பக்கம் எண் :


கண்ணப்பநாயனார்புராணம்1061

 

பெருமையைச் சைவ சமய பரமாசாரியர் நால்வர்களும் துதித்துள்ளார்கள்;
பட்டினத்தடிகள் முதலிய முற்றத்துறந்த ஞான முனிவர்களும் பாராட்டிச்
சிரமேற் கொண்டனர்; சங்கராசாரியார் முதலிய மதாசாரியர்களும் போற்றி
வணங்கினர். பல பெரியோர்களும் காளத்தியப்பரோ டொப்பக்
கண்ணப்பரையும் வணங்கிய சிறப்புடைய தலமாம். இங்கு ஆளுடைய
பிள்ளையார் இறைவனைக் "கும்பிட்ட பயன் காண்பார்போல் மெய்வேடர்
பெருமானைக் கண்டு வீழ்ந்து" வணங்கினார் என்பது பெரிய புராணம்.
சைவத் தெய்வத் திருமுறைகள் யாவும் எடுத்துப் போற்றுகின்ற
கண்ணப்பரோடு பிரிக்கப்படாமல் இணைத்துப் பேசப்படுகின்ற சிறப்பு
இத்தலத்துக்குரியது. இறைவனுடைய ஆணைப்படி அவரது வலப்பக்கத்தில்
கண்ணப்பர் வெளிப்பட எழுந்தளி யிருக்கிறார். அதுவன்றி, மலைமேல்
நான்கு இடங்களில் கண்ணப்பர் சந்நிதிகள் உண்டு. திருஞானசம்பந்த
சுவாமிகள் கண்ணப்ப நாயனாரை நினைத்து இத்தலத்துக் கெழுந்தருளும்
போது வழியில் திருக்காளத்தி மலையைக் கண்டவுடன் பாடியருளிய
பதிகத்தில் திருக்கண்ணப்பரது சரிதத்தைச் சிந்தித்து "வாய்கலச மாகவழி
பாடுசெயும் வேடன் மல ராகுநயனங், காய்கணையி னாலிடந் தீசனடி
கூடுகாளத்திமலையே" என்று பாடித் துதித்தனர் (மதுரைக்கு வரும் வழியில்
மங்கையர்க்கரசியார் குலச்சிறையார் என்றிருவரும் பணியும் திருவாலவாய்
என்று பாடியருளியதுபோல) பின்னர் இங்கிருந்து புறப்பட்டு
எழுந்தருளும்போது நகருக்கு வெளியே வழியிற் புறத்துநின்று "எந்தையா
ரிணையடி யென் மனத்துள்ளவே" என்று அவ்விறைவனைத் தம் மனத்துள்
எழுந்தருளுவித்துத் துதித்துப் போந்தனர்.

     சுவாமி - காளத்தியப்பர் - கணநாதர் - குடுமித்தேவர். தேவியார்
- ஞானப் பூங்கோதையம்மையார். சுவாமி அம்மையார் பெயர்கள் இத்தலத்
திருத்தாண்டகத்துட் காண்க. விநாயகர் - ஐஞ்சந்தி விநாயகர். தலவிருக்கம்
- கல்லால மரம் - வில்வம்; தீர்த்தம் - பொன்முகலி; இது இங்கு
வடக்குநோக்கிச் செல்வதாற் சிறப்புடைய தென்பர். பிரம தீர்த்தம், சரசுவதி
தீர்த்தம், சூரிய தீர்த்தம் முதலியனவும் உண்டு. இதற்குத் திருப்பதிகங்கள் 4.
இரண்டு தல புராணங்களும் பல பிரபந்தங்களும் உண்டு.

     இதனை இரேணுகுண்டா என்ற இருப்புப்பாதைச் சந்தி கடந்து சென்று
காளத்தி என்ற (M.S.M) இருப்புப்பாதை நிலையத்திலிருந்து வடகிழக்கே
கற்சாலையில் 2 நாழிகை யளவில் அடையலாம்.

     (2) உடுப்பூர் - சந்திரகிரி நிலயத்தினின்றும் வடக்கே மூன்று நாழிகை
மலை வழி.


     கற்பனை :- (1) உலகினியல்

     1. நாவலர் புகழ்ந்து போற்று நல்வளம் பெருகி நிற்பது நல்ல நாடாம்.

     2. புலிக்குட்டி, யானைக்கன்று முதலிய இளவிலங்குகளுடன் ஆடும்
வீரமுடையார்கள் மலைவாணர்களது சிறுவர்கள். அவர்தம் சிறுமியர்
அன்புடனணையும் பெட்டை மான்களுடன் ஆடுவர். சிறுவர் சிறுமியர்
களின் ஆடல் வகைகளும், கலைப் பயிற்சிகளும் வெவ்வேறியல் பினையுடையன. இருவர்க்கும் ஒரே பயிற்சி தருதல் இயற்கைக்கு
மாறுபட்டது.

     3. ஒரு மக்கட் கூட்டத்தாரின் வாழ்க்கைத்திறன், அவர்
பெரும்பான்மை வழங்கும் சொற்களாலறியப்படும். கொல், ஏறி, குத்து என்று
ஆர்க்கும் ஒசை மிகுவது வேடரின் வாழ்க்கை இயல்பு காட்டுவதாம்.

     4. வன்றொழில் மறவர் அச்சமும் அருளும் என்றும் தம்பால்
அடைவில்லாதவர்.

     5. முருகப்பெருமான் தம்மை யியல்பின் வழிபட்டோர்க்கு மக்கட்
பேற்றையும் பிற எல்லா நலன்களையும் ஈந்தருளுவர்.

     6. வனவேடர்களிற் றாயும் தந்தையும் அவர்தம் குழவிகளும் கரிய
நிறமுடையவர். இவர்களிற் றாய்தந்தையர் மகவை ஈன்றெடுத்து ஏந்திமகிழ்தல்