     (இ-ள்.) வெளிப்படை. நாதருடைய திருவருளினாலே நல்ல பெரிய
அந்தத் துலையே அவர்களை மேலே கொண்டு எழுகின்ற விமானமாகி
மேற்செல்லக், குற்றமில்லாத அன்பராகிய நாயனாரும், அவரது மைந்தர்
மனைவியாராகிய குடும்பத்தாரும் எஞ்ஞான்றும் குறைவுபடாத அழிவில்
வான்பதங் கொடுத்த மூர்த்தியாருடனே சிவபுரியை அணைந்தனர்.