பக்கம் எண் :


694 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

சிவமயம்

தில்லைவாழந்தணர் சருக்கம்

சரித ஆராய்ச்சியுரை

     [இராவ்சாகிபு திரு. C. M. இராமச்சந்திர செட்டியார், B.A., B.L., உதவிய குறிப்புக்கள்]

1. தில்லை வாழந்தணர்

     இவர்களைத் தில்லை மூவாயிரவர் என எண் கொடுத்து நூல்கள்
பேசும். “தெய்வ வேதியர்களானார் மும்மையாயிரவர்“ (357) என்பது
புராணம். வைணவ சமயத்து ஆழ்வார்களில் ஒருவரான சேர மன்னர்
குலசேகராழ்வாரும் இவர்களைத், “தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்,
அந்தணர்க ளொருமூவாயிரவ ரேத்த“ என்று எடுத்துப் பாடியிருக்கின்றார்.
“முட்டாத முச்சந்தி மூவாயிரவர்க்கு மூர்த்தியென்னப் பட்டானை“ என்பது
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம். எனவே, இவ்விருவர் காலத்துக்கு
முன்னரே தில்லை மூவாயிரவர் என்ற எண்ணாற் குறித்த பெருமக்கள்
வழிபாடு செய்துவந்தனர் என்றறிகின்றோம். “மூவாயிரவரொடும் அளையா
விளையாடு மம்பலம்“ - (புருடோத்தமநம்பி), “முத்தீயாளர் நான்மறையர்
மூவாயிரவர்“ - (கண்டராதித்தர்) முதலிய திருவிசைப் பாக்களுங் காண்க.

     இதுபோலவே மூவாயிர அந்தணர்கள், “சேரர் மலைநாட் டூர்களின்முன்
சிறந்த மூதூர்“ என்று சேக்கிழார் அருளிய திருச்செங்குன்றூரிலும்
இருந்தார்கள். “மனக்கொள்சீர் மூவாயிரவர் வண்சிவனு மயனுந் தானு
மொப்பார்வாழ், கனக்கொள் சீர்மாடத் திருச்செங் குன்றூரில்“ எனவும்,
“அமர்ந்த தண்பழனத் திருச்செங்குன்றூரில், திருச்சிற்றாற்றங்கரையானை,
அமர்ந்தசீர் மூவாயிரவர் வேதியர்கள் தம்பதி அவனி தேவர்வாழ்“ எனவும்
வரும் நம்மாழ்வார் பாசுரங்கள் காண்க. (மூவாயிரவர் என்ற எண்
குறியாவிடினும்) இதனையே ஆசிரியர் சேக்கிழாரும் “மன்னுங் குலத்தின்
மாமறை நூல் மரபிற் பெரியோர் வாழ்பதியாம்“ என்று சிறப்பித்தனர்.
ஆயிரவர் என்ற தொகைக் குறிப்புக்கொண்ட வழக்கு நம்நாட்டில்
முன்காலத்திலிருந்து நிகழ்ந்துவருவதாம். பிராமணர்களில் “எண்ணாயிரவர்“
(அஷ்ட சகஸ்ரம்) என்றதொரு வகுப்பும், ஆயிர வைசியர், 12-ம் செட்டி,
500-ம் செட்டி என்ற வகுப்புக்களும், இவைபோல்பவையும் இப்போதும்
வழங்கி வருதல் காண்க.1

     திருக்கழுக்குன்றத்துச் சாசனம் ஒன்றில் குலோத்துங்கச் சோழன்
ஆட்சியில் இருபத்தைந்தாவது ஆண்டில் “தில்லை மூவாயிரவர் நம்பி“
என்பானும்,



     1இதுபோலவே திருவீழிமிழலையில் ஐந்நூற்றுவர் அந்தணர்கள்
வழிவழியாக இருந்து வழிபாடியற்றினர் என்பர். “ஐஞ்ஞூற் றத்தண ரேத்து,
மெண்ணில்பல் கோடி குணத்தரேர் வீழி யிவர்“ என்பது சேந்தனார்
திருவிசைப்பா. திருநின்றியூரில் முந்நூற்றுவர் அந்தணர் வழிபாடியற்றினர்
என்பது “மொய்த்தசீர் முந்நூற் றறுபதுவேலி மூன்றுநூறு வேதியரொடு
நுனக்கு, ஒத்த பொன்மணிக் கலசங்களேந்தி ஓங்குநின்றி யூரென்
றுனக்களிப்ப“ என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரத்தா லறியலாம்.
“நற்குடி நாற்பத் தெண்ணாயிரத்து வந்த“ என்று திருத்தொண்டர் புராண
வரலாற்றில் உமாபதிசிவாசாரியர் குறித்ததும் காண்க. சூரபதுமனுக்கு
மூவாயிரவர் என்ற தொகையாரான பிள்ளைகள் இருந்தார்கள் என்பது
கந்தபுராண வரலாறு.