24.
கேட்ட மாத்திரத்தில் அன்பு பெருகி நிலையழிதல் தலையன்பாம்.
"முன்னமவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி
யவனிருக்கும் வண்ணங்
கேட்டாள்; பின்னையவனுடைய வாரூர் கோட்டாள்;
பெயர்த்துமவனுக்கே
பிச்சியானாள்" என்றபடி, இங்குத் திண்ணனார், "இந்தச் சேணுயர்
திருக்காளத்தி மலைமிசை யெழுந்து செவ்வே, கோணமில் குடுமித்தேவர்
இருப்பர் கும்பிடலாம்" என்று அவர் நாமமும், இருக்கும் வண்ணமும் ஊரும்
கேட்டவுடன் அவ்விடத்தே அணைபவர் தம்மேற் பாரம் போவது போலும்
உளது என வசமிழந்து தலையன்பு மீக்கூர்ந்தனர்.
25.
பல பிறவிகளிற் செய்து சேர்த்த தவங்களும், பயன் குறியாது
செய்த சிவ புண்ணியங்களும் ஆகிய இவற்றின் மிகுதிப்பாட்டாற்
கிவபெருமானிடத்துப் பத்தி விளைவதாம். திண்ணப்பனார், முற்பிறவியில்
அருச்சுனனாயிருந்து தவஞ் செய்து பெற்ற வரத்தினால் திருக்காளத்தியைக்
கண்டவுடனே பற்றிக்கொண்டு பேறடைந்தனர்.
26.
சிவன்பாற் சென்றடைபவர்கள் உண்மையிலே தத்துவங்களாகிய படி
களையே கடந்து அணைபவராவர்.
27.
நாயகன் நாயகி பேரைக் கேட்டவுடன் வசமழிதல்
தலையன்புடையார் தன்மை. கண்டபோது வசமிழத்தல் இடையன்புக்கும்,
கூடியபோது அவசப்படுதல் கடையன்புக்கும் இலக்கணமென்பர். ஆகவே
கேட்டலும் வசமிழக்கும் தலையன்புடையார்க்கும் நாயகனைக் காணலும்
கூடுதலும் உண்டாயினபோது அளவு கடந்து அன்பு மிகப் பெருகும். இது
இங்கே நாயகனுடைய பெயரும் வண்ணமும் ஊரும் கேட்டு அவர்க்கே
பிச்சராகிய திண்ணனார் சென்று அவரைக் கண்டதும்
அன்பின் வேகம்
மேற்செல்ல மோகம் மிக்கு ஒடிச்சென்று தழுவினதாலும், மோந்து உயிர்த்து
நெடிதுபோது நின்று திருமேனி யெங்கும் புளகம் பொங்கவும் கண்ணீர்
அருவிபோலப் பாயவும் இருந்ததனாலும் உணரப்படும்.
28.
அன்புடையார் செய்கை எவையேயாயினும் அவை அன்பு செய்யப்
பட்டார்க்கு உவகையே விளைக்கும்; அநுசிதத்தையும் உசிதமேயாக்கும்.
"குறையாத உவகைக் கண்ணீ, ராறாக வானந்தத் தடியார் செய்த வனாசாரம்
பொறுத் தருளியவர் மேலென்றும், சீறாத பெருமான்" (திருமாற்போது -
திருத்தாண்டகம் - 5) என்ற அப்பர்சுவாமிகள் திருவாக்கும், "அவனுடைய
செயலெல்லாம் நமக்கினிய வாமென்று" இறைவன் உணர்த்தியருளியதும் காண்க.
29.
அன்பின் விளைந்த முதிர்ச்சியிலே, அன்பு செய்வாரும் அன்பு
செய்யப்பட்டாரும் பிறிவறியாது ஒன்றாந்தன்மை பெறுவர். சிவனிடத்து
முதிரும் அன்பு சிவமாய் விளைந்து முடிவிலா இன்பமாகிய சிவத்துவத்தை
விளங்கச்செய்யும். "புணர்ச்சியு ளாயிழை மேலன்பு போல, வுணர்ச்சியு
ளாங்கே யொடுங்கவல்லார்க்கும், குணர்ச்சி யிலாது குலாவி யுலாவி,
யணைத்தலு மின்ப மதுவிதுவாமே", "அன்பே சிவமாவது" என்பன
திருமந்திரம்.
30.
சிவனிடத் தன்புமிகுந்து முதிர்ச்சி யுற்றார்க்கு ஏனை உலக
அனுபவங்கள் தோன்றா. சிவானுபவமும் அதற்காவனவும் மட்டுமே
தோற்றப்படும்.
31.
அன்பு செய்வார் தம்மால் அன்பு செய்யப்பட்டார்க்கு இனியவையே
தமக்கு இனியவையாகவும், அவர் துன்பம் தமது துன்பமாகவும்
கொண்டொழுகுவர்; தமக்கென்று வேறு செயலும் வேண்டார்; வேறு இன்ப
துன்பங்களு மிவர்க்கில்லை.
32.
அன்பின் முதிர்ச்சியுடையாரது. சொற்செயல்கள் உன்மத்தர் செயல்
போல உலகம் காணத்தக்கனவா யிருக்கும். "பித்தனென்றெனை யுலகவர்
பகர்வதோர் காரணமிதுகேளீர்", "பித்திது வெனப்பிறர் நகைக்கவரு நாலாஞ்,
சத்திபதிய" முதலியவை காண்க. "தேவுமால் கொண்டா னிந்தத் திண்ணன்"
என வேடர்கள் திண்ணனாரைக் கண்டதும் காண்க.
33.
மெய்யினின்று வேறெவற்றையும் உட்கொள்ளாத அன்புக்குச் சிவன்
வெளிப்படுவன். "கரவி லாதபே ரன்பினுக் கெளிவரும் குரவன்" என்றது
காண்க.
|