அவனது சகோதரன் இராமபட்டனும்
அவ்வாலயத்திற்கு நூறு காசுக்கு
வாங்கின நாலு பதக நிலத்தைத் தானஞ் செய்தார்கள் என்று கண்டிருக்கிறது.
மேலும் மதுராந்தகத்துச் சாசனமொன்றில் சீராளன் கருணாகரன் என்ற
தில்லை மூவாயிரவ மங்களோத்துமன் என்னும் ஒரு மத்தியஸ்தன் பெயரை
இராஜராஜர் I காலத்திலேயே காண்கின்றோம்.
ஆதலின் இவ்வரசர்கள்
காலத்திலே தில்லைமூவாயிரவர் எனும் பெயரை மக்கள் இட்டு வழங்கினர்
என்று தெரிகிறது. வடஆறுகாடு சில்லா செய்யாறு தாலூகா பிரமதேசத்துச்
சந்திர மௌலீஸ்வரர் ஆலயத்தில் மூன்று கல்வெட்டுக்களிற் பாண்டியன்
தலைகொண்ட பார்த்தி வேந்திரவர்மன் என்ற அரசன் காலத்தில்
திருவேகம்பபுரத்து ராஜமல்ல சதுர்வேதி மங்கலத்தைச் சார்ந்த திரை ராஜிய
கடிகா மத்தியஸ்தன் மூவாயிரவன் என்ற ஒருவன்
அவ்வாலயத்தில்
அபிஷேகாதிகளைச் செய்யப் பொன்தானம் கொடுத்ததாகக் கண்டிருக்கிறது.
விருத்தாசலம் தாலுகா பெண்ணாகடத்தில் பிரளயகாலேஸ்வரர் ஆலயத்துச்
சுவரில் மூவாயிரவன்கோல் என்றதொரு நீட்டலளவையைப்பற்றிக்
கல்வெட்டில் பேசப்பட்டிருக்கின்றது. எனவே இப்பெயர் அளவைகளுக்கு
வழங்கிய தென்றும் அறிகின்றோம். அப்பூதி நாயனார் சரிதத்தில் அவர் தம்
அளவைகள் நிறைகோல் முதலியவற்றிற்கும் தம்மால் பத்தி செய்யப்பட்ட
திருநாவுக்கரசு நாயனார் பெயரை இட்டு வழங்கியதை இங்கு நினைவு கூர்க.
2. திருநீலகண்ட நாயனார்
இந்நாயனார் பெயரை மக்கள் இட்டு வழங்கினர்.
இவர் பெயரால்
மடங்கள் அமைத்தனர். இவரது பெருமை தமிழ்நாடு முழுமையும்
பழங்காலந்தொட்டுப் பரவி வந்தது. பழனியில் கிடைத்த ஒரு தாமிர
சாசனத்தின்படி கலி - 4768 - சாலிவாகனசகம் 1438 - பிலவங்க ஆண்டில்
பழனி நகரத்தில் திருநீலகண்டர் மடம் என்ற
மடம் கட்டப்பெற்றதென்றும்
அதனை நடத்தச் சில குறிப்பிட்ட தொகைகள் கொடுக்கப்பட்டன என்றும்
தெரிகிறது. (இதிற் குறித்த ஆண்டு சரியாக இல்லை.) சேரமாதேவியில்
அம்மநாத சுவாமி ஆலயத்தில் பரகேசரிவர்மன் ராஜேந்திர சோழ தேவனது
ஆறாவது ஆண்டு வட்டெழுத்துச் சாசனப்படி ராஜராஜ மண்டலத்து முல்லை
நாட்டுப் பிரமதேயமாகிய நிகரிலி சதுர்வேதிமங்கலத்துச் சபையார்கள், நகரம்
ராஜேந்திர சோழபுரத்து மன்னீர்க்காடன் என்ற திருநீலகண்ட
செட்டி என்ற
வணிகனுக்குக் காராண்மைப் பட்டயம் கொடுத்ததாகவும் அவன்
கயிலாயமுடையார் ஆலயத்துக்கு ஒரு வேலிக்கு உழவக் காசு ஆக இரண்டு
காசுகள் கொடுக்க வேண்டுமென்றும் கண்டிருக்கிறது. இது மிகப் பழைய
சாசனம்.
3. இயற்பகை நாயனார்
இப்பெயர் காரணப் பெயர் என்றும், இது இவரது இயற்பெயரன்று
என்றும் தோன்றுகின்றது. எனினும், மற்றை நாயன்மார் பெயர்களை மக்கள்
இட்டு வழங்கியது போலவே இப்பெயரையும் வழங்கினர். இந்நாயன்மார்
சரிதங்களில் மக்கள் மிக ஈடுபட்டு வந்தனர் எனவும், அவை உலக வழக்கில்
மிகப் பயின்று வந்தன எனவும் அறியலாம். தஞ்சை சில்லா கும்பகோணம்
தாலூகா திருப்புறம்பயத்தில் சாட்சீசுவரமுடையார் ஆலயத்தில் உள்ளதொரு
கல்வெட்டில் அரிவாட்டாயன், திருத்தொண்டன், வன்றொண்டன்,
சண்டேசுவரன், இயற்பகை, கோட்புலியார்,
விறன்மீண்டன், அணுக்கநம்பி
முதலிய பேருடையார்கள் திருப்புறம்பய முடையாருக்கு ஐப்பசி, பங்குனித்
திருவிழாக்களுக்கும், திருவேட்டை, தீர்த்தம் இந்நாட்களுக்கும்
நைவேத்தியங்களுக்காகச் சில நிலங்களைத் தானம் செய்ததாகக்
கண்டிருக்கிறது.
|