பக்கம் எண் :


696 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

4. இளையான்குடி மாறநாயனார்
5. மெய்ப்பொருணாயனார்


     இந்நாயனார் முத்தநாதன் என்ற தமது பகைவனைத் தம் காவலாளன்
தத்தன் வெட்ட வந்தபோது “தத்தா! நமர்! எனத் தடுத்து வீழ்ந்தார்“ என்று
புராணத்துட் காண்கின்றோம். இம்மொழிகள் நாயனார் சரிதத்தோடு பரவி
வழங்கி யிருத்தல் வேண்டும். தஞ்சைப் பெரிய கோயிலில் இராஜேந்திர
சோழன் காலத்து மூன்றாவது ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றில்
இம்மொழிகளைக் காண்கின்றோம். “கோபரகேசரி வர்மனான இராஜேந்திர
சோழ தேவருக்கு யாண்டு மூன்றாவது உடையார் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரம்
உடையாருக்கு ஸ்ரீ கார்யம் செய்கின்ற பொய்கைநாடு கிழவன் ஆதித்த
சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்யாண்டு மூன்றாவது வரை
செய்வித்த செப்புப் பிரசிமங்கள் ......... பாதாதி கேசாந்தம் இருப்பதிற்று விரல்
உசரத்து இரண்டு கையுடையவரான கனமாகச் செய்த “தத்தா நமரேகாண்
என்ற மிலா டுடையார் ஒருவர் ......“ என்பது சாசனம். சரித்திர வழக்கிலும்,
அதை ஒட்டிச் சாசனப் பதிவிலும், அதை ஒட்டிப் புராணத்திலும் எத்துணைத்
திருத்தமாக வாக்குக்களை எடுத்தாண்டனர் என்பது விளங்கும்.

     தஞ்சைத் திருநாகேசுவரத்துக் கல்வெட்டு ஒன்றில் “மிலாடுடையார்
பள்ளி“ என்ற பெயரும், திருக்கோவலூருக்கடுத்த கீழூரில் “கயிரூர்
பெருமானார் என்ற மிலாடுடையார்“ என்ற பெயரும் காணப்படுகின்றன.

     தஞ்சைப் திருப்பழனத்தில் பரகேசரிவர்மன் என்ற சோழனது 11-வது
ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் “மலாடுடையார் சித்தவடத் தடிகள்“ என்ற
பெயர் வருகின்றது. நடுநாட்டில் திருமுனைப்பாடிநாடு, ராஜராஜ வளநாட்டுத்
திருமுனைப் பாடிநாடு, மலை மண்டலத்து ஜனநாத வளநாடு என்ற மலைநாடு
முதலிய நாட்டின் பெயர்கள் பலவும் கிடைக்கின்றன. முனையதரையன்
திருவரங்கமுடையான் மலையராயன், முனையதரையன் திருவரங்கமுடையான்
ராஜாதிராஜ மலையரையன், முனையதரையன் மகன் திருவரங்கமுடையான்
ராஜாதி ராஜ மலையரையன் என்பனவாதி, இந்நாட்டு அரசர் பெயர் பலவும்
அறிகின்றோம்.

6. விறன்மிண்டர்

     இவர் அவதரித்த மலைநாட்டுச் செங்குன்றூரில் தில்லையிற்போலவே
மூவாயிரம் என்ற எண்பெற்ற அந்தணர்கள் வசித்து வந்தனர் என்று
முன்னரே குறிப்பிட்டோம். மேலே இயற்பகை நாயனார் பெயர் குறித்த
திருப்புறம்பயக் கல்வெட்டில் இந்நாயனார் பெயரையும் மக்கள் இட்டு
வழங்கிய செய்தி கண்டோம். இவர் பெயர் “அணுக்கநம்பி“ என்றதனுடன்
சேர்த்திருப்பதும் குறிக்க.

7. அமர்நீதி நாயனார்


     திருவொற்றியூர்க் கோவிலில் விஜயகம்ப விக்கிரமவர்மன் என்ற
கங்கபல்லவனுடைய 9-வது நூற்றாண்டுக் கல்வெட்டில் சோழநாட்டு இந்தளூர்
நாட்டில் கஞ்சனூரில் இருந்த கஞ்சன் அமர்நீதி என்ற பல்லவதரையன்
நந்தர விளக்கு வைக்கப்பொன் உதவினதாகக் கண்டிருக்கிறது. இது
சோழர்களது ஆதிக்கத்திற்கு முற்பட்டதான மிகப் பழங்காலச் சாசனம்.
இதனால் இந்நாயனார் பெயரை மிகப் பழங்காலத்திலிருந்தே மக்கள் இட்டு
வழங்கினார்கள் என்று தெரிகிறது. அப்பர் சுவாமிகள் காலத்திற்கு முன்னரே
இந்நாயனார் சரிதம் உலகப் பிரசித்தமாய் வழங்கி வந்ததென்று அவர்
தேவாரத்திலிருந்து தெரிகின்றோம்.