34. அரிய தவஞ்செய்தும்
மலையும் காடும் சேர்ந்தும் தேவர்களாலும்
முனிவர்களாலும் காணுதற்கரிய சிவனை ஆராவன்பினில் ஆர்வம்பெருகும்
நிலையில் காணலாகும்.
35.
ஐம்புலனடக்கியாண்ட முனிவர்பாற், காணத்தக்க பெருஞ்சோதி
விளங்கித் தோன்றும்.
36.
யாமஞ்சென்று இரவு சுருங்கிய வைகறைப் பொழுதினைப் புட்கள்
அறிந்து சிலம்பும்; அந்தப் புலர்காலையில் எழுந்து தெய்வவழிபாடும்
அதற்குரியனவும் செய்தல் வேண்டும்.
37.
இறைவனுக்கு உகந்த பூசைமுறைகளை அவர்தாமே வகுத்த
ஆகமங்கள் எடுத்து இயம்பும்.
38.
இறைவன் உரு - அருவுரு என்றும் திருமேனி கொண்டெழுந்
தருளிய திருமுன்னர்ச் சிந்தை நியமத்தோடு செல்லுதல் வேண்டும்.
39.
"சிவபெருமானே தனி முதல்வனாகிய பரமன்" என்று பலமுறையும்
வேதங்கள் துணிந்து முறையிடும்.
40.
எண்ணிறந்த கடவுளருக்கும் இடும் உணவை எரிக்கடவுள்
தன்வாயிலே கொண்டு ஊட்டுவன்.
41.
சிவபெருமானது அருணோக்கத்தால் மாயாமல காரியங்களாகிய
மாயேயம் எனப்படும் உடம்பு முதலியவற்றின் பரிசும், இருவினைகளும், மும்
மலங்களும் அறும். அவ்வாறு அறப்பெற்றவர்கள் பிராரத்தானுபவத்தினிமித்தம்
உடம்போடு வாழ்ந்தாலும் சீவன் முத்தராகி அன்புபிழம்பாகித் திரிவார்.
உலகைப் பாரார். உலகின் வழிவாரார்.
42.
பக்குவப்பட்ட அடியார்களுக்குக் கனாவில் உணர்த்துவது
இறைவன் செய்யும் அருளிப்பாடுகளில் ஒன்றாகும்.
43.
அன்பு அதன் விளைவாகிய புறச்செயல்களாலே அறியப்படுவதாம்.
44.
தீயபுட்களென்ற தீச்சகுனங்கள் உதிரங்காட்டும். அன்பின்
முதிர்ச்சியுடையோர் தாம்காணும் தீச்சகுனங்களின் பலன் தமக்கு
வருமென்றெண்ணாது தம்மால் அன்பு செய்யப்பட்டார்க்கு வரும் தீங்கு
குறித்தன வென்று எண்ணி மனங் கவல்வர்.
45.
அன்பே இன்பம்; அன்பே சிவம். கலப்பில்லாத முடிவில்லாத
இன்பத்திற்கு இருப்பிடம் சிவபெருமானேயாவர். சிவன்பா லன்பு எல்லையற்ற
இன்பத்தைக் காட்டி விளைவிக்கும்.
46.
கண்ணப்ப நாயனார் அன்பின் உயர்ந்த எல்லைக்கு இலக்கியமாய்
விளங்குபவர்.
47.
சிவகோசரியார்க்கும், அவர் மூலம் ஏழையடியார்களாகிய
எம்போலிய உலகர்க்கும் கண்ணப்பரது அன்பின்றிறத்தை இறைவன் காட்டி
யருளினார். அதனைக் காண்பாரார் கண்ணுதலார் காட்டாக்காலே? இதன்
பொருட்டு இறைவன் திருமேனியிற் கண்ணிலுதிரம் பாயக் கண்டது அவரது
பேரருட்டிறமாம்.
48.
கண்ணப்பரது அன்பின்றிறம், அன்பு செய்த அவரும் அன்பு
செய்யப்பட்டு அவரை ஆண்ட காளத்தியாருமே அறியக்கூடியது.
ஏனையோரால் அறிதற்கரியது. "கண்ணப்ப னொப்பதோர் அன்பு" என்ற
திருவாசகமும், அதற்குக் "கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றதனால்"
என்று உரை செய்த திருக்களிற்றுப்படியாரும் சிந்திக்கத்தக்கன.
49.
திருஞானசம்பந்த சுவாமிகள் புண்ணியப்பதினாறாண்டிற் றிருப்பெரு
மணத்தில் ஞானத்திருமணத்திற் சிவபெருமானிடம் புக்கு ஒன்றி உடனானார்.
கண்ணப்ப நாயனாரும் அவ்வாறே எண்ணிரண்டாண்டின் செவ்வியிற் றிருக்
காளத்திநாதரை அணைந்து மீளாநெறியில் அவரது வலத்தே நின்றருளினர்.
இருவரும் முருகப்பெருமான் றிருவருள்பதிந்த பெரியார்கள் என்பது
சிந்திக்கத்தக்கது.
கண்ணப்ப
நாயனார் புராணம் முற்றும்
|