பக்கம் எண் :


1062 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     "பான்மதியுவரியீன்றால்" எனவும், "கருவரை காள மேக மேந்திய"
தெனவும் காணுமியல்புடையது.

     7. குழவிகளிற் காணும் குறிகள் அவற்றின் பிற்றை வாழ்வின் பெருமை
சிறுமைகளைக் காட்டும்.

     8. பருவந்தோறும் உரிய தெய்வங்களுக்குப் பெருமடை கொடுத்தலும்,
காப்பணிதல், ஐயவிப்புகையூட்டுதல் முதலியவை செய்தலும் குழவிகட்கு வரும்
தீங்குகளைப் போக்குவனவாம்.

     9. வில்வித்தை முதலிய கலைகளின் பயிற்சி, நன்னாளிலே, தெய்வந்
தொழுது விழாக்கொண்டாடி, நல்லாசிரியன்பாற் றொடங்கத்தக்கது.

     10. எந்தக் கலைப்பயிற்சியும் இடையில் விடப்படாமல் முற்றக்கற்றற்
குரியது.

     11. உலகியற் கலைகள் முற்றக்கற்றலுக்குப் பதினாறு வயது ஏற்ற
எல்லையாம்.

     12. உடலைப்பற்றியகலைத் தொழில்களின் முயற்சி மூப்பு
வரக்குறைந்துவிடும்.

     13. மிருகங்கள் மீதூர்ந்து வந்து பயிருக்கும் உயிருக்கும் கேடு
செய்யாத வண்ணம் திங்கள் முறை வேட்டைசெய்து அவற்றை அளவில்
நிறுத்துவது மலைவாணர் மரபுக்குரிய வழக்கு.

     14. தன் கீழ் வாழும் குடிகள் இனிதுண்டு தீங்கின்றி யிருக்கச்
செய்தல் செங்கோலரசின் இன்றியமையாப் பெருங்கடமை.

     15. மரபு வழிவழி வரும் அரசுரிமையேயாயினும், அது குடி
மக்களின் அங்கீகாரத்தையும் விருப்பத்தையும் பற்றி நிற்பது உண்மை
யரசாங்கத்தியல்பு.

     16. அரச குடும்பத்தாருக்கும் குடிகட்கும் நன்மை செய்தற்காகத் தேவ
பூசை செய்துவரப் படித்தரம் வைத்துத், தேவராட்டியை நியமித்தலும்,
அந்நெறி வழிவழி வரச்செய்தலும் மலைவாணர்களுட் பழைய வழக்கம்.

     17. கன்னி வேட்டை தொடங்குமுன் வனதெய்வங்கள் மகிழக்
காடுபலி பூட்டுதல் வனவேடர்களின் வழக்கம்.

     18. மலைவேடர்களுள் அரசுரிமை தந்தைக்குப்பின் மகனுக்கு வழிவழி
வருவதாயினும் மூப்படைந்த தந்தை தன் மகனுக்குத் தானே மரபுரிமை தந்து,
பட்டம் சூட்டுதலும் வழக்கு.

     19. புலித்தோலிருக்கையில் அரசன் தன்னுடன் ஒரு சேர மகனை
வைத்து " நமது மரபுரிமையை இனி நீ தாங்குவாய்" என்று சொல்லி உடை
தோலும் சுரிகையும் கையிற் கொடுத்தல் மலை வேடர்க்குள் அரசபட்டம்
சூடும் முறை.

     20. உச்சிவேளையை ஒரு நல்ல வேளையாகக் கொண்டு ஒழுகுதல்
வேடர் மரபு. திண்ணனார் விற் பிடித்ததும் (689) அவர் முதலிற்
காளத்திமலை யேறினதும் (750), இறுதியில் முதல்வனை யணைய
மலையேறியதும் இவ்வேளையாம்.

     21. வனவேடர் திங்கள் முறை வேட்டைக்குப் பலருங்கூடி உரியபடி
தம்மை அலங்கரித்துக்கொண்டு, வில்லும் அம்புகளும்கொண்டு, பறைகள்
முழக்கி, வேட்டை நாய்களுடன் பார்வை மிருகங்களையும் கொண்டு, போதல்
மரபு.

     22. கொலையே புரியும் வேட்டையிலும் மலைவேடர்கள் கையாளும்
அற நீதிகள் பலவுண்டு. விலங்குகளின் பின்புறமிருந்து அம்பு எய்யாது
முன்னிருந்தே எய்தல் வேட்டையின் ஒர் அறமாம். அவர்களுள்
வீரராயுள்ளோர் யானை, சிங்கம், புலி முதலிய பெரு விலங்குகளை
வேட்டையாடுவர். அற்பப் பிராணிகளை எதிர்த்துக் கொல்லார். யானைக்
கன்றுகள், ஏனை விலங்கினங்களின் இளமை, கருவுடைய பெட்டைகள்
இவற்றை வேட்டையாடி அலைத்தல் செய்யார். ஓடி நின்ற பகை
விலங்கினைத் தூரத்தினின்று அம்பு எய்து கொல்லாது பக்கத்தில் நெருங்கிச்
சுரிகையாற் றுணித்தல் அவர்களுள் வீரர் செயல்.

     (2) அன்பினியல்

     23. ஆவியினினியவர் சிவபெருமான். அவரிடத்திலே அன்பு
செலுத்துவதே யின்பம் பயக்கும், ஏனைய விடத்துச் செலுத்தப்படுபவை
எல்லாம் துன்பமாய் முடியும்.